வேளாண்மையின் அடிப்படை இடுபொருளான விதை தரமானதாகவும், முளைப்பு திறன் மிக்கதாகவும் இருப்பதற்கு விதை நேர்த்தி என்பது மிக அவசியமாகும். இவ்வாறு செய்வதினால் நோய் தாக்குதலில் இருந்து எளிதில் பாதுகாக்கலாம். மேலும் அதிக மகசூல் பெறவும் உதவுகிறது. ரசாயனம் மற்றும் செயற்கை வேளாண் பூஞ்ஞாணக் கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் கொண்டு விதை நேர்த்தி செய்வதினால் பயிர்கள் பாதுகாக்கப்பட்டாலும் நமது உணவும், நிலமும் மாசடைந்து நமது உடலுக்கும் கேடு விளைவிக்கிறது. இன்று பெரும்பாலான விவசாயிகள் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், உடல் நலத்தை பேணவும் இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்து வருகின்றனர்.
விதை நேர்த்தியின் பயன்கள்
- முளைப்புத் திறனை மேம்படுத்தும்
- பூஞ்சாண மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும்
- விதை அழுகல் மற்றும் நாற்றுக்கழுகல் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க இயலும்.
இயற்கை முறையில் விதை நேர்த்தி
முதலில் நல்ல தரமான விதைகளில் இருந்து தரமற்ற விதைகளை பிரித்தெடுக்க, முதலில் 10 லிட்டர் தண்ணீரில், 1 கிலோ உப்பு சேர்த்து கரைக்க வேண்டும். இதில் ஒரு முட்டையை போட்டு மேலே மிதந்து வரும் வரை உப்பு கரைசலை கலக்க வேண்டும். இதில் விதை நெல்லை 3 முதல் 5 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். உயிரற்ற விதைகள் தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும். இந்த மிதக்கும் விதைகளை அப்புறப் படுத்திவிட்டு தண்ணீரின் அடியில் மூழ்கியிருக்கும் விதைகளை 3 முதல் 4 முறை தண்ணீரில் கழுவி விதைகளை ஜீவாமிர்த கரைசலில் ஈட்டு விதை நேர்த்தி வேண்டும்.
ஆட்டூட்டக்கரைசல் மற்றும் பஞ்சகவ்யா கரைசல்
ஆட்டூட்டக்கரைசல் என்பது (ஆட்டுப்புழுக்கை, ஆட்டு சிறுநீர், ஆட்டுப்பால், ஆட்டுத்தயிர், வாழைப்பழம், இளநீர், கடலைப் பிண்ணாக்கு, கரும்புச்சாறு மற்றும் கள் ஆகியவற்றை கொண்டு தயார் செய்யப்படும் கலவை) அல்லது பஞ்சகவ்யா கரைசல் (சாணம், மாட்டு சிறுநீர், பால், தயிர், நாட்டுச்சர்க்கரை, வாழைப்பழம், கரும்புச்சாறு, கள், ஈஸ்ட் மற்றும் கடலைப் பிண்ணாக்கு) இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை 300 மி.கி என்ற அளவில் 10 லிட்டர் நீரில் கலந்து விதை நேர்த்திக்கு செய்யலாம். கடின தோலுடைய விதைகளை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து நிழலில் நன்றாக உலர்த்திய பின்பு விதைக்க வேண்டும்.
ஆட்டூட்டக்கரைசல் மற்றும் பஞ்சகவ்யா கரைசலில் விதை நேர்த்தி செய்த நாற்றுகள் அதிக எண்ணிக்கையில் வேர் பிடிப்புடன், வறட்சியைத் தாங்கி செழித்து வளரும். அதுமட்டுமல்லாது பூச்சிகள், நோய் தாக்குதல்கள் இருக்காது.
விதை நேர்த்தி வகைகள்
விதை நேர்த்தி என்பது முளைப்புத் திறனை அதிகரிக்க உதவும். விதையானது உயிரும், வீரியமும் கொண்டு இயங்குவதற்கு விதை நேர்த்தி பயன்படுகிறது. விதை நேர்த்தி மூன்று வகைகளில் நடைபெறுகிறது.
விதைக் கிருமிகளை நீக்குதல்
இம்முறையானது விதையுறையினுள் பரவி இருக்கும் பூஞ்சாண தொற்றுக்களை நீக்குதல் ஆகும்.
விதைக் கிருமிகளை அழித்தல்
இம்முறையில் விதையின் மேற்புறத்தில் பரவி இருக்கும் கிருமிகளை அழிப்பதே ஆகும்.
விதைகளைக் காத்தல்
விதைகள் மற்றும் இளநாற்றுக்களை மண் மூலம் பரவும் கிருமிகளிடமிருந்து பாதுகாப்பது ஆகும்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments