விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் அறுவடைக்கு தயாரான 25 ஆயிரம் ஏக்கர் சின்ன வெங்காய பயிர்கள், கனமழையால் நாசமடைந்திருப்பதால், அரசு இழப்பீடு தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வானம் பார்த்த பூமியான காரியாபட்டியில், ஆவியூர், அரசகுளம், குரண்டி, மாங்குளம், சீகநேந்தல், மரைக்குளம், கல்லுப்பட்டி, முடுக்கன்குளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் சின்ன வெங்காய பயிர் பிரதானமாக பயிரிடப்படுகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் தற்போது, புயல் காரணமாக தொடர் கனமழை நீடித்தது.
கண்ணீரில் விவசாயிகள் (Farmers in tears)
இந்த மழை காரணமாக, வெங்காய பயிர்கள் முற்றிலும் அழுகிய நிலையில் இருப்பதால், நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இவர்கள் ஒரு ஏக்கருக்கு இதுவரை சுமார் ரூ.75 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். கனமழை மட்டும் பெய்யாதிருந்தால், ஒரு ஏக்கரில் ரூ.1.50 லட்சம் வரை வெங்காய அறுவடையில் லாபம் பார்த்திருப்பார்கள். லாபம் கிடைக்காவிட்டாலும், தற்போது செலவுத்தொகையையும் சேர்த்து கடும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
நோய்கள் தாக்குதல் (Attack of diseases)
இதனிடையே இப்பகுதியில் கடந்த மூன்றாண்டுகளாகக் கண்டுபிடிக்க முடியாத வகையில், வேர் அழுகல், பயிர்க் காய்ந்து மடிதல் உள்ளிட்ட நோய்களால் பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. பூச்சி, பூஞ்சை மருந்துகள் தெளித்தும், விவசாயிகளால் தங்கள் பயிரை பாதித்த நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆண்டுக்கு ஒருமுறையே சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு நோய் தாக்குதல் ஏற்கனவே பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது புயல் மழை காரணமாக மேலும் இந்த ஆண்டு அறுவடைக்குத் தயாரான நிலையில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
மழையானது, நோயின் தாக்கத்தை மேலும் அதிகரித்தும் பாதிப்பையும் கொடுத்திருக்கிறது. தமிழக அரசு இப்பகுதி விவசாயிகளுக்கான இழப்பீட்டுத்தொகையை நிவாரணமாக வழங்கி விவசாயிகளின் நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டியது தற்போதைய அவசியம்.
பயிர்க்கடன் பெற்று தவிப்பு (Suffering from crop loans)
காரியாபட்டி பகுதி விவசாயிகள் கூறும்போது, பல ஆண்டுகளாக சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகிறோம். பயிர்க்கடன் பெற்று விவசாயம் மேற்கொண்ட நிலையில், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர் பாதிப்புகளால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடந்த ஆண்டு கூட காப்பீடு செய்தும் சின்ன வெங்காய பயிருக்கு இழப்பீடு இதுவரை வழங்கவில்லை.
அதிகாரிகள் இழப்பீடுகளை கணக்கிட்டு நிவாரணம் வழங்கிட வேண்டும். நோய் தாக்குதல் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், அவர்களுக்கு இதுபற்றி புரியாததால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்றனர்.
மேலும் படிக்க...
சமையல் சிலிண்டருக்கு மாற்றாக மாட்டுச்சாணத்தில் இருந்து Biogas - ரூ.12 ஆயிரம் மானியத்துடன்!
விதைப்பண்ணை அமைத்து கூடுதல் லாபம் ஈட்டலாம்- வேளாண்துறை அறிவுறுத்தல்!
Share your comments