விவசாய மின் இணைப்புகளில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை கணக்கிட, மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது.
இலவச மின்சாரம் (Free electricity)
தமிழக மின் வாரியம், விவசாயத்திற்கும், குடிசை வீடுகளுக்கும் இலவசமாக மின் வினியோகம் செய்கிறது. அவை தவிர்த்த மற்ற வீடுகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் மின் பயன்பாட்டைக் கணக்கிட, மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மீட்டர் (Meters)
மத்திய அரசு, ஒவ்வொரு இணைப்பிலும் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்ற அளவை தெரிந்து கொள்வதற்காக, மீட்டர் பொருத்தாமல் எந்த ஒரு புதிய மின் இணைப்பும் வழங்கக் கூடாது என்று மாநில மின் வாரியங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.மேலும், இதுவரை மீட்டர் இல்லாத இணைப்புகளில் பொருத்துமாறும் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் தற்போது, விவசாயத்திற்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் பணி நடக்கிறது. அந்த இணைப்புகளில் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
விவசாயிகளுக்கு அச்சம் (Fear for farmers)
ஆனால் திடீரென மீட்டர் பொருத்தப்படுவது விவசாயிகளிடையே, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இந்த மீட்டர் பொருத்தப்படுகிறது, இதன் மூலம் இனிவரும் காலங்களில், இலவச மின்சாரத்திற்கு ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா? என்பதுபோன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மின் இழப்பைக் கண்டறிய (To detect power loss)
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: விவசாயத்திற்கு இலவசமாக தொடர்ந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும். கட்டணம் வசூலிக்க மீட்டர் பொருத்தவில்லை. எவ்வளவு மின் பயன்பாடு உள்ளது. மின் இழப்பு ஏற்படுவதை தெரிந்து கொள்ள மீட்டர் பொருத்தப்படுகிறது.
அப்போது தான் அதிக மின் இழப்பு ஏற்படும் இடங்களைத் துல்லியமாக கண்டறிந்து, கூடுதல் மின் வினியோக சாதனங்கள் நிறுவ முடியும். இதனால் மின் இழப்பு, 'ஓவர் லோடு' (Over load) போன்றவை ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
Share your comments