உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுவதுடன், எடைக்குறைப்புக்கும் துணை நிற்கும் கரும்பை விவசாயிகள் பக்குவமாக சாகுபடி செய்து லாபம் ஈட்டலாம்.
கரும்பின் பாரம்பரியம்
சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் முதல் முறையாகப் பயிரிடப்பட்டதுதான் இந்த கரும்பு. இந்தியாவில் கி.மு. 500-ம் ஆண்டில்தான் கரும்பு அறிமுகம் செய்யப்பட்டது.
உலகில், 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. அதில் இந்தியா, பிரேசில், சீனா ஆகிய நாடுகள் 50 விழுக்காட்டிற்கும் மேல் கரும்பை உற்பத்தி செய்கின்றன.
இரகங்கள் (Varieties)
கோ க671, கோ க771 & 772 & 773, கோ 419, கோ 6304 உள்ளிட்ட கரும்பின் பல இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவையாகும்.
பருவம் (Season)
முன்பட்டத்திற்கு டிசம்பர் – ஜனவரி மாதங்களையும், நடுப்பட்டத்திற்கு பிப்ரவரி – மார்ச் மாதங்களையும், பின்பட்டத்திற்கு ஏப்ரல் – மே மாதங்களையும், தனிப்பட்டத்திற்கு ஜூன் – ஜூலை மாதங்களையும், தேர்வு செய்து கரும்பை நடவு செய்யலாம்.
மண்
கரும்பு சாகுபடிக்கு வண்டல் மற்றும் மணல் சார்ந்த நிலங்கள் ஏற்றவையாகும்.
நிலம் தயாரித்தல்
ஓராண்டுப் பயிரான கரும்பின் வேர்கள் நன்றாக வளர்ந்து நீர் மற்றும் ஊட்டச் சத்துகளை மண்ணில் இருந்து பெற வேண்டுமானால் வயலில் குறைந்தது 30 செ.மீ ஆழம் வரை மண் மிருதுவாக இருக்க வேண்டும்.
டிராக்டர் மூலம் உழவு செய்வதாக இருந்தால், முதல் உழவை சட்டிக் கலப்பை அல்லது இறக்கை கலப்பை மூலமும், 2-வது மற்றும் 3-வது உழவை கொத்துக் கலப்பை மூலம் செய்ய வேண்டியது அவசியம்.
மேடு, பள்ளங்கள் அதிகம் இல்லாத நிலமாக இருந்தால், 3-வது உழவுக்குப் பின் சமன் செய்யும் கருவி கொண்டு நிலத்தை சமன் செய்து, பின்னர் பார் பிடிக்கும் கலப்பை கொண்டு பார்களைப் அமைக்க வேண்டும்.
கரும்புப் பயிர் நன்கு வேர் ஊன்றி வளரவும், கரும்பு வளர்ந்தப் பின்னர் சாயாமல் இருக்கவும், பார்களுக்கு இடையே 20 செ.மீ முதல் 30 செ.மீ ஆழத்தில் சால் அமைக்க வேண்டும்.
நாற்றங்கால் தயாரித்தல்
ஆறு மாதம் வயதுள்ள உயர் விளைச்சல் தரும் இரகங்களிலிருந்து விதைப் பருக்களை சேகரிக்க வேண்டும். விதைப்பருக்களின் முளைப்புத் திறனைத் தூண்டும் வகையில் 1 கிலோ யூரியா, 50 கிராம் கார்பன்டாசிம், 200 மி.லி மாலத்தியான் ஆகியவைகளை 100 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். அதில் 5,000 விதைப் பருக்களை நன்கு நனையும்படி 15 நிமிடம் ஊறவைத்து பின் நிழலில் உலர வைக்க வேண்டும்.
விதை நேர்த்தி செய்த விதைப் பருக்களை கோணிப்பையில் கற்று புகாவண்ணம் இறுக கட்டி நிழலில் 5 நாட்கள் வைத்திருக்க வேண்டும். இடையில் தண்ணீர் தெளிக்க வேண்டியதில்லை.
முதலில் குழி தட்டுகளின் பாதியளவில் தென்னை நார்க் கொண்டு நிரப்ப வேண்டும். பின்பு விதைப் பருக்களை மேல் நோக்கி இருக்குமாறு சற்று சாய்வாக அடுக்கி மீதி குழிகளை தென்னை நார் கொண்டு நிரப்பிட வேண்டும். தினசரி தண்ணீர் தெளிக்க வேண்டும்.
நடவு செய்தல் (Plantation)
நாற்றங்காலில் நாற்றுகள் 25 முதல் 30 நாட்கள் வயது அடைந்தவுடன் வேர்ப் பகுதியில் தென்னை நார்க் கழிவுடன் சேர்த்து 5 x 2 அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம் (Water Management)
பயிர்நடவு செய்த 15 முதல் 30 நாட்களில் அல்லது 2 முதல் 3 பக்க சிம்புகள் வந்தபின் மண்ணில் இருந்து ஓர் அங்குல உயரத்தில் கவாத்து செய்யும் கத்தரி கொண்டு வெட்டிவிட வேண்டும்.
வெட்டுவதற்குமுன் சொட்டு நீர்ப் பாசனமாக இருந்தால் அதன் மூலம் யூரியா அளிக்க வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம் அமைக்காவிடில் ஒரு தேக்கரண்டி அளவு யூரியா இட வேண்டும். கரும்புக்குத் தேவையான நீரை சிக்கனமாக, பயிருக்கு வேண்டிய அளவு மட்டும் தினமும் அளிக்க வேண்டும். இதற்கு சொட்டு நீர் பாசனம் சிறந்தது.
பாதுகாப்பு முறைகள் (Protective Methods)
கரும்பு வயல்களில் களைகள் முளைக்கும் முன் தெளிக்கக்கூடிய களைக்கொல்லியான தயோபென்கார்ப் மருந்தை ஒரு ஹெக்டேருக்கு 1.25 கிலோ என்ற அளவில் தெளிக்க வேண்டும். விதைத்த 30, 60 மற்றும் 90ம் நாட்களில் மண்வெட்டி கொண்டு வரப்புகளில் களையெடுக்க வேண்டும்.
விட்டம் கட்டுதல்
கரும்பு 5 முதல் 7 மாத பயிராக இருக்கும் போது சாதாரணமாக 30 இலைகள் வரை இருக்கும். பயிரின் மேற்பகுதியில் உள்ள 8 முதல் 10 இலைகள் மட்டுமே ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுகின்றன. மற்ற இலைகள் சத்தை உறிஞ்சுவதில் போட்டியிடுவதால் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
எனவே, இந்த நேரத்தில் கீழ்ப்பகுதியில் உள்ள காய்ந்த இலைகளை, உரித்து பார்களில் பரப்பி விடுவதால் பயிர் வளர்ச்சி சீராக இருப்பதோடு, மண்ணில் ஈரம் காக்கப்படுகிறது. களையும் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு சோகை உரித்தலை 5 மற்றும் 7-வது மாதங்களில் செய்ய வேண்டும்.
நடவு செய்த 210-ம் நாள் கரும்பின் இரண்டு வரிசையில் உள்ள கரும்புகளை குறுக்காக ஒன்று சேர்த்து விட்டம் கட்டவேண்டும்.
கரும்பு நட்ட 5 மற்றும் 7-வது மாதங்களில் இரண்டு முறை தோகை உரிப்பதனால் நுனிக்குருத்துப் புழுவை கட்டுப்படுத்த முடியம்.
கரும்பின் முதிர்ச்சி அறிதல்
கரும்பின் முதிர்ச்சியை பிரிக்ஸ் மீட்டர் என்ற கருவியின் மூலம் அறியலாம். பிரிக்ஸ் அளவு 18 முதல் 20 சதம் இருந்தால் கரும்பு முதிர்ச்சி அடைவதற்கான அறிகுறியாகும். கரும்பின் நுனி மற்றும் கீழ் பகுதியில் பிரிக்ஸ் அளவு 11 சதம் அளவில் இருத்தல் வேண்டும்.
அறுவடை (Harvesting)
கரும்பு அறுவடைக்குத் தயாராகும் நேரத்தில் கரும்பை அடியோடு வெட்டி எடுக்க வேண்டும். இதற்கு வெட்டுக்கத்தி (அல்லது) வெட்டுக்கோடாரியைப் பயன்படுத்தலாம். இவ்வாறு வெட்டுவதன் மூலம், அதிக சர்க்கரை சத்துள்ள அடிக் கரும்பு வெட்டப்படுவதால் கூடுதல் எடையுடன் சர்க்கரை கட்டுமானமும் கூடுதலாக கிடைக்கும்.
மகசூல் (Yield)
ஒரு ஏக்கரில் 40 முதல் 45 டன் வரை மகசூல் கிடைக்கும்.
கரும்பைத் தாக்கும் நோய்கள்
செந்நிற அழுகுல் நோய்
கரும்பில் இந்நோய் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
அறிகுறிகள்
இளம் இலைகள் வெளிரிக் காணப்படும். இலைகளின் ஓரம் மற்றும் காம்பு சுருங்கிக் காணப்படுவது இதன் அறிகுறியாகும்.இந்த நோய் தாக்கினால், உதிரும் உச்சியில் உள்ள இலைகள் அனைத்தும் உதிர்ந்து பயிர் நான்கிலிருந்து எட்டு நாட்களில் இறந்துவிடும்.
நோய் பாதிக்கப்பட்ட கடைசி நிலையில், கரும்பின் நடுப்பகுதி அழுகி காணப்படும்.
கரும்பின் அடித்தண்டில் உள்ள திசுக்கள் அனைத்தும் செந்நிறமாக மாறி காட்சியளிக்கும்.
இடைக்கணு சுருங்கி காணப்படும். அவ்வாறு உள்ள கரும்புகளின் உள்பகுதி சுருங்கி, அரக்கு நிறத்திலிருக்கும்.
வெள்ளை நிற புஞ்சான வளர்ச்சி அரக்கு நிற திசுக்கள் இருக்கும் பகுதியில் காணலாம்.
செந்நிறமாகுதல் மற்ற நோய் தாக்குதலிலும் காணப்படும். ஆனால் செந்நிறத்தில் வெள்ளை பூஞ்சானின் வளர்ச்சி இந்தநோய்க்கே உரிய அறிகுறியாகும்.செந்நிற ஓரம், அரக்கு நிற நடுப்பகுதி என பிளவுபட்ட இடங்களில் காணலாம்.
தடுப்பு முறைகள் (Protection Methods)
மழைப் பருவங்களில் இந்நோய் வேகமாக பரவும். கரும்பினை பாதியாக வெட்டி செந்நிற திசு மற்றும் வெள்நைிற கோடுகள் உள்ளனவோ என்று சோதித்து பின்னர் தடுப்பு முறைகளைக் கையாளுதல் நல்லது.
எதிர்ப்பு சக்தி கொண்ட பயிரினை பயிரிடுதல் சிறந்த முறையாகும். நடவு செய்யும் நாற்று நோயற்றதாக இருத்தல் மிக முக்கியம். பயிர்தூய்மை மிக அவசியம்.
தோகை உரித்தல், அதிகப்படியான நீரை வடித்தல் ஆகியவை சிறந்தது.
நோய் பாதிக்கப்பட்ட வயல்களில், கட்டைப்பயிர் வளர்த்தலை தவிர்க்கவும்.
பயிர் சுழற்சி முறை மேற்கொள்ள வேண்டும்.
பயிரிடுவதற்கு முன் விதை நேர்த்தி சிகிச்சையைப் பின்பற்ற வேண்டும்.
கரும்பில் இடைக் கலப்பு முறையை பின்பற்றினால், அந்தந்த இடத்திற்கு ஏற்ப, திறன் கொண்ட பயிர்களை வளர்க்க முடியும்.
எதிர்ப்பு திறன் கொண்ட கரும்பு பயிர்கள்
கோ 8321, கோ85019, கோ 86010, கோ 86032, கோ 86249, கோ 93009, கோ 99004, கோ 99006 ஆகியவை வெப்ப மண்டலம் சார்ந்த பகுதிகளில் எதிர்ப்புத்திறன் கொண்டவையாகும்.
கோ 91, கோ 89003, கோ 98015, கோ 99015, கோ 99016, கோ.எஸ் 96275, கோ.எஸ் 99259, கோ பான்ட் 90223, கோ பான்ட் 94211, ஆகியவை குறைந்த வெப்பப் பகுதிகளில் நன்றாக வளரக்கூடிய எதிர்ப்புசக்தி கொண்ட பயிர்கள்.
அன்னாசிபழ நோய்
அறிகுறிகள்
கரணைகளை அதிகம் தாக்கும்.பாதிக்கப்பட்ட கரணைகளை விதைத்தால், அவை அழுகிவிடும் (அல்லது) அவை 6-12 அங்குலம் மட்டுமே வளரும். குட்டையாகுதல் மற்றும் வெளிரிக் காணப்படுதல். இலை உதிர்ந்து, தண்டு அழுகிவிடும். பாதிக்கப்பட்ட கரணைகளின் நடுப்பகுதி செந்நிறமாக இருப்பதுடன், அவை அழுகியுடன் காணப்படும்.
அன்னாசி பழ மணம் வீசும்.
தடுப்பு முறைகள்
ஆரோக்கியமான கரணைகளை கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.அவ்வாறு தேர்வு செய்த கரணைகளை கரிம பாதரசம் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். இது வெட்டப்பட்ட ஓரங்களின் மூலம் பூஞ்சான் உள்ளே நுழையாமலிருக்க உதவும். பின்னர் கரணையை நடவு செய்யலாம். கரணைகளை வெந்நீர் கொண்டு முன் நேர்த்தி அளித்தல் மூலம் மொட்டுகள் முளைக்க அதிக வாய்ப்பு ஏற்படுத்தலாம். இதனால் நோய்கிருமியை எதிர்த்து மொட்டுகள் வேகமாக மலரும்.
அழுகல் நோய்
அறிகுறிகள்
இந்நோயின் அறிகுறி பயிர் வளர்ந்த 4-5 மாதத்தில்தான் தெரிய ஆரம்பிக்கும்.
இலைகள் உதிரும்.பாதிக்கப்பட்ட கரும்பின் தக்கை (நடுப்பகுதி) ஊதா நிறத்தில் காணப்படும். அவற்றில் நீளவாக்கில் கோடுகள் காணப்படும்.இலைகள் பழுப்பாகி உதிரும்.
பாதிக்கப்பட்ட கரும்பிலிருந்து நாற்றம் வெளியேறும்.
பருத்திப் பஞ்சு போல பூஞ்சான வளர்ச்சித் தக்கைப் பகுதியில் காணப்படும்.
இந்த நோயைத் தொடர்ந்து பாக்டீரியா தாக்குதல் ஏற்படும்.
தடுப்பு முறைகள்
நோயற்ற கரணையைத் தேர்ந்தெடுத்தல் அவசியம்.
உவர் மண்ணில் இப்பயிர் வளர்ப்பதை தவிர்க்கவும்.
கோ 617, பி.பி 17 ஆகிய வகைகள் நல்ல எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர்களை வளர்ப்பது நல்ல பலனைத் தரும்.
புல்தோகை நோய்
அறிகுறிகள்
இந்நோய் தாக்கப்பட்ட கரும்புகளின் அடிப்பகுதியில் உள்ள மொட்டுகளிலிருந்து ஒல்லியான புல் போன்ற இலைகள் தழையும். இது தழைப்பருவத்தில் ஏற்படும் நோய்.இவ்வாறு தழையும் இலைகள் பழுப்புநிறத்தில் காணப்படும்.இது போன்ற பாதிக்கப்பட்ட கரும்பின் தண்டு சரிவர வளராது. அவ்வாறே வளர்ந்தாலும் இடைக்கணுப் பகுதி மிக சிறியதாகக் காணப்படும்.
இந்நோயை உண்டாக்கும் நச்சுயிரி, தாவரச்சாறு மூலம் பரவுகிறது. கட்டைப்பயிர் வளர்த்தல் மூலமும் இந்நச்சு உயிரி பரவுகிறது. அசுவுணி பூச்சியின் மூலம் இந்நோய் பரவுகிறது.
தடுப்பு முறைகள்:
நோய்பட்ட கரும்புச் செடிகளை அகற்றிட வேண்டும்.முன் சிகிச்சையாக, கரணைகளை வெந்நீரில் அதாவது 520 சென்டிகிரேட் வெப்பத்தில் வைக்கலாம். இந்த முறையை நாற்று நடுவதற்கு ஒரு மணி நேரம் முன்பு செய்தல் வேண்டும்.அல்லது கரணைகளை 540 சென்டிகிரேட் வெப்பத்தில் எட்டு மணி நேரம் வைத்து முன்சிகிச்சை செய்து, பின்னர் நட வேண்டும்.
மறுதாம்புக் குட்டை நோய்:
இந்நோயினால் பதிக்கப்பட்ட கரும்பு சரிவர வளராமல் குட்டையாக இருக்கும். கட்டைப்பயிர் வளர்த்தலின் போது பாதிப்பு அதிகமாக இருக்கும்.கரணை குறைப்பட்ட முளைக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.தாவரச் சாற்றின் மூலம் பரவும்.
தடுப்பு முறைகள்
ஆரோக்கியமான கரணைகளை மிகவும் கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும்.
முன் சிகிச்சையாக, கரணைகளை, 500 சென்டிகிரேட் வெப்பமுள்ள வெந்நீரில் இரண்டு மணி நேரம் விடுதல் நூறு சதவிகிதம் நோய் கட்டுப்பாட்டை கொண்டு வர வல்லது.
தேமல் நோய்
எதிர்ப்பு சக்தி கொண்ட வகைகளை பயிரிட வேண்டும்.பூச்சிக்கொல்லிகளைக் கொண்டு இந்நோய் பரப்பும் பூச்சிகளை அழிக்கலாம்.
கரும்பு மருத்துவப் பயன்கள் (Medical Benefits)
மஞ்சள் காமாலை குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.
குண்டான உடலை இளைக்கச் செய்வதில் கரும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. கரும்புச் சாற்றில் உள்ள இரசாயனங்கள், உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பை கரையச் செய்கிறது. இதன் மூலம் உடல் எடை குறைகிறது. அதேவேளையில்,எடை குறைவதால், உடல் சோர்வடைவதையும் கரும்பு சாறு தடுக்கிறது.
கரும்பில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வித அச்சமுமின்றி கரும்பைச் சாப்பிடலாம்.
கரும்பின் சாற்றைக் காய்ச்சி செய்யப்படும் சர்க்கரை நாட்டு மருந்துகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. வாந்தி, பித்தம், சுவையற்ற தன்மையைப் போக்குகிறது.
கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளன.
அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும் படிக்க...
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெந்தயக்கீரை- சாகுபடி செய்வது எப்படி?
மலர் சாகுபடியில் நல்ல வருமானம் தரும் ஜாதிமல்லி!!
Share your comments