கோடை காலத்தில் பெய்யும் மழையைப் பயன்படுத்தி உழவு செய்தால், கோடி நன்மை கிடைக்கும் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உழவின் உக்தி
கோடை மழை, காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மழை, வடகிழக்குப் பருவமழையால் பெய்த மழை ஆகியவற்றைப் பயன்படுத்திக்கொண்டு உழவு செய்ய வேண்டும்.
இதுத் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொறுப்பு வகிக்கும் க.வனஜாதேவி, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
மணமேல்குடி வட்டாரத்தில் தற்போது பெறப்படும் மழையைப் பயன்படுத்தி கோடை உழவு மேற்கொள்வது மகவும் அவசியமாகும்.
மேல்மண் வெப்பம் (Topsoil heat)
ஏனெனில், நமது பூமி வெப்ப மண்டலமாக இருப்பதால் கோடையில் மேல் மண் அதிக வெப்பமடைகிறது. இந்த வெப்பம் கீழ்ப்பகுதிக்குச் செல்லும் பொழுது நிலத்தடிநீர் ஆவியாகி வெளியேறிவிடும்.
தொடர்பு நீங்கும் (Contact will be deleted)
மேல் மண்ணை உழவு செய்து ஒரு புழுதிப்படலம் அமைத்துவிட்டால் விண்வெளிக்கும் வேர்சூழ் மண்டலத்திற்கும் தொடர்பு அறுந்து விடும். இதனால் நிலத்தில் உள்ள ஈரம் ஆயாக விடாமல் இப்புழுதிப் படலம் தடுத்து விடுகிறது.
பல நன்மைகள் (Many benefits)
எனவே கோடை மழையின் ஈரத்தைப் பயன்படுத்தி நிலத்தை நன்கு உழவு செய்வதால் நன்மைகள் பல கிடைக்கும்.
விரைவில் குளிரும் (Cooling soon)
கோடை உழவு செய்வதால் மேல் மண் துகள்களாகின்றன. இதனால் மண் வெப்பத்தை உறிஞ்சி விரைவில் குளிர்ந்துவிடும். எனவே, நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிக்கும்.
மண்வளம் பெருகும் (The soil is fertile)
கோடை உழவு செய்வதால் மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும். இதனால் மண்ணில் நுண்ணுயிரிகளின் செயல்பாடு அதிகமாகி மண்வளம் பெருகும்.
களைகள் கட்டுப்பாடு (Weed control)
வயலில் உள்ளக் களைகள் குறிப்பாகக் கோரைப் போன்ற களைகள், கோடை உழவு செய்வதால் மண்ணின் மேற்பரப்புக்குக் கொண்டுவரப்பட்டு சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது.
எனவேக் குறிப்பாக ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையில் கோடை உழவு செய்வது மிகவும் சிறந்தத் தொழில்நுட்பமாகும்.
பூச்சித் தாக்குதல் குறையும் (Insect attack will decrease)
கோடை உழவு செய்வதால் நிலத்திற்கு அடியில் உள்ள கூண்டுப் புழுக்கள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள், வெளியேக் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன. இதனால் வரும் பருவத்தில் பூச்சி நோய்த் தாக்குதல் பெருமளவு குறைகிறது.
மண் அரிப்பு தடுப்பு (Soil erosion prevention)
கோடை உழவினைச் சரிவிற்குக் குறுக்கே உழும்பொழுது மண் அரிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. கோடை உழவு செய்யாத நிலத்தில், நீர் வேகமாக வழிந்தோடி மண் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
நீர் சேமிப்பு (Water storage)
வயல்வெளிகளில் பெய்யும் மழை நீரை சேமிப்பதில் கோடை உழவு முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வாறு பல நன்மைகள் கோடை உழவினால் ஏற்படுவதால் கோடை உழவு கோடி நன்மை எனக் கூறப்படுகிறது.
விவசாயிகள் முன்வர வேண்டும் (Farmers need to come forward)
எனவே, மணமேல்குடி வட்டார விவசாயிகள் கோடையில் பெறப்படும் மழையைப் பயன்படுத்தித் தங்களது நிலத்தில் மழை நீரைச் சேமிக்கவும், பூச்சி, நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும், கோடை உழவு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தேனியில் உரிய பருவத்தில் பாசன நீர்! உணவு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு
மண் மாதிரியை பரிசோதித்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண் இயக்குநர் வேண்டுகோள்!
Share your comments