தேன் உடலுக்கு பலவிதங்களில் ஆரோக்கியத்தை அளிக்கிறது. அதன் நன்மைகள் ஒவ்வொன்றும், கேட்பவரை, வியக்கவைக்கும் தன்மை படைத்தவை. இருப்பினும் சர்க்கரைக்குப் பதிலான தேனை எடுத்துக்கொள்வோம் என்ற எண்ணத்தில் தேனை அதிகளவில் எடுத்துக்கொண்டால், சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தேனில் உடலுக்குத் தேவையான ஆன்டி- ஆக்சிடண்ட்டுகள் (antioxidants) மற்றும் சில மினரல்கள் உள்ளன. ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் மருந்தாகவும் மருந்துகள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக வெல்லம், தேன் போன்ற இயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துகிறோம். குறிப்பாக நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் சர்க்கரைக்கு பதிலாக தேன் எடுத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால் தேனும் ஆபத்து தான் என்று எச்சரிக்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
நீரழிவு நோய்
தேனை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது அவற்றில் உள்ள அதிக அளவிலான ஃப்ரக்டோஸ் தேன் உடல் எடையை அதிகரிப்பது, அழற்சி, ரத்த சர்க்கரை அளவு அதிகமாவது போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
உடல் பருமன்
குழந்தைகள் எடுத்துக்கொள்ளும் தேன் உடல் பருமனுக்கு வழி வகுக்கும். ஏனெனில் தேன் அதிக அளவு கலோரிகளை உடையது. உதாரணத்துக்கு, ஒரு டேபிள்ஸ்பூன் தேனில் (21 கிராம்) கிட்டதட்ட 64 கலோரிகள் இருக்கின்றன.
அதனால் தினசரி உணவில் தேன் மட்டுமே 60 கலோரிக்கும் மேல் இருந்தால் மற்ற உணவுகளின் கலோரிகளும் சேர்ந்து அதிகப்படியான கொழுப்பை ஏற்படுத்தும். இது நாளடைவில் உடல் பருமனை உண்டாக்கும்.
தேன் வேண்டாமே
பொதுவாக எடையை குறைக்க நினைப்பவர்கள் வெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்து குடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.ஆனால் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் ஒரு சிட்டிகை உப்பு மட்டும் சேர்த்துக் குடித்தாலே நல்ல பலன் கிடைக்கும். தேனை தவிர்ப்பது நல்லது.
அழற்சி ஏற்படுத்தும்
தேன் சேர்க்கப்படும் மற்ற உணவுகளின் வழியாக, அந்த தேன் சூடாக்கப்படும்போதும், பதப்படுத்தும் போதும் நமக்கு அழற்சியை ஏற்படுத்துகின்றன.குறிப்பாக, சரும அழற்சி அதிகம் உண்டாகிறது. சருமத்தில் ஏற்படும் தடிப்பு, முகத்தில் வீக்கம், குமட்டல், வாந்தி போன்ற அழற்சி பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதிகமாகத் தேன் எடுத்துக் கொள்பவர்களுக்கு குடல் அழற்சி பிரச்சினையும் ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.
குழந்தைக்கு
கைக்குழந்தைகள் வளர ஆரம்பிக்கும்போது நன்றாகப் பேச்சு வர வேண்டும் என்று சொல்லி நாக்கில் தேனைத் தொட்டுத் தொட்டு வைப்பார்கள். அப்படி வைப்பது முற்றிலும் தவறு. அப்படி செய்வதால் குழந்தைகளுக்கு பாக்டீரிய அழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு.வெள்ளை சர்க்கரையை விட தேன் ஒருவகையில் சிறந்த மாற்றாக இருந்தாலும், அதிலும் சர்க்கரை (ஃப்ரக்டோஸ்) இருக்கத்தான் செய்கிறது. அதனால் மிக்க குறைவான அளவிலேயே தேனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
டயேரியா
தேனில் அதிக அளவில் ஃப்ரக்டோஸ் அடங்கியுள்ளது. இது உடலில் முழுமையற்ற ஃப்ரக்டோஸ் (fructose) உறிஞ்சுவதற்கு வழிவகுக்கும்.
இதனால் நிறைய பேருக்கு தேன் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். ஆனால் நாம் அதற்கு மாறாக டயேரியா போனால் அதை கட்டுப்படுத்த தேன் கொடுக்கிறோம். அது மிகவும் ஆபத்தானது.
பற்சிதைவு
தேனில் சர்க்கரை அடங்கியுள்ளது. அதோடு பிசுபிசுப்புத் தன்மையும் கொண்டது. சாப்பிடும்போது பற்களிலும் பற்களுக்கு இடையேயும் ஆங்காங்கே ஒட்டிக் கொண்டிருக்கும். அதனால் தேன் சாப்பிட்டதும் வாய் கொப்பளிக்க வேண்டும். இல்லையென்றால் பற்களின் இடுக்குகளில் ஒட்டியிருக்கும் தேன் வாயில் பாக்டீரியா பெருக்கத்துக்கு வழிவகுக்கும். இதனால் பற்சிதைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
மேலும் படிக்க...
Share your comments