குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சிறுதானிய உணவு வகைகளுள் ஒன்றான மக்காசோளம் மீண்டும் ஒரு முறை சாகுபடிக்கு.
வந்தாச்சு புரட்டாசி பட்டம்
நிலம் தயாரித்தல்
முதலில் நிலத்தை டிராக்டர் மூலம் கட்டி கலப்பையால் ஒரு முறை உழவு செய்யவும். பின்பு தொழு உரத்தை நிலத்தில் பரப்பிய பிறகு கொக்கி கலப்பை கொண்டு இரு முறையும் நன்கு உழவு செய்யவும்.
தொழு உரம் இடுதல் :
ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தொழு உரம் அல்லது மக்கிய தேங்காய் நாரைச் சமமாகக் கடைசி உழவிற்கு முன் சீராக இட்டு, அதனுடன் 10 பாக்கெட் (2000 கிராம் எக்டர்) அசோஸ்பைரில்லம் கலந்து பரப்பி நன்கு உழவு செய்யவும்.
பார் பிடித்தல்
60 செ.மீ இடைவெளியில் 6 மீ நீளம் கொண்டு பார் அமைக்கவும், பார்களுக்கு குறுக்கே பாசன வாய்க்கால் அமைக்கவும்.
பார் அமைக்காவிட்டடால், 10 அல்லது 20 சதுர மீட்டர் அளவில் நீர்வசதிக்கேற்ப பாத்திகள் அமைக்கலாம்.
செலவினை குறைக்க டிராக்டர் மூலம் பார் அமைக்கும் கருவிகளை பயன்படுத்தவும்.
உரமிடுதல்
மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடுதல் வேண்டும். இல்லையெனில் பொதுப் பரிந்துரையான 1350, 62.50, 50 கிலோ எக்டர் அளவில் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களைப் பொதுவாக அளிக்கவேண்டும்.
அடியுரமாக கால் பகுதி தழைச்சத்து, முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்து விதைப்பதற்கு முன் இடவும்.
பார்களில் கீழிலிருந்து 2/3 பகுதிக்கு 6 செ.மீ ஆழத்திற்கு குழியெடுத்து உரங்களை போட்டு 4 செ.மீ வரை மண் கொண்டு மூடவும்.
பாத்திகளில் 6 செ.மீ ஆழத்திற்கும், 60 செ.மீ இடைவெளி விட்டும் குழியெடுத்து உரக்கலவையை இட்டு 4 செ.மீ வரை மண்கொண்டு மூடவும்.
உரக்கலவையை பார்களின் ஓரத்தில் இடவேண்டும். 4 செ.மீ ஆழத்திற்கு மண்ணால் மூடவேண்டும்.
அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் உரத்தைப் பயன்படுத்தினால் 100 கிலோ தழைச்சத்து மட்டும் அளித்தால் போதும்.
ஊட்டச்சத்து குறைபாடுகளினால் ஏற்படும் அறிகுறிகள்
தழைச்சத்து குறைபாடு :
பயிர் வளராமல் அடி இலைகள் மஞ்சள் நிறத்தோற்றத்துடன் தென்படும். பற்றாக்குறை முற்றிய நிலையில் இலைகள் பழுப்பு நிறமாக மாறி காய்ந்துவிடும். இச்சத்து பற்றாக்குறை அறிகுறி முதலில் இலைநுனியில் ஆரம்பித்து நடு நரம்பு வழியாக அடிப்பாகத்திற்கு பரவி இலை முழுவதும் பாதிக்கப்படும். தண்டுகள் மெலிந்து காணப்படும்.
மணிச்சத்து :
இள இலைகள் ஊதாகலந்த பச்சை நிறத்துடன் தோன்றும். செடியின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சி மெதுவாகவும் கதிர்களில் மணிகள் குறைவாகவும் இருக்கும்.
சாம்பல் சத்து :
இலைகளில் மஞ்சள் அல்லது மஞ்சள் கலந்து பச்சை நிறக்கோடுகள் தென்படும். இலையின் நுனியிலும் ஓரங்களிலும் கருகல் தென்படும். செடியின் நுனியில் மணி பிடிக்காத கதிர்கள் காணப்படும். செடியில் கணுக்களின் இடைவெளி குறைந்து, வலுவிழந்து காணப்படும்.
மெக்னீசிய குறைபாடு :
முதிர்ந்த இலைகளின் ஓரமும், இலை நரம்புகளின் நடுப்பகுதியும் பச்சையம் இழந்து காணப்படும். கோடுகள் உள்ளது போன்ற தோற்றம் தென்படும்.
துத்தநாகக் குறைபாடு :
அடியிலைகள் நரம்புகளுக்கிடையே பச்சையம் இழந்து மஞ்சள் நிறக் கோடுகள் காணப்படும். மேலும் இளம் இலை விரிவடையாமல் சுருண்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்துடன் இருக்கும்.
இரும்புச்சத்துக் குறைபாடு :
இலையின் நரம்புகளுக்கிடையே உள்ள பச்சையம் குறைந்து வெளிறிக் காணப்படும்.
நுண்ணூட்டச் சத்து இடுதல்
தமிழ்நாடு வேளாண் துறை உருவாக்கிய நுண்உரக் கலவையை 12.5 கிலோ மணலுடன் கலந்து மொத்த அளவு 50 கி / ஹெக்டர் அளிக்க வேண்டும்.
எக்டருக்கு 30 கிலோ தமிழ்நாடு நுண்ணூட்டக் கலவையை ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்க வேண்டும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்ணூட்டக்கலவை மற்றும் தொழுவுரத்தை கலக்க வேண்டும். தகுந்த ஈரப்பதத்தில் கலந்து ஒரு மாதம் நிழலில் வைக்க வேண்டும்).
(அல்லது) 5 கிலோ துத்தநாகம் + 40 கிலோ கந்தகம் + 1.5 கிலோ போரானை பற்றாக்குறை உள்ள மண்ணில் இட வேண்டும்.
துத்தநாக பற்றாக்குறை உள்ள மணலில் கலப்பின மக்காச்சோளத்திற்கு ஏக்கருக்கு 37.5 கி துத்தநாக சல்பேட் பரிந்துரைக்கப்படுகிறது.
பார் முறை நடவில், கலவையை மூன்றில் இரண்டு பங்கு வரப்பிலும், வாய்க்காலிலும் தூவ வேண்டும்.
பாத்தி முறை பின்பற்றும்பொழுது, குழித்து நுண்ணூட்டக் கலவையை இட வேண்டும்.
நுண்ணூட்டக் கலவையை மண்ணில் இணைக்க வேண்டாம்.
விதையளவு
நல்ல தரமுடைய விதைகளை தேர்ந்தெடுக்கவும். வீரிய ஒட்டு இரகங்களுக்கு 20 கிலோ, எக்டர் என்ற அளவிலும் இரகங்களுக்கு 25 கிலோ, எக்டர் என்ற அளவிலும் பின்பற்றவும்.
இடைவெளி
ஒரு செடிக்கும் மற்றோர் செடிக்கும் இடையே 20 செ.மீ இடைவெளியும், பாருக்கு பார் 45 செ.மீ இடைவெளியும் இருக்கவேண்டும். செடிகளின் எண்ணிக்கை இரகம் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் 10-11 செடிகள், சதுரமீட்டர்.
நுண்ணுயிர் உரத்துடன் விதை நேர்த்தி
பூஞ்சாண விதை நேர்த்தி செய்த விதைகளை விதைப்பதற்கு முன் மூன்று பாக்கெட் அசோஸ்பைரில்லம் 1600 கிராம் எக்டர் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.
விதைத்தல்:
விதையை 4 செ.மீ ஆழத்தில் ஊன்றவேண்டும். விதைக்கும் கருவிகள் கொண்டு விதையை ஊன்றலாம்.
களைக் கட்டுப்பாடு
விதைத்த 3-5ம் நாள் களை முளைக்கும் முன் களைக்கொல்லியான எக்டருக்கு 0.25 கிலோ அட்ராஜினை நேப்செக் /ராக்கர் தெளிப்பானில் தட்டையான விசிறி நுண் குழாய் பொருத்தி 500 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். தொடர்ந்து விதைத்த 30-35-ம் நாளில் கைக்களை எடுக்க வேண்டும். (அல்லது)
ஏக்கருக்கு 0.25 கி அட்ராஜின் விதைத்த 3-5ம் நாளில் களை முளைக்கும் முன் களைக்கொல்லியை தெளிக்க வேண்டும். தொடர்ந்து ஏக்கருக்கு 2,4-D 1 கிலோ விதைத்த 20-25ம் நாளில் நேப்செக் /ராக்கர் தெளிப்பானில் தட்டையான விசிறி நுண் குழாய் பொருத்தி 500 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். (அல்லது)
வரிசை முறை விதைப்பில், விதைத்த 3-5ம் நாளில் களை முளைப்பதற்கு முன் அட்ராஜின் எக்டருக்கு 0.25கி தெளிக்க வேண்டும். தொடர்ந்து இரட்டை சக்கர களையெடுக்கும் கருவியைக் கொண்டு விதைத்த 30-35ம் நாளில் களையெடுக்க வேண்டும்.
மண்ணில் போதுமான ஈரப்பதம் இருக்கும்பொழுது களைக்கொல்லியை பயன்படுத்தவும்.
களைக்கொல்லியை உபயோகித்த பின்னர் மணலை எதுவும் செய்யக் கூடாது.
ஊடுபயிராக பருப்பு வகைகள் இருந்தால் அட்ராஜின் உபயோகிக்கக் கூடாது. பென்டிமெத்தலின் ஏக்கருக்கு 0.75 கிலோ விதைத்த 3-5ம் நாளில் களை முளைக்கும் முன் தெளிக்கவும்.
பயிர் எண்ணிக்கை பராமரித்தல்
இரண்டு விதைகள் விதைத்து இருந்தால், 12-15வது நாளில் நன்கு வீரியமாக வளர்ந்த ஒரு செடியை ஒரு குழிக்கு வைத்து மற்றதை களையவேண்டும்.
விதை முளைக்காமல் உள்ள இடத்தில், தண்ணீரில் ஊறவைத்த விதைகளை குழிக்கு இரண்டு விதை வீதம் விதைத்து உடன் நீர்ப் பாய்ச்சவேண்டும்.
களை எடுத்தல்
விதைத்த 30வது நாளில் களைக்கொத்து கொண்டு களை எடுக்கவும்.
பின்னர் மண் அணைத்து பார்களை சரிசெய்யவேண்டும். இதனால் செடிகள் சாயாத தன்மை பெறும்.
தழைச்சத்து மேலுரம் இடுதல்
விதைத்த 25வது நாளில், தழைச்சத்தில் பாதி அளவு உரத்தை இட்டு மண்ணால் மூடவேண்டும்.
மீதம் உள்ள கால் பகுதி தழைச்சத்தை விதைத்த 45வது நாளில் இடவேண்டும்.
நீர் நிர்வாகம்
மக்காச்சோள பயிர் அதிக வறட்சியும் அதிக நீரையும் தாங்காது. அதனால் பயிரின் தேவைக்கேற்ப நீர்ப்பாய்ச்சுதல் அவசியம்.
பயிரின் முக்கியப் பருவங்களில் (45-65 நாட்கள்) போதுமான நீர் பாய்ச்சுவதால் அதிக மகசூல் பெறலாம்.
அறுவடை பருவம்
பயிரின் வயதைக் கொண்டு கீழ்க்கண்ட அறிகுறிகளை காணவும்.
கதிரின் மேல் தோல் பழுத்து முதிர்ந்தவுடன் காய்ந்துவிடும்.
விதைகள் கடினமாகவும் காய்ந்தும் காணப்படும். இப்பருவம் அறுவடைக்கேற்றது.
பயிர் அறுவடை
கோணி ஊசியைக் கொண்டு கதிரின் மேல் தோலைக் கிழித்து கதிர்களை பிரித்து எடுக்கவும்.
அறுவடையை ஒரே நேரத்தில் முடிக்கவும்.
கதிரடித்தல்
கதிர்களை சூரிய வெளிச்சத்தில் நன்கு காய வைக்கவும்.
விசைக் கதிரடிப்பான் கொண்டோ அல்லது டிராக்டரை கதிர்களின் மேலே ஓட்டியோ மணிகளைப் பிரித்தெடுக்கலாம்.
மணிகளைத் தூற்றி சுத்தப்படுத்தவும்.
பின்பு இவற்றை கோணிப்பையில் சேமிக்கவும்.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments