நம்மில் அனைவருக்கும் மழை என்றால் பிடிக்கும். மழை பெய்யும் பொழுது எழும் மண்வாசனையை ரசிக்க எவரும் தவறுவதில்லை. இவற்றை எல்லாம் தவிர நமக்கு மழை பற்றி என்ன தெரியும்? நம் முன்னோர்களின் ஆழமான புரிதலும், மழை பொலிவு பற்றிய அவர்களின் கணிப்பு, ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என அனைத்தையும் எவ்வித தகவல் தொழில்நுட்ப துணை இன்றி கணித்தார்கள். எவ்வாறு அவர்களுக்கு சாத்தியமானது? எதை வைத்து கணக்கிட்டார்கள்?
முதலில் நாம் மழையின் மொழியை புரிந்து கொள்வோம். தமிழில் மட்டுமே மழை பெய்திறனின் அடிப்படையில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.
தூறல் – பசும்புல் மட்டுமே நனைவது,விரைவில் உலர்ந்துவிடும்.
சாரல் – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.
மழை – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.
பெருமழை – நீர்நிலைகள் நிரம்பும்.
அடைமழை – ஐப்பசியில் பெய்வது.
கனமழை – கார்த்திகையில் பெய்வது.
மழையை கணக்கீடும் முறை
பண்டைய தமிழர்களின் முக்கிய தொழில் வேளாண்மை. நீர் ஆதாரங்கள் பல இருந்தாலும் மழை பொழிவை வைத்து உழவிற்கு தயாரானார்கள் நம் முன்னோர்கள். மழை பொழிவை கணக்கிட ஆட்டுக்கல்லை பயன் படுத்தினார்கள். மாவு அரைப்பதற்கு மட்டும் உரல் பயன்படவில்லை. பண்டைய காலத்தில் அதுதான் நமது மழைமானி. நேராக பெய்தால் தான் மழை. ஆட்டுக்கல் குழியில் நீர் நிரம்பினால்தால் மழை பெய்ந்ததாக கூறப்படும். இல்லையேல் அது தூறல், சாரல் என்றாகி விடும். எல்லா வீடுகளின் முற்றத்திலும் ஆட்டுக்கல் இருக்கும். முன்னிரவில் மழை பெய்திருந்தால் ஆட்டுக்கல் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.
மழைப் பொழிவினை "செவி" அல்லது "பதினு" என்று முறையில் கணக்கிட்டார்கள். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவிற்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்று கூறினார்கள். ஆக எத்தனை "பதினு" மழை பெய்திருக்கிறது என தெரிந்து கொண்டு முதல் உழவுக்கு தயாராவார்கள் நம் முன்னோர்கள்.
வழக்காடலில் இருந்த மழை பற்றிய தகவல்கள்
- உரல் குழியின் விட்டம் 0.5 மி.மீ குறைவாக இருந்தால் அது தூறல்.
- விட்டம் 0.5 மி.மீ மேல் இருந்தால் அது மழை.
- ஒரு உழவு மழை என்பது சுமார் 2.5 மி.மீ.
- வாசத்தண்ணி மழை என்பது 10 மிமீ.
- அரைக்கலப்பை மழை என்பது 12 மிமீ
- 20 உழவு மழை பெய்தால் கிணறுகள் நிரம்பும்.
- 4-6 மி.மீ மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.
ஓர் உழவு மழை
உரல் குழி மழை நீரால் நிரம்பி இருந்தால் அது உழவு மழை ஆகும். அதாவது பெய்து முடித்த மழையானது உழவு செய்து விதைக்கப் போதுமானதாகம் என்று பொருள். ஏர் கலப்பையை கொண்டு இலகுவாக மண்ணில் ஓர் அடி ஆழத்துக்கு உழவு செய்யலாம். நிலத்தை உழும் போது ஏர்க்கால் இறங்கும் அளவு பூமி நனைந்திருந்தால் அதுதான் உழவு மழை.
மழையின் அளவைப் பொறுத்து ஈருழவோ, ஐந்து உழவோ, பத்து உழவோ என கணக்கிடுவார்கள். ஐந்து உழவிற்கு மேல் மழை பெய்தால் நதிகளில் நீர் கரை புரண்டு நகரும். படிப்பறிவு இல்லாமல் நாம் பாட்டனார்கள் தெரிந்து வைத்திருந்த அனுபவ அறிவு. பழமையான விவசாய முறையும் இதுதான்.. இதன் மூலம் தான் உலகிற்கே உணவளித்தார்கள்...
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments