உடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அதிகப்படியான தண்ணீர் மற்றும் பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்கிறது.
இந்த சிறுநீரகங்கள் தான் உடலில் பல்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், எலும்புகள் வலிமையுடன் இருப்பதற்கும் உதவி புரிகிறது.
தற்போதைய தலைமுறையினர் பலரையும் அமைதியாக தாக்கும் ஒன்று தான் சிறுநீரக பிரச்சனைகளான சிறுநீரக கற்கள், சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக புற்றுநோய் போன்றவை.
இத்தகைய பிரச்சனைகளைப் போக்க நாம் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும்.
அதுமட்டுமின்றி, அதிகப்படியான தண்ணீர் குடிப்பது, எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வது, இரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பது மற்றும் அன்றாட உடற்பயிற்சியின் மூலம் மேம்படுத்தலாம்.
சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்கறிகள்
கேரட்
நாள்பட்ட சிறுநீரக நோய்களைத் தவிர்க்க, உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதோடு, அதைக் குறைக்க உதவும் காய்கறியான கேரட்டுகளை அதிகம் சாப்பிட வேண்டும். மேலும் கேரட் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்து, சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
பூண்டு
பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சிறுநீரகங்களினுள் உள்ள காயங்களைக் குறைக்க உதவும். மேலும் பூண்டு உடலின் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவும்.
காலிஃப்ளவர்
காலிஃப்ளவரை சிறுநீரகங்களின் நண்பன் எனலாம். ஏனெனில் இது சிறுநீரகங்களை சுத்தப்படுத்த உதவும் ஓர் உணவுப் பொருள். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது நீரிழிவு மற்றும் இதய நோய்களை எதிர்த்துப் போராட உதவும்.
முட்டைக்கோஸ்
பொட்டாசியம் குறைபாட்டின் காரணமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முட்டைக்கோஸ் மிகவும் சிறப்பான ஓர் காய்கறி. இந்த காய்கறியில் பொட்டாசியம், வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராடவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
வெங்காயம்
வெங்காயத்தை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், அவை சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும். மேலும் இது இரத்தத்தின் பிசுபிசுப்புத்தன்மையை குறைக்கும். வெங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கனிமச்சத்துக்கள் படிவதைத் தடுத்து, சிறுநீரக கற்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
முள்ளங்கி
முள்ளங்கியில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பது, அதிக மருத்துவ குணங்களைக் கொண்டது. மேலும் இதில் கலோரிகள் மிகவும் குறைவு. முள்ளங்கியை உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரகங்களில் தேங்கியுள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரக நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பூசணி விதைகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரகங்களின் ஆரோக்கியம் மேலோங்கும் மற்றும் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பும் குறையும்.
பீன்ஸ்
சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் பீன்ஸ் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. இதற்கு பீன்ஸில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, குறைவான கொலஸ்ட்ரால் தான் காரணம். இதில் நார்ச்சதது அதிகம் இருப்பதால், இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். கொலஸ்ட்ரால் குறைவு என்பதால் இதய ஆரோக்கியம் அதிகரிக்கும்.
Share your comments