உணவுத் தொழிலைப் பொருத்தவரை, சுவையில் மட்டும் எவ்வித சமசரமும் இன்றி, அளிக்க முன்வந்துவிட்டால் போதும். வெற்றி நிச்சயம் என்பார்கள். ஆனால், எவ்வளவுதான் விலைவாசி உயர்ந்துவிட்டபோதிலும், மக்களின் நலன்கருதி, 2 ரூபாய்க்கு இட்லியையும், 3 ரூபாய்க்கு தோசையையும் விற்பனை செய்யும் கடைகள் இன்றும் இயங்கத்தான் செய்கின்றன. இவற்றுக்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், ராமநாதபுரம், கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராம கடைகளில் ரூ.2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசையும், சட்னி சாம்பாருடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த தோசை கடைகளில் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை அனைவரும் குறைந்த விலையில் இட்லி, தோசையை ருசித்து சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர்.
கடும் போட்டி
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:- 5-க்கும் மேற்பட்ட தோசை கடைகள் உள்ளன. யார் குறைந்த விலைக்கு இட்லி, தோசை விற்பது என்பதில் போட்டி நிலவுகிறது. ரூ. 2-க்கு இட்லி, ரூ.3-க்கு தோசை சட்னி சாம்பாருடன் விற்பனை செய்யப்படுகிறது. 10 ரூபாயில் வயிறு நிறைகிறது. சிறிய குடும்பத்திற்கு ரூ.25 போதும். காலை உணவை நிறைவு செய்யலாம்.
குறைந்த செலவில் உணவு
இதேபோன்று கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் ரூ.4-க்கு ஊத்தப்பம், ரூ.5-க்கு சற்று பெரிய அளவில் உள்ள தோசைக்கு சாம்பார் மற்றும் தக்காளி, தேங்காய் என 2 வகை சட்னியுடன் விற்கப்படுகிறது.
மதுரை, சென்னை, திருச்சி கோவை, வெளியூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஒரு இட்லி ரூ.10-க்கும், ஒரு தோசை ரூ.40-க்கும் மேலாக உணவகங்களில் விற்கும் நிலையில் ஏ.புனவாசல், கோவிலாங்குளம் கிராமத்தில் குறைந்த விலையில் இட்லி,தோசை விற்பனை செய்யப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது
பொதுநலன்
விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையிலும் கிராமத்தில் விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் பாதிக்கக் கூடும் என்ற நோக்கில் குறைந்த லாபத்தில் இக்கடைகள் இயங்கி வருவது எ்ஙகளுக்கு பெரிய உதவியாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேராசை இல்லை
கூட்டத்தைப் பார்த்ததுடன், உணவுப் பொருட்களின் தரத்தைக் குறைத்து, விலையை உயர்த்திக் கொள்ளை லாபம் பார்க்கும் பெரியஹோட்டல் முதலாளிகளுக்கு மத்தியில், இந்த இட்லிக்கடைகளின் சேவை பாராட்டுதலக்கு உரியவை.
மேலும் படிக்க...
Share your comments