மரம் நடுவதன் அவசியத்தை மாணவர்களிடைய ஏற்படுத்த சட்டமே அவசியம் எனக்கூறி கொடைக்கானலைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் பிரசன்னன், பிரதமரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஆராய்ச்சியில் தகவல்
மரங்களை அழித்து, இயற்கைக்கு பலவித இன்னல்களை ஏற்படுத்தியதே, கொரோனா போன்ற நோய்கள், நம்மை உரசிப்பார்க்கக் காரணம் என்றுக்கூறி நம்மை அதிர வைக்கின்றன அண்மைகால ஆராய்ச்சி முடிவுகள்.
இது ஒருபுறமென்றால், நாளுக்கு நாள் நாம் பயன்படுத்தும் காதிதத்தின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. உண்மையில் மரம் நம்முடைய உயிரில் கலந்த ஒன்று. எப்படி தெரியுமா? பிறந்தது முதல் இறப்பு வரை, நம்மை வழிநடத்தி நம்முடன் பயணிக்கிறது என்றே சொல்லலாம்.
அதாவது தொட்டிலில் தொடங்கி, நடைவண்டி, எழுதுகோல், பேப்பர், பருத்தி ஆடைகள் இவ்வாறாக கடைசியில் பாடையாக நம்மில் கலந்துவிட்ட ஒன்று. இதன் உன்னதத்தை உணர்ந்ததாலேயே, நம் முன்னோர்கள் மரம் வளர்ப்பதை இயற்கைக்கு செய்யும் நன்றிக்கடனாகக் கொண்டிருந்தனர்.
அதன் ஒரு பகுதியாக, நம் கிராமங்களில், வேப்பமரத்திற்கு பொட்டு வைத்து, அம்மனாக வேண்டுவதை இன்றும் வழக்கமாக செய்து வருகின்றனர்.
ஆக மரத்தின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுத்தால்தான், அப்பழுக்கற்ற, ஆரோக்கியமான சுற்றுச்சூழலை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க முடியும்.
இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் சட்டம் போட்டால்தானே இயற்கைக்குக் கேடு விளைவிக்கும், இந்த மக்களைத் திருத்த முடியும்.
இதையேத் தன் தனது கட்டுரையின் மூலம் நாசூக்காக எடுத்துரைத்து, மற்றவர்களின் பாராட்டைப் பெற்றது மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் கொடைக்கானலைச் சேர்ந்த பிரசன்னன்.
கவர்ந்த கட்டுரை
கொடைக்கானல் லாயிட்ஸ் ரோட்டை சேர்ந்த இந்த மாணவர், அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட சுற்றுச்சூழல் குறித்த கட்டுரை போட்டியில், மரம் வளர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து இவர், எழுதிய கட்டுரை அனைவருடைய பாராட்டையும் பெற்றது.
மரத்துக்கு மனிதன் தேவையில்லை, மனிதனுக்கு தான் மரம் தேவை’ என்ற கருத்தை அதில் இவர் வலியுறுத்தியிருந்தார். இதேபோல் ஒவ்வொரு மாணவரும் பள்ளியில் சேரும்போதும், பள்ளிப்படிப்பை நிறைவு செய்யும்போதும், ஒரு மரக்கன்றை நடவு செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கருத்தை தனது கட்டுரையில் எடுத்துரைத்திருந்தார்.
இந்தக் கருத்தை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு பிரசன்னன் கடிதமும் எழுதினார்.
பிரதமர் கடிதம் (PM Letter)
இந்த நிலையில் மாணவரின் கருத்தை வரவேற்று பரிசீலிப்பதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து மாணவன் பிரசன்னனுக்கு பதில் கடிதம் அனுப்பப் பட்டிருக்கிறது.
எனவே நாமும் இனியாவது மரம் வளர்க்க முயற்சி மேற்கொள்வோம். மரத்தை அல்ல, மனிதத்தைக் காப்போம்.
மேலும் படிக்க...
ஆயிரம் இதழ்களுடன் கூடிய அரிய வகை தாமரை - தாமரைப்பிரியரின் முயற்சிக்கு அமோக வெற்றி!
குளிர்காலத்தில் நல்ல மகசூல் தரும் வெங்காயம் சாகுபடி முறை மற்றும் மருத்துவப் பயன்கள்!
Share your comments