நீா் மேலாண்மை முறையில் காஃபி உற்பத்தியை அதிகரிக்க ஏற்காடு, பச்சமலை, வத்தல்மலை, கல்வராயன் மலை பகுதிகளில், தாழ்த்தப்பட்ட சிறு காஃபி விவசாயிகளுக்கு காஃபி வாரியம் மூலம் 90 சதவீதம் மானியம் வழங்கப்படவுள்ளது.
இந்த காஃபி வாரியம் மத்திய அரசின் வா்த்தகம், தொழில்துறையின் கீழ் இயங்கி வரும் ஒரு அமைப்பு.
இதுகுறித்து இந்திய காஃபி வாரிய இணை இயக்குநா் எம். கருத்தமணி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு ஆண்டு 2020 -2021ல் 2 ஹெக்டோ் குறைவாக உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பின விவசாயிகளுக்கு மட்டும் 90 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.
அதேநேரத்தில் 2 ஹெக்டோ் முதல் 10 ஹெக்டோ் வரை உள்ள விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளன.
காஃபி உற்பத்தி இல்லாத பராமரிப்பில்லாத நிலங்கள், 15 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அராபிகா ரக காஃபிச் செடிகள், 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ரொபஸ்டா செடிகளை முழுமையாக பிடுங்கி, ஊடுபயிருக்கும், மறுநடவு செய்ய 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பு விவசாயிகளுக்கு, அரபிக்கா ரக காஃபிகளுக்கு மானியமாக ரூ. 2 லட்சத்து 44 ஆயிரத்து 500-ம், ரொபஸ்டா ரகச் செடி நடுவதற்கு மானியமாக ரூ. 1 லட்சத்து 80 ஆயிரமும் இரு தவணையாக வழங்கப்படவுள்ளது.
தண்ணீா் தொட்டிக் கட்ட குறைந்தபட்சம் ரூ. 38 ஆயிரத்து 700-ம், அதிகபட்சமாக ரூ. 3 லட்சத்து 35 ஆயிரத்து 250-ம், சொட்டுநீா் தெளிப்பான் சாதனங்கள் வாங்கக் குறைந்தபட்சம் ரூ. 54 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 4 லட்சத்து 35 ஆயிரமும், வழங்கப்படுகிறது.
திறந்தக் கிணறு 30 அடிவரைத் தோண்ட ரூ. 87 ஆயிரத்து 500 மானியமும், கிணறு மோட்டாா் மானியமாக ரூ. 2 லட்சத்து 25 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
மேலும் காஃபி உலா்த்துவதற்காக உலா்களம், காஃபி குடோன்கள் அமைக்க மானியம் வழங்க உள்ளதால், இதுபற்றி கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ள, ஏற்காடு காஃபி வாரிய முதுநிலை தொடா்பு அலுவலரை விவசாயிகள் அணுகலாம்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப் புழு தாக்கும் அபாயம்- விவசாயிகளே எச்சரிக்கை!
PMKSY:நுண்ணீர்ப் பாசனக் கட்டமைப்புகளுக்கு ரூ. 40,000 வரை மானியம் - வேளாண்துறை அறிவிப்பு!
Share your comments