உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்காக இரண்டரை லட்சம் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் ஊட்டியின், இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை நேரில் கண்டுரசிப்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம்.
அதிலும் குறிப்பாக முதல் சீசன், 2-வது சீசன் ஆகிய இரண்டுமே சுற்றுலாப்பயணிகளை வெகுவாகக் கவரும். முதல் சீசனில் கோடை விழா, காய்கறி மற்றும் மலர்க்கண்காட்சி போன்றவையும் களை கட்டும்.
கொரோனாவால் ரத்து
ஆனால் எந்த ஆண்டும் இல்லாத வகையில், இந்த ஆண்டு, கொரோனா நோய் தொற்று காரணமாக, அனைத்து கோடை விழாக்களும் ரத்து செய்யப்பட்டன. சுற்றுலா பயணிகள் வருகை தராததால், சுற்றுலா ஸ்தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
உலகப்புகழ் பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் மலர் கண்காட்சியானது இந்த முறை நடைபெறாமல் போனது உலக சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. வியாபாரிகள் அதிகளவில் நஷ்டத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.
2-வது சீசன்
ஏப்ரல் மே மாதம் மட்டுமல்லாமல், செப்டம்பர் மாதம் இரண்டாம் கட்ட சீசன் (Season) தொடங்கும். இதை முன்னிட்டு, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டரை லட்சம் நாற்றுகள் நடப்பட்டு சுமார் 7 ஆயிரம் பூந்தொட்டிகளில் பூ விதைகள் விதைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
ஏற்பாடுகள் குறித்து, தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதா கிருஷ்ணன் கூறுகையில், இந்த முறை நடைபெறவிருந்த மலர் கண்காட்சிக்காக 6 லட்சம் மலர்கள் தயார் செய்யப்பட்டு இருந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக முதற்கட்ட சீசன் நடைபெறாமல் போனது.
தற்போது இரண்டாம் கட்ட சீசனுக்காக பூங்காவில் அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஓரளவுக்கு கொரோனாவின் தாக்கம் முடியும் என்ற முடிவில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த ஆண்டு நடந்த மலர் கண்காட்சிக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேல் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!
ஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு
Share your comments