குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நேற்று (11.3.2024) தலைமைச் செயலகத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பட்டு வளர்ச்சி துறையின் மூலமாக 2 இளம் புழு வளர்ப்பு மையம், ஒரு பட்டுப் புழு விதை உற்பத்தி மையம் அமைக்க 3 பயனாளிகளுக்கு ரூ. 1.81 கோடி மானியம் வழங்கினார்கள்.
தமிழ்நாடு பட்டுவளர்ச்சித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் அரசு பட்டுமுட்டை உற்பத்தி நிலையத்தின் மூலமும் தரமான மற்றும் நோயற்ற பட்டு முட்டை உற்பத்தி செய்யப்பட்டு, பட்டுப்புழு வளர்ப்பு விவசயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
பட்டு முட்டைத் தொகுதி:
தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பட்டு முட்டைத் தேவையினை கருத்தில் கொண்டும், தரமான பட்டு முட்டைத் தொகுதிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு தடையின்றி வழங்கிடவும், தனியார் தொழில் முனைவோரை பட்டு முட்டைத் தொகுதிகள் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும் வகையிலும், 2023-24 ஆம் ஆண்டின் பட்டுவளர்ச்சித் துறைக்கான அறிவிப்பில் "தனியார் தொழில் முனைவோர் மூலம் ரூபாய் 2 கோடியே 16 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு பட்டுப்புழு விதை உற்பத்தி மையம் (வித்தகம்) நிறுவப்படும் என குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்து இருந்தார்.
அதன்படி, தரமான பட்டுமுட்டை உற்பத்தி செய்து பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கிடும் நோக்கத்தில் திருப்பூர் மாவட்டம் மானுப்பட்டியில் ரூ.2.16 கோடி மதிப்பில் 30 இலட்சம் பட்டுமுட்டைகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட பட்டுமுட்டை உற்பத்தி மையம் அமைத்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அகல்யா என்ற பெண் தொழில் முனைவோருக்கு உதவித்தொகையாக ரூ.1 கோடியே 62 இலட்சம் ரூபாய் உதவித்தொகை அமைச்சரால் வழங்கப்பட்டது.
கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மேம்பாட்டிற்கு 14 அரசு பட்டுப் பண்ணைகளில் ரூ.98 இலட்சம் மதிப்பில் 14 இளம்புழு வளர்ப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளது. ஆகமொத்தம் இது நாள் வரை ரூ.1 கோடியே 7 இலட்சம் மதிப்பீட்டில் 16 இளம்புழு வளர்ப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இளம்புழு வளர்ப்பு மையம்:
பட்டு முட்டை பொரித்தது முதல், இரண்டாம் தோலுரிப்பு வரையிலான 7 நாட்கள் புழு வளர்ப்பில், தரமான மல்பெரி இலைகளை உணவளிப்பதிலும், சுகாதாரம் பேணுவதிலும், தேவையான தட்ப-வெப்ப நிலைகளைப் பராமரிப்பதிலும், சிறப்பான கவனிப்பு தேவைப்படுகிறது. இளம் பட்டுப்புழுக்களைப் பெற்று பட்டுப்புழு வளர்ப்பு மேற்கொள்வதன் மூலம் விவசாயிகள் தரமான பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்து அதிக வருமானம் பெற முடிகிறது.
ஆகவே, இளம்புழு வளர்ப்பு மையம் அமைக்க தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், 2023-24 ஆம் ஆண்டின் பட்டுவளர்ச்சித் துறை அறிவிப்பில் ரூபாய் 26 இலட்சம் மதிப்பீட்டில் 2 பெரிய அளவிலான இளம்புழு வளர்ப்பு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
Read also: இறைச்சிக்கு மாற்றாக தயார் நிலையில் பலாக் கறி: அசத்திய ICAR- IIHR விஞ்ஞானிகள்
அரசு மற்றும் தனியார் வித்தகங்களிலிருந்து நோயற்ற பட்டுமுட்டைத் தொகுதிகளைப் பெற்று, பொரிப்பு செய்து, தட்பவெப்ப நிலைகளைப் பராமரித்து ஆரோக்கியமான சூழலில் இளம்புழுக்களை வளர்ப்பு செய்து பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்திடும் வகையில், இளம்புழு வளர்ப்பு மையங்கள் அமைத்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த A.கனகராஜ், மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த P.பூபதி ஆகிய பயனாளிகளுக்கும் தலா ரூ.9.75 இலட்சம் வீதம் மொத்தம் 19 இலட்சம் ரூபாய் உதவித்தொகைக்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வில் கைத்தறி, கைத்திறன். துணிநூல் மற்றும் கதர் துறை முதன்மைச்ப்செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இ.ஆ.ப. மற்றும் பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் சந்திர சேகர் சாகமுரி இ.ஆ.ப ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read more:
ஒவ்வொரு முள்ளங்கியும் 15 கிலோவா? ஆச்சரியத்தை தரும் விவசாயி
StartupTN- TNAU புதிய மன்றம் தொடக்கம்: வேளாண் பணிகளுக்காக மயாபோட்ஸ்-எக்ஸ் 1 ரோபோட்!
Share your comments