கேழ்வரகு நல்லதொரு சிறந்த சிறுதானியப் பயிர் ஆகும். இதன் வேறு பெயர்கள் ஆரியம், ராகி மற்றும் கேப்பை. இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும்.
ராகி வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்பமண்டலப் பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, குஜராத், மஹாராஷ்டிரா உத்திரபிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேச மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யப் படுகிறது.
கேழ்வரகின் மருத்துவப் பயன்கள்
ஆரோக்கியமான எலும்புகளைப் பெறுவதற்கு
கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுப்படும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது.
உடல் எடையைக் குறைப்பதற்கு
கேழ்வரகில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் பசி உணர்வைக் குறைக்கிறது, எனவே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் கேழ்வரகு மெதுவாக செரிமானமாவதால், அதிக கலோரிகள் உட்கொள்ளுவதை தடுக்கலாம். அதுமட்டுமின்றி, கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, உணவு சாப்பிடும் போது ஒரு திருப்தி உணர்வைத் தருகிறது. இதனால் உணவு அதிகம் உட்கொள்ளுவதை தடுக்க முடிகிறது.
நீரிழிவு நோயைக் குணப்படுத்த உதவுகிறது
கேழ்வரகில் உள்ள தாவரவகை ரசாயன கலவைகள் செரிமானத்தை குறைக்கின்றன. இது நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதற்கு
கேழ்வரகில் லெசித்தின் மற்றும் மெத்தியோனைன் போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை வெளியேற்றி, கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.
ரத்த சோகையைக் குணப்படுத்த உதவுகிறது
கேழ்வரகில் இயற்கையாகவே இரும்புச்சத்து உள்ளது. இதனால் இதனை அதிகம் உண்பது, ரத்த சோகை நோயைக் குணப்படுத்த உதவுகிறது.
சோர்வைப் போக்க உதவுகிறது
கேழ்வரகு உட்கொள்வது இயற்கையாகவே உடலை ஓய்வு பெறச் செய்யும். மேலும் இது கவலை, மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையைப் போக்க உதவுகிறது. அது மட்டுமின்றி, ஒற்றைத் தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
புரதச்சத்து/அமினோ அமிலங்கள்
உடலின் இயல்பான செயல்பாட்டிலும், சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், அமினோ அமிலங்களுக்கு பெரும் பங்கு உள்ளது மற்றும் உடலில் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்த உதவுகிறது
கேழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா மற்றும் புது தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருத்தல் போன்ற அனைத்து நோய்களும் குணமாகும். இவ்வளவு நோய்களை சரிசெய்யும் கேழ்வரகை, ஆரோக்கிய டானிக் என்றே சொல்லலாம்.
இயற்கை உணவு தானியங்களுடன் இணைந்து வாழ்ந்த மனித சமுதாயம் அன்று நோயற்ற வாழ்க்கை முறையை இனிதே அனுபவித்து வந்தது. ஆனால் இன்றோ எந்திர வாழ்க்கை, நேரமின்மை, பணிச்சுமை, பணத்தை மட்டுமே பரிச்சயமாக பார்க்கும் எண்ணம் போன்ற எண்ணற்ற காரியங்களால் இயற்கை உணவை அறவே மறந்து செயற்கை உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர்.
எனவே நமது பண்டைய வாழ்க்கையை முழுமையாக கடைபிடிக்காவிட்டாலும் இயற்கை தானியங்களை இயன்றளவு நம்முடைய உணவில் சேர்த்துக்கொண்டால் நோயின் தாக்கத்தில் இருந்து சற்றே தப்பித்துக்கொள்வதோடு, உடலுக்கு தேவையான அதீத சக்திகளையும் பெற்றுக் கொண்டு இனிதே வாழலாம்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments