திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் காய்கறி பயிர் சாகுபடி செய்பவர்களுக்கு ரூ.18லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திட்டங்கள் (Projects)
மத்திய, மாநில அரசுகள், 2021-22ம் நிதியாண்டில் தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் வாயிலாக மடத்துக்குளம் பகுதிக்கு நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
முருங்கை (Drumstick)
முருங்கை பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு, இரண்டரை ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் 10 ஏக்கர் பரப்பிற்கு மானியம் வழங்குகிறது.
ரூ.4 லட்சம் ஒதுக்கீடு
பனை மரத்தை அதிக பரப்பில் நடவு செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க இரண்டரை ஏக்கருக்கு ரூ.500 வீதம், 125 ஏக்கர் பரப்பிற்கு ரூ.25,000மும், வெங்காயம் சாகுபடிக்கு இரண்டரை ஏக்கருக்கு ரூ.20,000 வீதம் 50 ஏக்கர் பரப்பிற்கு ரூ.4லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பழங்கள் நடவுக்கும் (Planting fruits)
வெப்ப மண்டலப் பழ வகைகளான அத்தி, கொடுக்காபுளி, இலந்தை, நாவல், விளாம்பழம், போன்ற பழ விதைகளை நடவு செய்ய இரண்டரை ஏக்கருக்கு ரூ.15,000ம் வழங்கப்படுகிறது.
ரூ.6 லட்சம் ஒதுக்கீடு (An allocation of Rs. 6 lakhs)
இதேபோல், பந்தல் காய்கறிகளான பாகற்காய், புடலை, பீர்க்கங்காய், சுரைக்காய், போன்ற காய்கறிகளைப் பந்தலில் பயிரிட இரண்டரை ஏக்கருக்கு ரூ.2,00,000 வீதம் 7.5 ஏக்கருக்கு ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் இரண்டரை ஏக்கருக்கு ரூ.5,000 வீதம் 375 ஏக்கருக்கு ரூ.7,50,000ம் வழங்கப்படும்.
காய்கறி அதிகம் பயிரிடாத கிராமத்தில் புதியதாகக் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வதை ஊக்குவிக்க ஏதுவாக, இரண்டரை ஏக்கருக்கு ரூ.32,000 வீதம் இரண்டு ஏக்கருக்கு ரூ.64,000 மானியம் வழங்க மொத்தம் ரூ.18 லட்சம் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த மானியங்களைப் பெற விரும்பும் விவசாயிகள் தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன்-96598 38787, பிரபாகரன்-75388 77132 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.
அல்லது உழவன் செயலியில் பதிவு செய்யலாம்.
அனைத்து திட்டங்களிலும் ஆதிதிராவிட விவசாயிகளுக்குத் தனி ஒதுக்கீடு இருப்பதால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இந்தியாவில் எலக்ட்ரிக் சைக்கிள்: பிரிட்டிஷ் நிறுவனம் அறிமுகம்!
தனிநபர் தகவல்களை பகிர மாட்டோம் என உறுதி அளித்தது வாட்ஸ் ஆப்!
Share your comments