இந்தியாவை தாயகமாக கொண்ட காய்கறி ரகம் கத்தரிக்காய். இது வறட்சியை நன்கு தாங்கி வளரக்கூடியது. சுமார் 100 கிராம் எடை கொண்ட கத்தரிக்காயில் புரதச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின்-சி போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன.
கத்தரிக்காய் இரகங்கள்: கோ.1, கோ.2, எம்டியு 1, பிகேஎம் 1, பிஎல்ஆர் 1, கேகேஎம் 1, அண்ணாமலை, கோபிஎச் 1 (வீரிய ஒட்டு இரகம்) அர்கா நவனீத், அர்கா கேசவ், அர்கா நிரி, அர்கா சிரீஸ் மற்றும் அர்கா ஆனந்த்.
பயிரிடும் காலம்
நாள் தோறும் மக்களின் பயன்பாட்டில் அதிகம் உள்ள காய் கத்தரி. இதை டிசம்பர், ஜனவரி மாதத்தில் தொடங்கி மே வரை பயரிடலாம்.
மண்ணின் தன்மை
நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண் கத்தரி பயிரிட ஏற்றதாகும்.
விதை நேர்த்தி
ஒரு ஹெக்டேருக்கு 200 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்ய வேண்டும். டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம் வீதம் கலக்க வேண்டும். அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா ஒவ்வொன்றையும் 100 கிராம் வீதம் கலந்து நிழலில் அரைமணி நேரம் வைக்க வேண்டும்.
இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை, உயரமான பாத்திகளில் 10 செ. மீ இடைவெளியில் அரை அங்குல ஆழத்திற்கு கோடுகள் போட்டு அதில் விதைகளைப் பரவலாகத் தூவவேண்டும். விதைத்த பின்பு மணல் போட்டு மூடி உடனே நீர் பாய்ச்சவேண்டும்.
இடைவெளி, செடி எண்ணிக்கை
பொதுவாக கத்தரி ரகத்தின் தன்மையைப் பொறுத்து இடைவெளி, செடியின் எண்ணிக்கை மாறுபடும். மிதமான வளர்ச்சி உள்ள ரகங்களை 4 அடி அகலமுள்ள மேட்டுப் பாத்தியில் ரெட்டை வரிசை முறையில் 60 x 60 சென்டி மீட்டர் இடைவெளியில் நட வேண்டும். அதிக வளர்ச்சியுள்ள ரகங்களை உயர் பாத்தியில் ஒரு வரிசையில் ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் 45 சென்டி மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை
உரமிடுதல்: எக்டருக்கு
|
தொழு உரம் எக்டருக்கு |
தழை (கிலோ) |
மணி (கிலோ) |
சாம்பல் சத்துக்கள் (கிலோ) |
அடியுரம் |
25 டன்கள் இதனுடன் வேப்பம் பிண்ணாக்கு 200 கிலோ |
50 |
50 |
30 |
நடவின் போது |
2 கிலோ அசோஸ்பைரில்லம் |
- |
- |
- |
மேலுரம் |
- |
50 |
- |
- |
பயிர் |
|
இடவேண்டிய சத்துக்கள் |
இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு |
|
|||
|
|
தழை |
மணி |
சாம்பல் |
10:26:26 |
யூரியா |
|
கத்தரி |
அடியுரம் |
50 |
50 |
30 |
193 |
67 |
|
|
மேலுரம் |
50 |
0 |
0 |
0 |
109 |
|
மேற்படி உரங்களை கத்தரிச் செடியிலிருந்து 10 செ.மீ தள்ளி பட்டையாக மண்ணில் இட்டு கலந்து செடிகளுக்கு மண் அணைத்து விடவேண்டும். செடிகளுக்கு உரமிட்ட பின்பு உடனடியாக நீர் பாய்ச்சவேண்டும்.
நீர் நிர்வாகம்
நடவு செய்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதன் பின்னர் 7 நாட்களுக்கொருமுறை நீர் பாய்ச்சவேண்டும். மழைக் காலங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி
களை நிர்வாகம்: கத்தரி நாற்றுக்களை நடுவதற்கு முன் களைக்கொல்லி இடுதல் அவசியம். களைகள் முளைக்கும் முன் அவற்றைக் கட்டப்படுத்த புளுகுளோரலின் என்னும் களைக் கொல்லியினை 1 லிட்டர் என்ற அளவில் 500 லிட்டர் நீரில் நன்கு கலந்து ஒரே சீராகத் தெளிக்கவேண்டும். இவ்வாறு களைக்கொல்லி தெளித்தவுடன் நீர் பாய்ச்சி நாற்றுக்களை நடவேண்டும். பின்பு மேலுரமிடுவதற்கு முன்பு களைகளை நீக்கவேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகள்: கத்தரியில் ட்ரைக்கோடானால் 2 பிபிஎம் மற்றும் சோடியம் போரேட் அல்லது போராக்ஸ் 35 மில்லி கிராம் இவற்றை ஒருலிட்டர் நீருடன் கலந்து நாற்று நட்ட 15 நாட்கள் கழித்து ஒரு முறையும், பிறகு பூக்கள் தோன்றும் பருவத்திலும் தெளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.
கத்திரியின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான உத்திகள்
பொதுவாக கத்திரி நாடு முழுவதும் அதிகமாக பயிரிடப்படுகிறது. இதன் சாகுபடியில் பூச்சிதாக்குதல், நோய் மற்றும் நூற்புழு தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. சில சமயங்களில் இது குறிப்பிடதக்க இழப்பையும் மகசூலில் ஏற்படுத்துகிறது. சாகுபடியானது அதிகமான ஈரப்பதம் உள்ள இடங்களில் செய்வதாலும் மேலும் அதன் மென்மை தன்மையாலும் இதனை பூச்சிகள் தாக்குகின்றன. பூச்சிகளால் கத்திரிக்கு ஏற்படும் இழப்பு தோராயமாக 35-40%. என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய பூச்சிகள்
ஹட்டா வண்டு
வண்டுகள் வெளிர் காப்பி நிறமும் அதன் நடுவே பல கருப்பு புள்ளிகளுடனும் காணப்படும். புழு மஞ்சள் நிறத்தில் காணப்படும். முட்டைகள் சுருட்டு போன்றும், மஞ்சள் நிறமாகவும், கூட்டாகவும் காணப்படும், புழு மற்றும் வண்டு, இலைகளின் பச்சையத்தை தின்று இலையை நரம்புபோல் ஆக்கும்.
அசுவனி
இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இலையின் சாறை உ றிந்து விடும். இதனால் செடி மஞ்சள் நிறமாக மாறி உருக்குலைந்து காய்ந்து இறந்து விடும். இவை தேன் துளிகளை செடியில் இடுவதால் கரும்பூசணம் படிந்து ஒளிச்சேர்க்கையை பாதிக்கும்.
தண்டு மற்றும் காய் துளைப்பான்
ஆரம்பத்தில் இதனின் புழு தண்டினை துளையிட்டு வளரும் பகுதியை பாதிக்கும். காய்ந்த, தொங்கும் கிளைகளே இதற்கான அறிகுறி. பின்னர் புழு காய்களை துளையிட்டு காய்களை வீணடிக்கும்.
நடவு செய்த 15-20 நாட்களில் கத்தரிச்செடிகளின் நுனித் தண்டுகள் இலைகளுடன் காய்ந்து தலை சாய்ந்து தொங்கி காணப்படும். அவைகளைக் கிள்ளி உள்ளே பார்த்தால் வெள்ளை நிறப் புழு காணப்படும். இவ்வகைப் புழுக்கள், காய்கள் பிஞ்சாக இருந்து வளர்ந்து வரும் சமயத்தில் காய்களைக் குடைந்து சாப்பிட்டு சேதப்படுத்தும்.
இதனைக் கட்டுப்படுத்த பாதிக்கப்ட்ட செடிகளின் நுனித் தண்டினைக் கிள்ளி எறிந்திவிடவேண்டும். பாதிக்கப்பட்ட காய்களைப் பறித்து அழித்துவிட வேண்டும். கார்பரில் 50 சதத் தூளை ஒரு லிட்டருக்கு 2-4 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். காய்களைத் தாக்கும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை எண்டோசல்ஃபான் 2 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது குயினால்பாஸ் 25 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருடன் 2 மில்லி வேப்பெண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் அல்லது வேப்பங்கொட்டைச்சாறு 50 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
சிகப்பு சிலந்தி
புழு, சிறிய மற்றும் பெரிய சிலந்திகள் இலையின் அடிப்புறத்தை உணவாக உட்கொள்ளும். பாதிக்கப்பட்ட இலைகள் கொஞ்சம் கொஞ்சமாக வளைந்து, உதிர்ந்து போகும். இதனைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகத் தூளை லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது டைக்கோபால் 3 மில்லி மருந்தை 1 லிட்டர் நீருடன் கலந்து தெளிக்கவேண்டும்.
வெள்ளை ஈக்கள்
கோடைகாலப்பயிரில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டும் பசை அட்டைப்பொறி எக்டருக்கு 12 வீதம் வைக்கவேண்டும். வேப்பெண்ணெய் 3 மில்லியுடன் 1 லிட்டர் நீர் கலந்து, அதனுடன் டீப்பால் என்ற ஒட்டும் திவரம் 1 மில்லியுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலக்கப்பட்ட கலவையுடன் சேர்த்து தெளிக்கவேண்டும்.
சாம்பல் மூக்கு வண்டு
இவ்வகைப் பூச்சிகள், இலைகளிலுள்ள சாறினை உறிஞ்சுவதால் இலைகள் சக்தியிழந்து, காய்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு கார்போஃபியூரான் 15 கிலோவை செடி நட்ட 15 நாட்களுக்குப் பின்னர் செடிகளின் வேர்ப்பாகத்தில் இடவேண்டும்.
சிற்றிலை நோய் (குருட்டுச்செடி நோய்)
இலைகள் சிறிதாகி இலைத்தண்டு சின்னதாகி கணுக்கிடை தண்டுகள் சிறுத்து, இலைகள் அகலம் குறைந்து, மென்மையாகவும், மஞ்சளாகவும் காணப்படும். செடி புதரை போல் காட்சியளிக்கும். இதில் காய்ப்பு இருக்காது.
சிகிலீரோஷ்யானா கருகல் நோய்
கிளைகள் கீழ்வாட்டமாக முக்கிய தண்டினை நோக்கி வளைந்து வரும். தாக்கம் அதிகமாகும் போது இணைப்புகளில் பூசணம் காணப்படும். கடைசியில் முழு செடியும் வாடிவிடும்.
வேர் முடிச்சி நூற்புழு
வேர் பகுதியில் முடிச்சிகள் காணப்படும். செடி குள்ளமாக காணப்படும். பாதிக்கப்பட்ட நிலத்தில், ஒருசில இடங்களில் மட்டும் செடிகள் அடர்ந்து குள்ளமாக காணப்படும்.
நூற்புழுத் தாக்குதலைத் தடுக்க விதைகளை ட்ரைக்கோடெர்மா விரிடி அல்லது ட்ரைகோடெர்மா ஹர்சியானம் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் பூஞ்சாண விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். மேலும் ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் கார்போஃபியூரான் இடுதல் வேண்டும்.
அறுவடை & மகசூல்
மேற்கண்ட முறைகளை விவசாயிகள் கையாண்டால் 50 முதல் 120 நாள்கள் வரை மகசூல் அறுவடை செய்யலாம். வீரீய ஒட்டு ரகத்தில் ஹெக்டேருக்கு 40 முதல் 50 டன்கள் வரை மகசூல் கிடைக்கும். கத்தரி அறுவடை நாட்கள் ரகத்திற்கேற்ப மாறுபடும்.
மேலும் படிக்க...
துத்தநாக சத்துப் பற்றாக்குறையைப் போக்கும் ஜிங்க் சல்பேட்- விவசாயிகள் கவனத்திற்கு!
Share your comments