தோட்டம் அமைப்பதற்கான போதிய வசதி இல்லாத சூழ்நிலையில் மாடித்தோட்டம் அமைத்து நமக்குத் தேவையான காய்கறி வகைகளை பயிரிடலாம். பொதுவாக மாடித்தோட்டத்தில் காய்கறி என்றதும் நம் மனது தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய் என்றே செல்லும். மாடித்தோட்டத்தில் பயிரிட ஏற்ற கவனிக்கப்படாத ஹீரோ என்றால் அது முள்ளங்கி தான்.
ஒரே வகையான காய்கறியை நீங்கள் மாடித்தோட்டத்தில் தொடர்ச்சியாக பயிரிடுவதால் விரைவில் மண்ணின் சத்து முதற்கொண்டு குறைவதற்கு வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க பயிர் சுழற்சி முறையில் காய்கறி சாகுபடியினை மாடித்தோட்டத்தில் மேற்கொள்ளலாம். அந்த வகையில் முள்ளங்கி எந்த வகையில் மாடித்தோட்டத்துக்கு ஏற்ற காய்கறி, அவற்றுக்கு மாற்றுப் பயிர் என்ன போடலாம் போன்ற தகவல்களினை இந்த பகுதியில் காணலாம்.
துணை நடவு:ஊடுபயிர்
முள்ளங்கிகள் ஊடுபயிராக பயிரிட சிறந்த தாவரமாக கருதப்படுகிறது. வெள்ளரி வண்டுகள் போன்ற சில பூச்சிகளை விரட்டுவதன் மூலம் அண்டை பயிர்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் மகரந்தச் சேர்க்கை போன்ற நன்மை பயக்கும் பூச்சிகளை ஈர்க்கின்றன.
மண் ஆரோக்கியம்:
முள்ளங்கிகள் சிறந்த உயிர் குவிப்பான்கள், அதாவது அவை மண்ணின் ஆழத்தில் இருந்து ஊட்டச்சத்துக்களை எடுத்து அவற்றின் வேர்களில் குவிக்கும். முள்ளங்கியினை அறுவடை செய்யும் போது, அவை இந்த ஊட்டச்சத்துக்களை மீண்டும் மண்ணில் வெளியிடுகின்றன. இதன் மூலம், மண்ணின் ஆரோக்கியத்தையும் வளத்தையும் மேம்படுத்துகின்றன.
விரைவாக வளரும்:
முள்ளங்கிகள் குறுகிய கால பயிர் என்பது கூடுதல் சிறப்பு. மூன்று முதல் நான்கு வாரங்களில் அறுவடை செய்யலாம். இதனால் தோட்டக்கலையில் ஈடுபட விரும்புவோர் மற்றும் குறைந்த இடவசதி உள்ளவர்களுக்கு ஏற்ற ஒரு பயிராக முள்ளங்கி திகழ்கிறது.
உண்ணக்கூடிய கீரைகள்:
முள்ளங்கி கிழங்கைப் போன்றே, அதன் மேற்பகுதி கீரையும் உண்ணக்கூடியவை மற்றும் சத்தானவை. அவற்றை கழிக்காமல், உணவு முறையில் எந்த வகையில் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். முள்ளங்கி கீரைகளை சமைக்காமல் அதனை சாலட் போலவும் சாப்பிடலாம். இவை சிறுநீரகம் தொடர்பான நோய்கள், இரைப்பை கோளாறு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாக அறியப்படுகிறது.
முள்ளங்கிக்கு மாற்று- பயிர் சுழற்சி முறை:
மாடித்தோட்டத்தில் ஒரே வருடத்தில் பயிர் சுழற்சி முறையில் சாகுபடி செய்ய தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை ஒரு அட்டவணை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, நீங்கள் கீரைகளை முதல் பயிராக போட்டிருந்தால், இரண்டாவது பயிராக முள்ளங்கியினை பயிரிடுங்கள். ஒருவேளை முள்ளங்கியினை முதல் பயிராக பயிரிட்டிருந்தால், அடுத்து வெண்டை, தக்காளி என பயிர் சுழற்சி முறையில் பயிரிட்டு பயனடையுங்கள்.
இப்போது உங்களுக்கு ஒரளவு புரிந்திருக்கும், மாடித்தோட்டத்தில் பயிரிட ஏன் முள்ளங்கி ஒரு சிறந்த பயிர் என்று. மேலும், இதுத்தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் அருகிலுள்ள தோட்டக்கலைத்துறை அலுவலர்களை தொடர்புக் கொள்ளுங்கள்.
Read more:
Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா?
Share your comments