கொரோனா காலத்தில், பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வெந்தயக் கீரையைச் சாகுபடி செய்து விவசாயிகள் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.
மூன்றே மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தரும் வெந்தயக்கீரை, வெந்தயத்தின் மூலம் பயிரிடப்படுகிறது. உலகத்திலேயே இந்தியாவில் தான் வெந்தயம் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே அதிக மருத்துவப் பயன்களை அளிக்கும் வெந்தயக் கீரையைச் சாகுபடி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
எப்படி பயிரிடுவது?
ஏற்ற பருவம் (Season)
வெந்தயக்கீரையை சித்திரை, ஆடி, மார்கழி, மாசி ஆகிய மாதங்கள் பயிர் செய்யலாம். இந்த மாதங்களே சாகுபடி செய்ய ஏற்ற பருவம் ஆகும்.
தகுந்த மண் (Sand)
நல்ல மண்ணும், சற்றே அமிலத்தன்மை கொண்ட இருமண்பாடு நிலங்கள், செம்மண் நிலங்கள் ஆகியவை இதனை சாகுபடி செய்ய உகந்தவை.
விதையளவு (Seed Quantity)
ஒரு ஹெக்டருக்கு குறைந்த பட்சம் 2.5 கிலோ விதைகள் தேவைப்படும். அப்போதுதான், கீரையும் அதிகளவில் கிடைக்கும்.
நிலம் தயாரித்தல் (Land preparation)
தேர்வு செய்த நிலத்தை உழுது தக்கைப்பூண்டு விதைத்து, பூவெடுக்கும் நேரத்தில் ரோட்டோவேட்டர் மூலம் மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு, ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்துடன், 4 டன் எருவைக் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதைத்தல் (Sowing)
கீரை விதைகளை மணல் கலந்து, பாத்திகளில் தூவ வேண்டும். பிறகு கையால் லேசாக கிளறி விட்டுவிட்டு, பாசனம் செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம் (Water Management)
விதைத்தவுடன் பாத்திகளில் நிதானமாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். அப்போதுதான் விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்வது தடுக்கப்படும். பிறகு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும்.
உரங்கள் (Fertilizers)
7 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விடவேண்டும். இதன் மூலம் பயிரின் வளர்ச்சி சீராக இருக்கும்.
களை நிர்வாகம்
களை எடுக்க வேண்டிய சரியான நேரத்தில் களைகளை அகற்ற வேண்டியது கட்டாயம். விதைத்த 6-ம் நாளில் விதைகள் முளைவிடும். பத்து நாட்கள் கழித்து களைகளை நீக்கி விட வேண்டும். அப்பொழுது அதிகப்படியான செடிகளை களைக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு (Protection)
கீரைகளில் பூச்சிகள் தாக்குவதற்காக வாய்ப்புகள் அதிகம். இதனைத் தடுக்க இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் (கோமியத்தில்) மாட்டுச் சிறுநீரில் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கரைசலை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை வேளைகளில் தெளித்தால் பூச்சிகள் தாக்காது.
அறுவடை (Harvesting)
வெந்தயக்கீரையை, விதைத்த 21 முதல் 25 நாட்களில் வேருடன் பறித்து விற்பனை செய்ய வேண்டும். வேர் மிகவும் மெல்லியதாகக் காணப்படும். வெந்தயக்கீரை ஒருமுறை மட்டுமே அறுவடை செய்யக்கூடியது. சிறு சிறு இலைகளாகவும், சிறிய தண்டுகளுடனும் காணப்படும் வெந்தயக்கீரை, லேசான கசப்புச் சுவை கொண்டது.
மருத்துவப் பயன்கள் (Medical Benefits)
நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity)
வெந்தயக் கீரைகள் இரும்புச்சத்துப் பொருட்களை அதிக அளவில் கொண்டுள்ளன.
இரும்புச்சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை வராமல் தடுப்பதோடு, உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.
நெஞ்சுவலிக்கு மருந்து (Heart Disease)
வெந்தயக் கீரையைப் பொடிப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் காய்ச்சி, காலை மாலை வேளைகளில் அரை டம்ளர் வீதம் உண்டு வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.
வயிற்றுப்போக்கு அகலும்
பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து மோரில் கரைத்துக் சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.
உடலுக்கு வலிமை (Strength)
வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டைப் (Protein deficiency) போக்கி வலிமை சேர்க்கும்.
பார்வைகுறைபாடு நீங்கும் (Eye Sight)
வெந்தயக்கீரையில் ஏ வைட்டமினும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறைபாடு, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையும்.
புற்றுநோயைத் தடுக்கும் (Cancer)
கீரையில் உள்ள சாப்போனின், மியூக்கலேஜ் போன்ற புரதப்பொருட்கள், பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
மேலும் படிக்க...
நோய் நொடி தீர்க்கும் அற்புத மூலிகைச் செடிகளும், மருத்துவ குணங்களும்!
கேன்சர் கில்லர் என்று சொல்லப்படும் முள் சீத்தா பழம்! அதன் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு!
Share your comments