நமது உடல் பராமரிப்புக்கு உரிய ஐம்பூத செயல்பாடுகள், வேளாண்மைக்கும் பொருந்துவதால் முக்கிய அடிப்படைகளுடன் இவைகளையும் உணர்ந்து செயலாற்ற உதவும் சில அடிப்படைகள்.
மனித வளம்
விவசாயத்தில் உங்கள் குடும்பத்தினர், ஆணோ, பெண்ணோ எவ்வளவு பேர் ஈடுபட இயலும்? உங்களுக்கு உதவும் ஆட்கள் கிடைக்கும் நிலை என்ன? உங்கள் பகுதியில் இயங்கும் தொழில்களின் செயல்பாட்டாலும் இதனை அறியலாம். இத்தகைய பரிசீலனை, நீங்கள் பயிரிடும் பயிர்களை செம்மை படுத்தவோ மாற்றுப் பயிர்களை பரிசீலிக்கவோ உதவலாம். குறிப்பாக குடும்பத்தின் இளைய தலைமுறையினரின் ஈடுபாடு பல நிலைகளிலும் பயனளிக்கவல்லது.
இந்த நிலையில் உதவி ஆட்கள் குறித்து ஒரு சிந்தனை தேவை. பொதுவாகவே நமது நாட்டில் உலவும் சமூக மற்றும் அரசியல் சூழலில் பெரும்பாலானோர் அது அரச பணியானாலும் சரி, வேறு எந்த பணியானாலும் சரி, வேலை குறைவாக இருத்தலை விரும்புகின்றனர். இதற்கு வேளாண்மையில் ஈடுபடும் உதவியாளர்களும் விதிவிலக்கல்லவே! வேளாண்மையில் உதவியாளர்கள் அமர்த்திக்கொள்ளுதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயிருக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாறுபடுகிறது. நமது முன்னோர்கள் காலத்தில் வேளாண்மை உதவியாளர்கள் காலை முதல் மாலை வரை தொடர்ந்து உதவுகையில் தக்க நேரத்தில் உணவும் வழங்கப்பட்டு வந்தது. ஒரே நாளில் வெவ்வேறு வேலைகளிலும் ஈடுபட்டனர். ஆனால் தற்காலத்திய சூழலில் வேளாண்மை சம்மந்தப்பட்ட வேலைகளை முற்பகலில் சுமார் 5 மணி நேர ஒப்பந்தத்தில் செய்யவே விரும்புகின்றனர். உணவு அளிக்கப்பட்டு மேலும் வேலைகள் செய்யும் சூழல் சில இடங்களில் இருந்தாலும் போதுமான அளவில் இருப்பதில்லை.ஆகவே, உதவியாளர்கள் கிடைக்கும் நேரத்தில் சோர்வூட்டுகின்ற வேலைகள் செய்ய நேரும்போது உரிய நேரத்தில் சற்று மாற்றி இலகுவான வேளைகளில் ஈடுபடுத்த வாய்ப்பிருந்தால் இருசாரும் மனநிறைவு பெறுவதும் ஒரு விரும்பத்தக்க மேலாண்மையாகும்.
தொழில் நுட்பங்கள்
"எந்த தொழிலானாலும் சில தொழில் நுட்பங்களை மேற்கொண்டால் தான் வெற்றி" என்பது பொதுவானது. இதற்கு வேளாண்மையும் விதிவிலக்கல்லவே! "வேளாண்மை ஒரு பகுதி நேர தொழில்" என்ற பரவலான கருத்து தேவையில்லாதது. சிறந்த விவசாயிகளாக இருப்பினும் தொடர்ந்து பரிசீலித்து உரிய மாற்றங்களுக்கு தயாராக இருப்பது அவசியம். நீங்கள் ஏற்கனவே கையாளும் நுட்பங்களின் அனுபவத்துடன் அவ்வப்போது கண்டறியப்படும் தொழில்நுட்பங்களை இணைக்கும் வாய்ப்பினை பரிசீலிக்கலாம்.
வணிக வாய்ப்புகள்
"லாபம் தரும் பயிர்களை செய்யலாமே" என்று சொல்வது எளிது! எல்லா கிராமங்களிலும் தொன்று தொட்டு சில பகுதிகளில் மண்வாகு, நீராதாரம், பருவ நிலைக்கேற்றவாறு நெல்லோ, சிறுதானியங்களோ, நிலக்கடலையோ, பருத்தியோ, கரும்போ, காய்கறிகளோ, பழவகைகளோ, மலர்களோ, பயிரிட வேண்டிய சூழல் இருக்கும். ஆனால் கிராமத்திலேயே தேவையின் மாறுபாடு, அருகாமை நகர்ப்பகுதிகளில் தீவிரத் தேவைகள், சில தொழில்கள் உருவாவதன் மூலம் ஏற்படும், தேவை, போன்றவற்றை அவ்வப்போது பரிசீலிப்பது அவசியம். இதன் மூலம் வாய்ப்புகளை அறிந்து மாற்றுப் பயிர்களையும் பரிசீலிக்கலாம். பல பயிர்களின் விலை பொருட்களை மதிப்புக்கூட்டுதல் செய்து, விவசாயிகளின் செயல்பாட்டினை பெருக்கி, வருவாயை கூட்டுதலும் ஒரு வணிக வாய்ப்புதான்.
"செய்யும் செயல் எதுவோ அதில் முழு மனதோடு,
மன ஒருமைப்பாட்டோடு ஈடுப்பட்டால் அதன் மூலம்
இறைவனையே அடையலாம்."
சுவாமி விவேகானந்தர்.
K.Sakthipriya
Krish Jagran
Share your comments