இன்று தேசிய பால் தினம், இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை (Father of White Revolution in India) என்று அழைக்கப்படும் டாக்டர் வர்கீஸ் குரியனை கௌரவிக்கும் வகையில், அவரது பிறந்தநாளான இன்று ஆண்டுதோறும் தேசிய பால் தினமாக கொண்டாடப்படுகிறது.
தேசிய பால் தினம்
நம் அன்றாட வாழ்க்கையில் பாலுக்கு எப்போதும் ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்தியா தற்போது பால் உற்பத்தியில் உலக நாடுகளுக்கு மத்தியில் முன்னிலை வகித்து வருகிறது. பால் மற்றும் பால் பொருட்களுக்கான வளர்ச்சியில் இந்தியா இத்தகைய நிலையை எட்ட அடித்தளமாக இருந்தவர் டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்கள். டாக்டர் வர்கீஸ் குரியனை கௌவுரவிக்கும் வகையில், அவரது பிறந்தநாளான நவம்பர் 26ம் தேதி ஆண்டுதோறும் தேசிய பால் தினமாக (National Milk day) அனுசரிக்கப்படுகிறது.
வர்கீஸ் குரியன் வரலாறு
கேரளாவில் 1921-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி பிறந்த வர்கீஸ் குரியன், சென்னை லயோலாக் கல்லூரியில் 1940-ம் ஆண்டு இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன் பின் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் பட்டமும் 1946-ம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா எஃகு தொழில்நுட்ப நிலையத்தில் பட்டமேற்படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து, அரசு உதவித்தொகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக் கழகத்தில் படித்து, இயந்திரவியல் பொறியியலில் எம்.எஸ் பட்டத்தை சிறப்புநிலையில் பெற்றார்.
கூட்டுறவு பால் உற்பத்தித் திட்டம்
குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பின் (GCMMF) தலைவராக வர்கீஸ் இருந்துள்ளார். அமுல் என்ற வணிகப்பெயருடன் விற்கப்படும் உணவுப்பொருட்களை நிர்வகிக்கும் ஓர் உயர்நிலை கூட்டுறவு இயக்கமே குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பாகும். இந்த கூட்டுறவு அமைப்பு மூலம், அமுல் (ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட்) என்ற வணிகப்பெயருடன், பால் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அமுல் மாதிரித் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தி, கூட்டுறவு பால் உற்பத்தித் திட்டத்தை மாபெரும் தேசிய திட்டமாகவும் வெற்றிபெற வைத்தார் வர்கீஸ் குரியன்.
பால் உற்பத்தியில் முன்னணி
மேலும், கூட்டுறவு பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தை நவீனப்படுத்த உதவிய குரியன், இந்தியாவின் வெண்மை புரட்சியை (White Revolution) வழி நடத்தினார். இதன் மூலம் உலகிலேயே கூடுதலாக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை முன்னேற்றினார். பால் வளத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக இந்திய அரசு பல விருதுகளை வழங்கி அவரை கௌரவித்தது. 1965ல் பத்மஸ்ரீ, 1966ல் பத்மபூஷன், 1986ல் கிருஷி ரத்னா, 1989ல் உலக உணவு விருது, 1999ல் பத்மவிபூஷன் விருதுகளை பெற்றுள்ளார். இவர் 2012-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தனது 90வது வயதில் மறைந்தார்.
இப்போது, இந்தியா மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக மாறியுள்ளது, ஆனால் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிலைமை மிகவும் வித்தியாசமானது. இருப்பினும், வர்கீஸ் குரியன் இந்தியாவின் வெள்ளை புரட்சியில் பணியாற்றத் தொடங்கிய பின்னர் இந்த நிலை மாறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
பயிர் கடன் பெறுவது எப்படி? பயிர் கடன் தரும் வங்கிகள் என்னென்ன? முழு விவரம் உள்ளே!!
தமிழக அரசின் "உழவர் - அலுவலர் தொடர்புத் திட்டம்" - சிறப்பு அம்சங்கள் என்னென்ன? முழு விவரம் உள்ளே!!
PM Kisan FPO Yojana : விவசாய குழுக்களுக்கு 15 லட்சம் வரை கடனுதவி வழங்கும் திட்டம் குறித்து தெரியுமா உங்களுக்கு?
Share your comments