தரமான விதைகளைப் பயன்படுத்துவதுதான் அதிக மகசூல் பெறுவதற்கானத் தாரக மந்திரம் என்பதால், விதைகளின் தரத்தில் கவனமுடன் இருக்குமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
விதையே இடுபொருள் (Seed input)
வேளாண்மை உற்பத்திக்கு விதையே இடுபொருளாகும். விவசாயிகளுக்குத் தரமான விதைகள் கிடைக்கச் செய்வதற்காக தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையின் கீழ் விதைச்சான்றளிப்பு, விதை ஆய்வு, விதைப்பரிசோதனை மற்றும் பயிற்சி குறித்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விதைப் பரிசோதனை (Seed test)
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருக்கோகர்ணத்தில் விதைப்பரிசோதனை நிலையம் இயங்கி வருகிறது. இங்கு விதையின் தரத்தை அறிய விதைப் பரிசோதனை செய்யப்படுகிறது.
இப்பரிசோதனையில் முளைப்புத் திறன், புறத்தூய்மை, ஈரப்பதம் மற்றும் பிற ரகக் கலப்பு கண்டறியப் பட்டு உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இவ்விதைப் பரிசோதனை நிலையத்தில் சான்று விதை, ஆய்வாளர் விதை, விவசாயிகளிடமிருந்தும், விதை விற்பனையாளர்களிடமிருந்தும் விதை உற்பத்தியாளர்களிடமிருந்தும் பெறப்படும் பணி விதை மாதிரிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது.
முளைப்புத்திறன் (Germination)
விதைச்சட்டம் 1966 பிரிவு 7 (பி) யின் படி ஒவ்வொரு பயிருக்கும் குறைந்த பட்ச முளைப்புத்திறன் தரம் நிர்ணயம் செய்து அறிவிக்கப் பட்டுள்ளது.
நெல்லுக்கு விதையின் குறைந்தபட்ச முளைப்புத்திறன் 80சதவீதமும்,
வீரிய மக்காச்சோளப்பயிருக்கு 90 அல்லது 80சதவீதமும் இருத்தல் அவசியமாகிறது.
உளுந்து, துவரை, பாசிப்பயறு வகைகளுக்கு 75 சதவீதமும்,
நிலக்கடலைக்கு 70 சதவீதமும், எள்ளுக்கு 80சதவீதமும் தேவை.
இதேபோல், காய்கறிப் பயிர்களுக்கு 80சதவீதமும், மிளகாய், பூசணி, பரங்கிக்காய், புடலைங்காய், பாகற்காய், பீர்க்கன்காய், தர்பூசணிக்கு 60 சதவீதமும், வெண்டைக்காயிற்கு 65 சதவீதமும் இருக்க வேண்டும். கம்பு, சோளம், கேழ்வரகு, சாமை, மற்றும் குதிரைவாலிக்கு 75 சதவீதம் குறைந்தபட்ச முளைப்புத்திறன் தேவை.
விதைப்பரிசோதனை (Seed test)
ஒவ்வொரு விவசாயியும் சாகுபடி செய்ய வாங்கும் விதைகளையோ அல்லது தங்கள் கைவசம் உள்ள விதைகளையோ விதைப்பதற்கு முன் முளைப்புத்திறன் அறிய விதைமாதிரிகளை விதைப்பரிசோதனை செய்து கொள்ளலாம்.
பயிர் மற்றும் ரகம் குவியல் எண் குறித்த விபர சீட்டுடன், நெல் விதை 50 கிராம், உளுந்து, பாசிப்பயறு 100 கிராம், மக்காச்சோளம், நிலக்கடலை 500 கிராம், எள், ராகி 25 கிராம், காய்கறிப் பயிர்களான கத்திரி, தக்காளி, மிளகாய் 10 கிராம், சுரை, பரங்கி, வெள்ளரி-100 கிராம், பாகல், புடல்-250 கிராம் ஆகிய அளவில் விதைமாதிரியாகச் செலுத்த வேண்டும்.
தகவல்
செ.சுமித்ராதேவி
விதைப் பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர்
மற்றும்
மா.செல்வம்
வேளாண்மை அலுவலர்
மேலும் படிக்க...
Share your comments