மனிதக்குலத்தை துவம்சம் செய்யும் நோய்களில் மாரடைப்பும் ஒன்று. முன்பெல்லாம் வயதானவர்களை அதிகம் தாக்கிய மாரடைப்பு தற்போது வயது வித்தியாசமின்றி, அனைவரையும் பாதிக்கிறது. எனவே இதய நோய் வராமல் தற்காத்துக்கொள்வது மிகமிக முக்கியம். அதற்கு சிறந்த 5 வழிகள் உள்ளன. இதனைக் கடைப்பிடித்தால், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
1. பரிசோதனை
உயர் ரத்த அழுத்தம் மற்றும் எல்.டி.எல் கொழுப்பு இவை இரண்டும் இதய நோய்க்கு வித்திடக்கூடியவை. எனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது.
இந்த பரிசோதனையானது இதயத்திற்கு ஆபத்து விளைவிக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதய நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பதை மதிப்பிடும் விதமாக அமைந்திருக்கும்.
ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் ஒவ்வொன்றும் இதய நோயை உருவாக்கும் அபாயத்தை 25 சதவீதம் குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதய நோய்க்கான பரிசோதனை செய்வது, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்து சாப்பிடுவது நோய் ஆபத்தை குறைப்பதற்கான சிறந்த வழியாகும். நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனை கட்டுப்படுத்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் செயல்படுவது அவசியம்.
2. புகைப்பழக்கம்
அனுதினப் புகைப்பழக்கம் ரத்த நாளங்களை சேதப்படுத்தும். இதய நோய்க்கும் வழிவகுக்கும். புகைப்பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். ஆஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், புகைப்பிடிப்பவர்கள் தங்கள் ஆயுளில், 10 வருடங்களை இழப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
3. ஊட்டச்சத்து அவசியம்
மோசமான உணவு பழக்கம், உடல் பருமன் ஆகியவை இதய நோய்க்கான முக்கிய காரணங்கள். இதய நலனுக்கு ஆரோக்கியமான உணவு முக்கியமானது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் உட்கொள்ளும் அளவை அதிகரிப்பது போன்ற சிறிய மாற்றங்கள் பெரிய நன்மைகளை ஏற்படுத்தும்.
4. உப்பு
தினசரி அதிகபட்சமாக 5 கிராம் உப்புதான் சாப்பிடும் உணவில் கலந்திருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. எனவே உணவில் உப்பைக் குறைப்பது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
5. உடல் இயக்கம்
உடற்பயிற்சி உள்ளிட்ட உடல் இயக்க செயல்பாடுகளில் தினமும் ஈடுபடுவது இடுப்புக்கு நல்லது. இதய செயல்பாட்டையும் மேம்படுத்தும். தினமும் மேற்கொள்ளும் வழக்கமான உடற்பயிற்சி மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி மட்டுமின்றி எந்தவிதமான உடல் செயல்பாடுகளிலும் ஈடுபடலாம்.
மேலும் படிக்க...
நெல் மூட்டைகளை அடகு வைத்து கடன்- சாமர்த்தியமாகச் சுருட்டிய விவசாயி!
அன்னை வைஷ்ணவ தேவி உருவம் பதித்த நாணயம் - லட்சாதிபதி ஆக வாய்ப்பு!
Share your comments