அதிகளவில் உணவு சாப்பிடுபவர்கள் உடல் எடை அதிகரித்து பெரும் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். இதனைத்தான் கண்டதைத் திண்பவன் குண்டனாவான் என்றார்கள். ஆனால், இயந்திர மயமாகிவிட்ட இன்றையக் காலத்தில், காலை உணவைக் கட் செய்வதாலேயே சிலரது உடல் எடைக் கூடிவிடுகிறது.
உடலின் வளர்சிதை மாற்ற அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அதற்கு ஏற்றவாறு, அவர்களுக்கு கலோரிகள் தேவைப்படும். உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள், குறைவான கலோரியும், அதிகமான சத்துக்களும் உள்ள உணவைச் சாப்பிட வேண்டும். எடையைக் குறைப்பதில் ஆர்வம் காட்டும் பலர், அதற்காக பல வழிகளை கையாள்கின்றனர். தவறான வழிமுறைகளால் ஏற்படும் பின்விளைவுகள் மூலம் சிரமப்படுகின்றனர்.
உணவுப் பழக்கத்தின் மூலம் எடையைக் குறைப்பதே ஆரோக்கியமான முறை. அந்த உணவுகளின் பட்டியல் இதோ!
எலுமிச்சை
காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், அரை மூடி எலுமிச்சம் பழத்தின் சாறைக் கலந்து பருகலாம். பிளாக் டீ, மஞ்சள் கொண்டு தயாரிக்கப்படும் தேநீர் போன்றவற்றை பருகலாம்.
முழுதானிய உணவுகள்
காலை உணவாக ஆவியில் வேகவைத்த உணவுகள், முழுதானிய உணவுகள், வேகவைத்த முட்டை, பருப்பு வகைகள் சாப்பிடலாம். காலை - பகல் இடைவேளை நேரத்தில் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவது நல்லது.
மதிய உணவின்போது எண்ணெய் அதிகம் சேர்க்காமல் சமைத்த மீன், கோழிக்கறி, வேகவைத்த முட்டை, பருப்பு வகைகள், பன்னீர், வேகவைத்த காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றை அதிகமாகவும், அரிசி சாதத்தை குறைவாகவும் சாப்பிடலாம்.
மதிய உணவில் சிறிது தயிர் சேர்த்துக்கொள்வது நல்லது.
மாலையில் புரதச்சத்துள்ள பூசணி விதை, வேர்க்கடலை, பாதாம் போன்றவற்றை சாப்பிடலாம். வேகவைத்த சுண்டல் வகைகளும் இந்த நேரத்தில் சாப்பிடுவதற்கு ஏற்றவை.
இரவில் ஆவியில் வேகவைத்த, எளிதில் செரிமானம் ஆகக்கூடிய இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம். இரவு உணவை காலதாமதமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இரவு 10 மணிக்குள் தூங்கிவிட்டு, மறுநாள் காலை 5 மணிக்குள் எழுந்து விடுதல் மிக அவசியம்.
கடைப்பிடிக்க வேண்டியவை
-
நொறுக்குத் தீனிகளைத் தவிர்ப்பது நல்லது.
-
ஒவ்வொரு வேளை உணவையும் தவிர்க்காமல் நேரத்தோடு சாப்பிடுவது மிக மிக அவசியம்.
-
காலை உணவை 9 மணிக்கு முன்பாகவும், மதிய உணவை 2 மணிக்கு முன்பாகவும், இரவு உணவை 8 மணிக்கு முன்பாகவும் சாப்பிடுவதைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும்.
-
எனவே எந்த வேளை உணவையும் தவிர்க்காமல் சாப்பிடுவது நன்மை தரும்.
-
20 கிலோ உடல் எடைக்கு, ஒரு லிட்டர் தண்ணீர் வீதம் கணக்கிட்டு ஒரு நாளுக்கு தேவையான தண்ணீர் பருக வேண்டும்.
-
மேலும், பசித்த பின்பு மட்டுமே சாப்பிட வேண்டும்; உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
-
ஆரோக்கியமான உணவு முறையோடு, ஒரு நாளில் 10,000 காலடிகள் (நடைப்பயிற்சி) எடுத்து வைக்க வேண்டும்.
-
அது தவிர்த்து 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்தால், விரைவாக உடல் எடையைக் குறைக்கலாம்.
தகவல்
அனுஷ்யா திருமாறன்
ஊட்டச்சத்து நிபுணர்
மேலும் படிக்க...
புஷ்பா திரைப்படத்திற்கு தாதாசாஹேப் பால்கே விருது!
புழக்கத்தில் போலித் தங்கம்- தரத்தைப் பரிசோதிக்க எளிய வழிகள்!
Share your comments