மனித வாழ்க்கையில் நோய் என்பது தவிர்க்க இயலாத ஒன்று. எனினும் உயிர்க்குடிக்கும் நோய்கள் என்று அறியப்படும், நோய்களில் ஒன்று நெஞ்சு வலி.
நெஞ்சில் வலி வந்தால், அது வாயுவினால் வரும் வலியாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் ஒரு விதம். அதே வேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்கள் மற்றொரு விதம்.
சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்தவும் முடியாது. அதே வேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை.
காரணம் என்ன?
நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை. ஒன்று, ஆஞ்சைனா (Angina pectoris) எனும் இதய வலி. மற்றொன்று, மாரடைப்பு. இவற்றை எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடாது.
ஆஞ்சைனாவால் ஏற்படுகிற நெஞ்சு வலியானது இதயத் தசையில் உருவாகி நெஞ்சில் உணரப்படுகிறது.இதயத் திசுக்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களில் கொழுப்புப் படிந்து, அதன் விட்டத்தைக் குறுகச் செய்வதுதான் இந்த வலிக்கு அடிப்படைக் காரணம்.
முதுமை காரணமாக தமனிக் குழாய் தடித்துப் போனாலும், இந்த நிலைமை ஏற்படுவதுண்டு. இதயத்தின் தமனிக் குழாய், உள்அளவில் சுருங்கும்போது, இதயத் திசுக்களுக்குச் செல்லக்கூடிய ரத்தத்தின் அளவு குறைகிறது.நாம் ஓய்வாக இருக்கும்போது இதயத் திசுக்களுக்குத் தேவையான ரத்தம் கிடைத்துவிடும்.ஆனால், உழைப்பு அதிகரிக்கும்போது இதயத் தசைகளின் தேவையும் அதிகரிக்கிறது.
குறுகிவிட்ட இதயத் தமனியால் இந்தத் தேவையை ஈடுசெய்ய இயலாது.இதனால் இதயத் திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு கிடைக்காமல் அழியத் தொடங்கும். அந்த நேரத்தில் இதயத் தசைகள் எழுப்புகிற கூக்குரலே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது.
இதய வலி - அறிகுறிகள் (Symptoms)
மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும்.
நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால் அல்லது கிளிசரில் டிரைநைட்ரேட் (Glyceryl trinitrate) மாத்திரையை நாக்கின் அடியில் வைத்தால் நெஞ்சு வலி குறைந்துவிடும்.
மாரடைப்பு - அறிகுறிகள்
சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்கும் படிப்படியாகப் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத் திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு (Myocardial infarction).
அவ்வாறு ஆஞ்சைனாவால் ஏற்படுகிற நெஞ்சு வலி அடிக்கடி ஏற்பட நேர்த்தால், வீட்டில் சில கைவைத்திய வழிமுறைகைக் கையாள வேண்டியது அவசியம்.
பாதாம் பருப்பு (Badam)
சாப்பிட்ட உடனே நெஞ்சு வலிப்பது போன்றோ, அல்லது வாயுத்தொல்லையால் ஏற்படும் வலியாக உணர்ந்தால், ஒரு கைநிறைய பாதாம் பருப்பை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். அல்லது ஒரு டம்ளர் பாதம் பால் குடிக்க வேண்டும்.
பாதாம்பருப்பில் உள்ள ஆல்கலைன் நெஞ்சு எரிச்சலை சரிசெய்து வாயுக்களைக் கரைக்கும் தன்மை கொண்டவை.
ஆப்பிள் சைடர் வினிகர் (Apple cider vinega)
ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கலாம். அப்போது உடல் வேர்த்து தசைகளின் அழற்சி நீங்கும்.
செம்பருத்தி தேநீர் (Hybiscus tea)
ஒரு டம்பளர் சூடான மற்றும் நல்ல செம்பருத்தி தேனீரைக் குடிக்கவேண்டும். அப்போது உடனடியாக, நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணம் சரியாகி இதயம் ஆரோக்கியமானதாக மாறுகிறது.
செம்பருத்தி, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து, கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது என ஆய்வுகள் உறுதிப்படுகின்றன. செம்பருத்தி பெரும்பாலானோரின் உடலுக்கு பொருந்தும்.
ஐஸ் பேக் (Ice Pack)
வலி ஏற்படும் இடத்தில், ஐஸ் தண்ணீரில் முக்கி எடுக்கப்பட்ட துண்டு, அல்லது ஐஸ் பேக்கைக் (cold pack)கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்.
இவற்றில் ஏதேனும் ஒருக் கைப்பக்குவத்தை செய்த பிறகும் வலி கட்டுப்படவில்லை என்றால், உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
அதேநேரத்தில் நெஞ்சுவலி வராமல் தடுக்க பின்வரும் உணவு வகைகளைக் கடைப்பிடிக்கலாம்.
உணவுக்கட்டுப்பாடு (Food Control)
அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு மற்றும் முழுத் தானியங்கள், நார்ச்சத்து மிகுந்த பயறு வகைகள், ஓட்ஸ், துவரை, பட்டாணி, அவித்த கொண்டைக்கடலை, வெண்ணெய் நீக்கப்பட்ட பால், மோர், கீரைகள், பச்சைக் காய்கறிகள், ஆகியவற்றை தவறாமல் சாப்பிடுங்கள். தக்காளி, அவரை, வெண்டைக்காய், பூண்டு, முருங்கை, புடலங்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், முட்டைக்கோஸ், காளிஃபிளவர், புரோக்கோலி ஆகியவை இதயம் காக்கின்ற உணவுகள்.
அசைவ உணவு (Non-Veg)
அசைவம் சாப்பிடுபவர்கள் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியைச் சாப்பிடலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்குப் பாதுகாப்பு தரும் ஒரு சத்துப்பொருள். இது மீனில் உள்ளது. மீனையும் கோழி இறைச்சியையும் எண்ணெயில் பொரிக்காமல் வேகவைத்து குழம்பாக்கிச் சாப்பிடுவது நல்லது.
பழங்கள் (Fruits)
பழங்களில் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், கொய்யா, மாதுளை, அன்னாசி நல்லது. காபிக்குப் பதிலாக க்ரீன் டீ (Green Tea) குடிக்கலாம். இந்த உணவுகளில் கொழுப்பு குறைவு. கலோரிகளும் அதிகரிக்காது. ஆகவே, இவற்றை இதயத்துக்கு இதம் தரும் உணவுகள் என்கிறோம்.
தவிர்க்க வேண்டியவை (To Avoid)
பாமாயில், தேங்காய் எண்ணெய், வனஸ்பதி , முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, தயிர், வெண்ணெய், பாலாடை மற்றும் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகள், தேங்காய், முந்திரிப் பருப்பு இவற்றுடன் அப்பளம், வடை, பஜ்ஜி, போண்டா, பூரி, சிப்ஸ், சமோசா என எண்ணெயில் ஊறிய, வறுத்த, பொரித்த உணவுகளை ஓரங்கட்டுங்கள்.
செயற்கை இனிப்புகள், நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், விரைவு உணவுகள் ஆகியவற்றை ஒதுக்கிவிடுங்கள். எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கிப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். மதுவுக்கும் குட்பை சொல்லுங்கள். 40 வயதுக்குப் பிறகு உப்பு, இனிப்பு, கொழுப்பு இந்த மூன்றையும் குறைத்துக் கொள்வது மிக நல்லது.
நல்ல சமையல் எண்ணெய் (Good oil)
ஒரு சிறந்த சமையல் எண்ணெயில் செறிவுற்ற கொழுப்பு அமிலம்(Saturated fatty acid), ஒற்றைச் செறிவற்ற கொழுப்பு அமிலம் (MUFA, பலவகை செறிவற்ற கொழுப்பு அமிலம் (PUFA) ஆகிய மூன்றும் 1 : 1 : 1 என்ற அளவில்தான் இருக்க வேண்டும். இந்த விகிதம் சந்தையில் கிடைக்கும் எந்த எண்ணெய்யிலும் இல்லை. எனவே சமைக்க சூரியகாந்தி எண்ணெய், வறுப்பதற்குக் கடலை எண்ணெய், தாளிக்க நல்லெண்ணெய் என்று வாரம் ஒருமுறை சுழற்சி முறையில் பயன்படுத்தினால் கொழுப்பு அமிலங்கள் மிகாது. இதயத்துக்கும் நல்லது.
ஒரே எண்ணெயைப் பயன்படுத்த விரும்பினால் சூரியகாந்தி எண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். சாதாரணமானவர்களுக்கு நாளொன்றுக்கு 30 மி.லி. எண்ணெய் தேவை. இதய நோயுள்ளவர்களுக்கு இந்த அளவு நாளொன்றுக்கு 15 மி.லி.க்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க...
மூலிகைகளின் அரசி துளசியின் மருத்துவ குணங்கள் தெரியுமா உங்களுக்கு
சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் அதிசயம் நிகழ்த்தும் பப்பாளி
Share your comments