நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பல ஏக்கர் பரப்பிலான தேயிலையில் கொப்பள நோய் தாக்கியுள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீலகிரியின் அடையாளம் (Identity of the Nilgiris)
நீலகிரி மாவட்டத்தின் பச்சை தேயிலை விவசாயம் முக்கிய பங்காற்றி வருகிறது. இதனை நம்பி சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் உள்ளனர்.
மேலும் ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்களும் பயனடைந்து வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாகவும் தேயிலை தோட்டங்களில் உரமிட்டதன் காரணமாக தேயிலை தோட்டங்களில் ஓரளவு மகசூல் ஏற்பட்டுள்ளது.
கொப்பள நோய் (Blister disease)
இந்த நிலையில் தற்சமயம் கடும் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் தேயிலை தோட்டங்களில் கொப்புள நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டங்களில் உள்ள பச்சை தேயிலையை பறிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
மழை பெய்து மகசூல் அதிகரித்து வந்த நிலையில், தற்போது தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பொதுவாக, ஒரு கிலோ தேயிலைக் கொளுந்தில் இருந்து சுமார் 250 கிராம் தேயிலைத் தூள் கிடைக்கும். கொப்பள நோய் தாக்குவதால் தேயிலைக் கொளுந்து கிடைக்காது.
முற்றிய தேயிலையைத் தூளாக மாற்றுவதன் மூலம் உரிய தரம் கிடைக்காது. அத்துடன் நோய் தாக்கிய ஒரு கிலோ கொளுந்தில் இருந்து 170 கிராம் தேயிலைத் தூள் மட்டும் கிடைக்கும்.கொப்பள நோயின் தாக்குதலால், தேயிலையில் 40 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கொப்பள நோயின் தாக்கத்தில் இருந்து தேயிலையை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து, ஊட்டி தோட்டக்கலை சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அறிகுறிகள் (Symptoms)
தேயிலையில் தாக்கும் கொப்பள நோயின் முதல் அறிகுறியாக, முதலில் கண்ணாடி போன்று புள்ளிகள் இலையின் மேல் மட்டத்தில் தோன்ற ஆரம்பிக்கும். பிறகு மூன்று முதல் நான்கு நாட்களில் புள்ளிகளில் பெரிதாக குழி விழ ஆரம்பிக்கும். இலையின் பின்புறத்தில், இவை வெள்ளை நிற கொப்பளம் போன்று காணப்படும். பிறகு இந்த கொப்பளங்கள் கருகியதும் இலையின் தரமும், எடையும் குறையும்.
தடுக்கும் வழிகள் (Ways to prevent)
-
எனவே, இந்நோயின் ஆரம்ப நிலையிலேயே, நிழல் மரங்களின் பக்க கிளைகளை கழித்து வெயில் விழும்படி செய்ய வேண்டும்.
-
தேயிலை தோட்டங்களில் புற்கள் மற்றும் களைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
தேயிலையில் கொப்பள நோயை கட்டுப்படுத்த, பருவநிலையை கருத்தில் கொண்டு ஏழு முதல் 10 நாட்கள் இடைவெளியில், ஏக்கருக்கு 85 மில்லி லிட்டர் "கான்டாப்' உடன், 85 கிராம் "காப்பர் ஆக்ஸி குளோரைடு' சேர்த்து தெளிக்க வேண்டும்.
-
அல்லது "டில்ட்' 50 மில்லி லிட்டர் உடன், 85 கிராம் "காப்பர் ஆக்ஸி குளோரைடு' சேர்த்து தெளிக்க வேண்டும்.
-
இதனால் தேயிலையில் 40 சதவீத மகசூல் இழப்பை தடுக்கலாம்.
மேலும் படிக்க...
இயற்கை விவசாயம் செய்ய 100 பேருக்கு ரூ.60 லட்சம் மானியம்!
நெல்லின் ஈரப்பதத்தை குறைக்க வந்துவிட்டது நவீன இயந்திரம்! தஞ்சையில் செயல்முறை விளக்கத்துடன் பரிசோதனை!
நஞ்சில்லா காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ஒன்றிணைந்த விவசாயிகள்!
Share your comments