கால்நடை விவசாயிகளுக்கு அதிக செலவு பிடிக்கக்கூடியது என்றால், அது தரமானத் தீவனங்கள்தான். இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமைவதுடன், கூடுதல் வருமானம் ஈட்டித் தருவதிலும் முக்கிய இடம் வகிப்பது அசோலா.
ஏனெனில், ஒரு கிலோ அசோலா ஒரு கிலோ புண்ணாக்கிற்கு சமமானதாகும். இத்தீவனத்தை அளிப்பதால்,கால்நடைகளின் பால் உற்பத்தி 15-20 சதவீதம் அதிகரிக்கிறது.
இதனால் அசோலாவை ஆடு, கோழி, முயல், வாத்து மற்றும் பால் உற்பத்தி மாடு, எருமைகளுக்கும் தீவனமாக அளிக்கலாம் என்பதே கால்நடைத்துறையினரின் அறிவுரை. எனவே அசோலாவை இயற்கை உரங்களைக் கொண்டு எவ்வாறு எளிமையான முறையில் வளர்ப்பது என்பது குறித்துப் பார்ப்போம்.
அலோசா (Azolla)
அசோலா என்பது பெரணி வகையை சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம். இதில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, சுண்ணாம்புச்சத்து, கந்தகம், மக்னீசியம், இரும்புச்சத்துகள் என பெரும்பாலான சத்துக்கள் அடங்கியுள்ளன.
இடம்தேர்வு
மர நிழலான இடத்தைத் தேர்வு செய்து அதன் அடியில் ஒன்றரை அடி உயரம், மூன்றரை அடி அகலம், 10 அடி நீளம் கொண்ட சிமெண்ட் தொட்டியை அமைக்க வேண்டும். தொட்டி 10 சென்டி மீட்டர் அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதில், மாமரம் மற்றும் புளியமரத்தைக் கட்டாயம் தவிர்த்துவிட வேண்டும்.
தரமான விதைகள் (Quality Seeds)
நன்கு பூச்சித்தாக்குதல் இல்லாதத் தரமான தாய் விதைகளை எடுத்து, 2 முறை தண்ணீர் விட்டு அலசிவிட வேண்டும். ஏனெனில், அதில் ஒட்டுண்ணிகளின் முட்டை இருந்தால், அவை கால்நடைகளுக்கு நோய்களைக் கொண்டுவரும்.
இடுபொருட்கள் (Ingredients)
நிலத்தின் மண் - 20 கிலோ
மக்கிய தொழுஉரம் - 2 கிலோ
அல்லது
மண்புழு உரம் - 2கிலோ
புதிய சாணம் - 500 கிராம்
முருங்கைக் கீரை - 500 கிராம்
வேப்பிலை - 500 கிராம்
பாறைத்தூள் - 2 கிலோ
அல்லது
வாழைப்பழம் - 4
அசோலா உற்பத்தி (Cultivation)
மர நிழல் உள்ள சுத்தமான, சமமான இடத்தில், செங்கல்களை பக்கவாட்டில் அடுக்கி 2 மீ X 2 மீ அளவுள்ள தொட்டி போல் அமைத்து கொள்ளவேண்டும். புல் மற்றும் மர வேர்களின் வளர்ச்சியை அசோலா குழியினில் தடுக்க தொட்டியின் கீழே உர சாக்கினை பரப்பி விட வேண்டும்.
-
அதன் மேல் சில்பாலின் பாயை ஒரே சீராக பரப்பிவிட வேண்டும்.
-
சில்பாலின் பாயின் மீது நிலத்தின் மண் , தொழு உரம் ஆகியவற்றை இடவேண்டும். பின்னர் சாணியை நன்கு கரைத்து சக்கையை அகற்றிவிட்டு சாணிக்கரைசலை ஊற்றவும்.
-
முருங்கைக்கீரை, வேப்பிலை, பாறைத்தூள் அல்லது வாழைப்பழம் ஆகியவற்றைத் தொட்டியில் போட்டு நன்கு கலக்கிவிடவும்.
-
அதன் பிறகு அசோலா விதைகளைப்போட்டு தண்ணீர் தெளிக்கவும்.
-
15 நாட்களுக்கு ஒருமுறை முருங்கைக்கீரை, வேப்பிலை, பாறைத்தூள் அல்லது வாழைப்பழத்தைக் கலந்து போடவும்.
-
மாதத்திற்கு ஒருமுறை தொழுஉரம் அல்லது மண்புழு உரத்தையும் போடவேண்டும்.
-
மாதத்திற்கு ஒருமுறை தண்ணீரை மாற்றி விடவேண்டும்.
-
தண்ணீரை 10 செ.மீ. உயரம் வரை ஊற்ற வேண்டும்.
-
ஒரு வாரத்தில் அசோலா நன்றாக வளர்ந்து தொட்டி முழுவதும் பரவி இருக்கும்.
-
இப்படி வளர்க்கும் அசோலா 6 மாதம் வரை நன்றாக இருக்கும்.
-
6 மாதங்களுக்கு பிறகு தொட்டியைச் சுத்தம் செய்துவிட்ட, திரும்ப அடுத்தகட்ட அசோலா வளர்ப்புக்குத் தயாராகிவிடலாம்.
மகசூல் (Yield)
விதைத்த மூன்று நாட்களில், எடை மூன்று மடங்காக பெருகும். 15 நாட்களில், பசுந்தீவனமாக பயன்படுத்த அசோலா தாவரம் தயாராகி விடும்.
அறுவடை (Harvesting)
நாளொன்றுக்கு அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை அறுவடை செய்யலாம்.
அசோலா பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து விடும். அசோலாவை சுத்தமான தண்ணீரில் அலசினால் சாணத்தின் வாசனை இல்லாமல் இருக்கும்.
சல்லடை கொண்டு அலசும்போது கிடைக்கும் நீரில் உள்ள சின்ன சின்ன அசோலா நாற்றுகளை திரும்ப தொட்டியில் ஊற்றலாம்.
மேலும் படிக்க...
NLM: எருமைப்பண்ணையாராக மாற விருப்பமா? 50% வரை மானியம் அளிக்கிறது மத்திய அரசு!
வருமானத்தைத் கொட்டித் தரும் காங்கிரீஜ் இன பசுக்கள்- பராமரிக்க எளிய வழிகள்!
Share your comments