துணியால் ஆன முககவசத்தை சுழற்சி முறையில் பயன்படுத்தும்போது, அவற்றை அக்கறையுடன் பராமரிப்பது மிக மிக முக்கியம். அவ்வாறு இல்லாவிட்டால், கொரோனாத் தொற்று உறுதியாகியிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் (Corona virus)
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள மக்களை முடக்கி போட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரானப் போராட்டம் தொடர்கிறது. வைரஸிடம் இருந்து மக்களை தற்காத்துக்கொள்ளும் வகையில் சமூக இடைவெளி, தனித்து இருத்தல், முககவசம் அணிதல், அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவுதல் போன்றவற்றை அரசு அறிவுறுத்தி வருகிறது. அதில் முகக்கவசம் தான் கொரோனாவில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் கேடயமாக விளங்கி வருகிறது.
முககவசம் அணியாமல் வெளியில் சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதில் இருந்து அதன் முக்கியத்துவத்தை நாம் அறிய முடியும். இதன்காரணமாக மக்கள் முககவசம் அணியும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ரூ.5 முதல் ரூ.35 வரை (From Rs.5 to Rs.35)
துணியால் ஆன முகக்கவசம் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு ரோட்டோர கடைகளில் கூட விற்பனைக்கு வந்து விட்டது. ரூ.5 முதல் ரூ.35 வரை துணியால் ஆன முககவசம் கிடைக்கிறது. ஏற்கனவே பலர் கைக்குட்டை, துண்டு ஆகியவற்றை முககவசமாகப் பயன்படுத்தி வந்தனர். அவர்களும் தற்போது முகக்கவசத்துக்கு மாறி உள்ளனர். இந்த முககவசம் பெயரளவுக்கு அணியும் வகையில் இருக்கக் கூடாது. அதை முறையாக பராமரித்து அணிய வேண்டும். அப்போது தான் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடமுடியும்.
எனவே பொதுமக்கள் முககவசத்தை எப்படி உபயோகிப்பது என்பது குறித்து திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளர் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:-
வைரஸ் நுழையாது (The virus does not enter)
பொதுவாக ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு விதமான முகக்கவசம் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் 3 அடுக்கு முகக்கவசம் அல்லது துணியால் ஆன முகக்கவசங்களை அணிந்தால் போதுமானது. ஒவன் துணியால் ஆன 3 அடுக்கு முகக்கவசம் மற்றும் என்.95 முகக்கவசம் வைரஸ் நுழையாமல் தடுக்கும்.
3 அடுக்கு முகக்கவசத்தை ஒருமுறை பயன்படுத்த முடியும். மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், மக்களிடம் அதிக தொடர்பில் இருப்பவர்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். 6 மணி முதல் அதிகபட்சமாக 8 மணி நேரம் இந்த முககவசத்தை பயன்படுத்த முடியும்.
அதன்பிறகு அவற்றை அழித்துவிட வேண்டும். என்.95 முககவசம் என்பது விலை அதிகம். கொரோனா நோயாளிகளைக் கையாளக்கூடிய மருத்துவக்குழுவினர் இந்த முகக்கவசத்தையேப் பயன்படுத்துகிறார்கள்.
3 துணி முகக்கவசம் (3 cloth mask)
பொதுமக்கள் துணியால் ஆன முகக்கவசத்தை தற்போது அணிந்து வருகிறார்கள். இவர்களுக்குத் தினமும் முகக்கவசம் வாங்குவது என்பது சிரமம். இதற்காக மீண்டும் துவைத்து பயன்படுத்தக்கூடிய துணி முகக்கவசங்களை அணிந்து வருகிறார்கள்.
3 துணி முகக்கவசங்களை ஒருவர் வைத்துக்கொண்டால் அவற்றை துவைத்து சுழற்சிமுறையில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருநாள் பயன்படுத்திய முகக்கவசத்தை துவைத்து அதை 3 நாட்கள் கழித்து மீண்டும் பயன்படுத்தலாம்.
கவனமுடன் கையாளுதல் (Careful handling)
முகக்கவசத்தை முன்பகுதியில் கைகளால் தொடக்கூடாது. இது நோய் கிருமிகள் நமக்குள் எளிதில் பரவும் வாய்ப்பை ஏற்படுத்தும். முகக்கவசத்தைக் கழற்றும்போது கயிற்றை பிடித்து மட்டுமே கழற்ற வேண்டும்.
துணி முகக்கவசம் என்பது தற்காத்துக்கொள்வதற்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். முககவசத்துடன் தான் வெளியில் சுற்றித்திரிய வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. இதனால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசத்தைக்கவனமுடன் கையாள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
Share your comments