1. தோட்டக்கலை

தென்னை மரங்களில் வெள்ளை ஈ பாதிப்பு : வேளாண் துறையினர் ஆய்வு!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

ஓசூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் ஏற்பட்டுள்ள 'ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ' (Rugose spiralling whitefly), தாக்குதலை வேளாண் துறை உதவி இயக்குனர் நேரில் ஆய்வு செய்து அதனை தடுக்கும் முறை குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சின்னகொள்ளு, தட்டிகானப்பள்ளி, பஞ்சாட்சிபுரம், முத்தாலி, பெத்தகொள்ளு, சூடுகொண்டப்பள்ளி, நல்லூர் அக்ரஹாரம், தொரப்பள்ளி அக்ரஹாரம், முகளூர், ஆலூர், பெலத்தூர், கெலவரப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 'ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ' தாக்குதலால் தென்னை மரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஓசூர் வேளாண் துறை உதவி இயக்குனர் மனோகரன், தென்னை விவசாய தோட்டங்களில் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தென்னை மரங்களில் ஏற்படும் 'ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ' நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

'ஈ' - தாக்குதலைத் தடுக்கும் முறைகள்

  • தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வயல்களில் களை இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

  • ஒரு ஏக்கருக்கு, இரண்டு என்ற எண்ணிக்கையில், சூரிய விளக்கு பொறிகள் வைக்க வேண்டும். அதுவும் இரவு, 7:00 முதல், 11:00 மணி வரை வைத்தால் நல்லது.

  • மஞ்சள் நிற ஒட்டு பொறிகளை, ஏக்கருக்கு, பத்து என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.

  • ஒட்டுண்ணிகளான என்கார்சியா ஷெய்டெரிசை, ஒரு ஏக்கருக்கு, 100 என்ற எண்ணிக்கையில் வைக்கலாம்.

  • என்கார்சியா காடெல்பேவை,100 எண்ணிக்கையில், மரத்தின் அடிப்பாகத்தில் இட வேண்டும்.

  • இலையின் மேல் காணப்படும் கரும்பூசணங்களின் மீது, மைதா மாவு பசை கரைசலைத் தெளிக்கலாம்.

  • வேப்ப எண்ணெய் மூன்று சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை சாறு, 5 சதவீதம் தெளிக்கலாம்.

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ' தாக்கம்

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ' நோய் ஏற்பட்ட தென்னை மர இலையின் அடிப்பகுதியில், வட்ட அல்லது சுருள் வடிவில், 5,000 முட்டைகள் இருக்கும். இதிலிருந்து, 47 நாட்களில் குஞ்சுகள் வெளிப்பட்டு, 15 நாட்கள் வரை தென்னை இலையில் சாறு உறிஞ்சிய பின் முழு வளர்ச்சியடைந்து, ஈக்களாக மாறி, காற்றின் திசையில் பரவி, அடுத்தடுத்த மரங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். ஈக்கள் கூட்டம் கூட்டமாக, தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில், 20 நாட்கள் வரை காணப்படும். பசை போன்ற கழிவு திரவம் இலையில் காணப்படும். இலையின் மேல் படர்ந்து, கரும்பூசணம் வளர ஏதுவாகிறது.

தென்னை, பாக்கு மரங்களைத் தொடா்ந்து வாழை, சப்போட்டா, மரவள்ளி, கொய்யா, மா, பலா, பப்பாளி, வெண்டை, கறிவேப்பிலை, சீதாப்பழம் உள்ளிட்ட தோட்டக்கலைப் பயிா்களிலும் வெள்ளை ஈக்கள் தாக்குதலை ஏற்படுத்துதி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட தோட்டக்கலை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ.700 வழங்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary: Rugose spiraling whitefly invasion on coconut tress in tamilnadu horiculture department visits the spot Published on: 31 May 2020, 07:24 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.