உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாட வேண்டி இருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
மாம்பழம்
முக்கனிகளில் முதன்மையானது. பழங்களின் அரசன். மாம்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம். வைட்டமின் ‘ஏ’ குறைவால் பார்வைக்கோளாறு, மலைக்கண் நோய் ஏற்படும். இப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ 2743 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் ‘பி’, ‘சி’ மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருட்களும் உள்ளன. மாம்பழத்தில் மார்பகம், ரத்தப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நம் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட இது உதவுகிறது.
ஆரஞ்சுப்பழம் (சுத்த தமிழ்ப்பெயர்: சாத்துக்கொடி, தோடம்பழம், நாரங்கை,கமலாப்பழம்)
ஆரஞ்சுப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ‘ஏ’ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும். மற்ற சிட்ரஸ் பழங்களைப்போல் இதிலும் வைட்டமின் சி நிறைவாக உள்ளது. ஒரு நாள் தேவையில் 90 சதவிகித வைட்டமின் சி-யை இந்தப் பழம் தருகிறது. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்கள் இணைந்து சருமத்தைப் பொலிவுறச் செய்கிறது.
பப்பாளிப்பழம்
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. குறைந்த விலையில் கிடைக்கும். வீடுகளிலும் எளிதாக வளர்க்கக்கூடியது. பப்பாளிப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ 666 மைக்ரோகிராம் உள்ளது. மேலும் வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம்.
நெல்லிக்கனி
நெல்லிக்கனியில் வைட்டமின் ‘சி’ 600 மில்லி கிராம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களுடன் வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’ சிறிதளவு உள்ளன. எனவே இந்த நெல்லிக்கனி உடலுக்கு உரம் தரும், பசியைத் தூண்டும், சிறுநீரைப் பெருக்கும். வைட்டமின் ‘சி’ குறைவினால் ஈறுகளில் ரத்தக்கசிவு மற்றும் ஸ்கர்வி நோய் ஏற்படும்.
கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் வைட்டமின் ‘சி’ 212 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின்கள் பி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும், பற்களுக்கு நல்ல உறுதி தரும்.
சாத்துக்குடி
சாத்துக்குடியில் வைட்டமின் ‘சி’ 45 மில்லிகிராம் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. வைட்டமின் ‘சி’ குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படும்.
கருப்பு திராட்சை (சுத்த தமிழ்ப்பெயர்: கருப்பு கொடி முந்திரி)
கருப்பு திராட்சையில் வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’ மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்களும் உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. இப்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.
பச்சை திராட்சை (சுத்த தமிழ்ப்பெயர்: பச்சை கொடி முந்திரி)
பச்சை திராட்சையில் வைட்டமின் ‘சி’, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்கள் உள்ளன. அதோடு நார்ச்சத்து 2.9 கிராம் உள்ளது. இப்பழச்சாற்றை சாப்பிட தாகம் தணியும், நாக்கு வறட்சி நீங்கும்.
சப்போட்டா
சப்போட்டாவில் மாவுச்சத்து, 21.4 கிராம், இரும்புச்சத்து 2 மில்லிகிராம் உள்ளது. வைட்டமின் ‘ஏ’, ‘பி’ மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்கள் சிறிதளவு உள்ளன. இதில் சர்க்கரை மிக எளிய வடிவத்தில் இருப்பதால், சாப்பிட்ட உடனேயே உடலுக்கு ஆற்றலைத் தரும். இப்பழத்தை சாப்பிடுவதால் ரத்தசோகையைப் போக்கலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் (116 கலோரிகள்) அதிகமாக உள்ளது. தவிர வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’ உள்ளன. இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருட்களும் இதில் உள்ளன. வாழைப்பழங்களில் பூவன் பழம் மலச்சிக்கலைப் போக்கவல்லது, நேந்திரன் பழம் ரத்தசோகையைப் போக்கும், மலைவாழைப்பழம் ரத்த விருத்தி செய்யும்.
ஆப்பிள் (சுத்த தமிழ்ப்பெயர்: அரத்திப்பழம், குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்)
ஆப்பிள் பழத்தில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருட்கள் சிறிதளவு உள்ளன. தசை வளர்ச்சிக்கும், பற்களின் உறுதித் தன்மைக்கும் இப்பழம் உதவும்.
தர்பூசணி
தர்பூசணியில் இரும்புச்சத்து 7.9 கிராம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி, சி சிறிதளவு உள்ளன. வயிறு, மார்பகம், ப்ராஸ்டேட், நுரையீரல், கணையப் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. இதில் உள்ள லைகோபீன் (Lycopene) என்ற வேதிப்பொருள் சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. இதில் உள்ள சிட்ருலைன் (Citrulline) என்ற வேதிப்பொருள் உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. நீர்ச்சுருக்கைப் போக்கும், கோடையில் தாகத்தை தணிக்கும்.
சீத்தாப்பழம்
சீத்தாப்பழத்தில் பொட்டாசியம் 340 மில்லிகிராம், நார்ப்பொருள் 3.1 கிராம் உள்ளது. இது தவிர கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் வைட்டமின்கள் ‘பி’, ‘சி’ -யும் உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச்சிக்கல் ஏற்படும், பொட்டாசியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும். மேற்கண்ட நோய்களைத் தீர்க்க இப்பழம் உதவுகிறது .
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’, ‘பி’, ‘சி’ உள்ளன. நார்ச்சத்து 0.5 கிராம், கால்சியம் 20 மில்லிகிராம், மாவுப்பொருள் 10.8 கிராம் உள்ளது. இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.
மாதுளம்பழம்
மாதுளம்பழத்தில் பாஸ்பரஸ் 70 மில்லிகிராம் உள்ளது. கால்சியம், இரும்பு ஆகிய தாதுப்பொருட்களும், வைட்டமின்கள் ‘பி’, ‘சி’ சிறிதளவும் உள்ளது. கால்சியம் உடலில் சேர்வதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது. ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த மருந்தாகும்.
Share your comments