வெங்காய தாளில் விட்டமின் கே மிக அதிகளவும், விட்டமின் சி மற்றும் ஏ அதிகளவும் உள்ளன.
மேலும் இதில் விட்டமின்கள் பி1(தயாமின்), பி2(ரிபோஃப்ளோவின்), பி3(நியாசின்), பி5(பான்டோதெனிக் அமிலம்), பி6(பைரிடாக்ஸின்), பி9(ஃபோலேட்டுக்கள்) ஆகியவையும் உள்ளன.
இதில் தாதுஉப்புக்களான கால்சியம், செம்புச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செலீனியம், துத்தநாகம் ஆகியவையும் காணப்படுகின்றன.
இதில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, நார்ச்சத்து பீட்டா கரோடீன்கள், லுடீன் ஸீஸாக்தைன் ஆகியவையும் இருக்கின்றன.
எலும்புகளின் நலத்திற்கு
வெங்காய தாளில் உள்ள விட்டமின் கே-வானது எலும்புகளில் உள்ள கால்சியத்தை பராமரிக்க உதவதோடு எலும்புகளின் அடர்த்தியையும் பாதுகாக்கிறது.
எலும்புக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் விட்டமின் கே நிறைந்த வெங்காய தாளினை உண்ணுவதால் எலும்புப் பாதிப்புகள் சரி செய்யப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே விட்டமின் வெங்காய தாளினை உண்டு எலும்புகளின் நலத்தினைப் பாதுகாக்கலாம்.
கண்களின் பாதுகாப்பிற்கு
வெங்காய தாளில் உள்ள விட்டமின் ஏ-வானது ராடாப்சின் என்ற புரத உருவாக்கத்திற்கு உதவுகிறது. ராடாப்சினானது கண்கள் ஒளியை அதிகம் உட்கொள்ள உதவுகிறது.
இது மாலைக்கண் நோயினை நீக்கி பார்வைத் திறனை கூர்மையாக்குகிறது. கண்புரை உள்ளிட்ட கண் பிரச்சினைகளிலிருந்து இது பாதுகாப்பு அளிக்கிறது.
இரத்தத்தை உறையச் செய்தல்
வெங்காய தாளில் காணப்படும் விட்டமின் கே இரத்த உறைதலுக்கு மிகவும் அவசியமானது ஆகும். காயங்கள் உண்டாகும்போது இரத்தம் உறைதல் என்பது மிகவும் அவசியமானது.
இந்நிகழ்வால் அதிகளவு இரத்தப்போக்கு நிகழ்வது தடுக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்டுகள் மற்றும் பிளாஸ்மாக்களால் இந்நிகழ்வு உண்டாகிறது.
விட்டமின் கே குறைபாடு மூக்கு மற்றும் ஈறுகளில் அதிகளவு இரத்தப்போக்கினை அடிக்கடி உண்டாக்கிவிடும். இரத்த உறைதலில் குறைபாடு உள்ளவர்கள் வெங்காய தாளினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆரோக்கிய உடல்எடை இழப்பிற்கு
வெங்காய தாளானது குறைந்தளவு கலோரியையும், அதிகளவு ஊட்டச்சத்தினையும் கொண்டுள்ளது. ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்தில் 10 சதவீதத்தை இது பூர்த்தி செய்கிறது.
இதனால் இதனை உண்ணும்போது நீண்ட நேரம் வயிறுனை நிரம்பிய உணர்வு ஏற்படுவதால் பசி உண்டாவது தடுக்கப்படுகிறது.
மேலும் இதில் உள்ள குறிப்பிட்ட புரதமானது கொழுப்புச்சத்தினை சிதைக்க உதவுகிறது. எனவே இதனை குறைந்த கலோரிகள் கொண்ட காய்கறிகள், பழங்களுடன் சேர்த்து உண்ணும்போது ஆரோக்கியமான உடல் இழப்பினைப் பெறலாம்.
நோய் எதிர்ப்பாற்றலைப் பெற
வெங்காய தாளில் உள்ள பைட்டோ நியூட்ரியன்களான ப்ளவனாய்டுகள், குவர்செடின் மற்றும் அன்டோசைனின் போன்றவை உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகின்றன.
மேலும் இதில் காணப்படும் செலீனியமானது இரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து உடலுக்குள் நோய்கிருமிகளின் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனவே வெங்காய தாளினை உட்கொண்டு நோய் எதிர்ப்பாற்றலைப் பெறலாம்.
இதய நலத்திற்கு
வெங்காய தாளில் உள்ள விட்டமின்கள் ஏ மற்றும் சி வளர்ச்சிதை மாற்றத்தால் உண்டாகும் ப்ரீரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தடுத்து இதயநலத்தை மேம்படுத்துகிறது.
மேலும் இதில் உள்ள விட்டமின் கே-வானது இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடைசெய்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
இதனை அடிக்கடி உண்ணும் போது டிரைசைக்கிளாய்டுகள், கெட்டகொழுப்புகள், கொலஸ்ரால்களின் செயல்பாடுகள் தடைசெய்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும் இதில் உள்ள அலிசின், சல்பர் மற்றும் செலீனியம் போன்றவை இதய நலத்தை மேம்படுத்துகின்றன.
புற்றுநோயினைத் தடுக்க
வெங்காய தாளானது புற்றுநோய் வளர்ச்சியினைத் தடுக்கிறது. இதில் உள்ள அலிசின் பொருளானது புற்றுநோயினை தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது.
குடல், வயிறு, தலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் புற்றுநோய் உருவாக்கத்தை இது தடைசெய்கிறது.
சருமப் பாதுகாப்பிற்கு
வெங்காய தாளில் உள்ள அலிசின் பொருளானது சரும மேம்பாட்டிற்கு உதவுகிறது. இப்பொருளானது இளம் வயதிலேயே சருமச்சுருக்கம் ஏற்படுவதைத் தடைசெய்கிறது.
மேலும் சருமப்பொலிவையும் இப்பொருள் உண்டாக்குகிறது. இதில் உள்ள விட்டமின் சி-யானது ப்ரீரேடிக்கல்களின் செயல்பாடுகளிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
வெங்காய தாளினை வாங்கும் முறை
வெங்காய தாளினை வாங்கும்போது ஒரே அளவிலான, சீரான நிறத்துடன், விறைப்பாகவும், கனமாகவும் உள்ளவற்றை வாங்க வேண்டும்.
அதிக பருமன், சீரற்ற நிறம் மற்றும் உலர் இலைகள் கொண்டவற்றை தவிர்க்க வேண்டும்.
இதனை வாங்கி அலசி ஈரப்பதம் இல்லாமல் குளிர்பதனப் பெட்டியில் ஒருவாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
வெங்காய தாளினைப் பயன்படுத்தும்போது மேற்புறம் உள்ள இரண்டு அடுக்குகளை நீக்கி அலசி உலர வைத்து உபயோகிக்கலாம்.
வெங்காய தாள் வாடியது போல் இருந்தால் தண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் புதிதுபோல் இருக்கும்.
வெங்காய தாளானது சூப்புகள், சாலட்டுகள், பான்கேக்குகள், பாஸ்தா, நூடுல்ஸ் தயார் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
Share your comments