துளசி, ஆயுர்வேத மருத்துவத்தில் பிரபலமான மூலிகையாகும் மற்றும் பெரும்பாலும் இவற்றினை பலர் தங்களது வீட்டுத் தோட்டங்களில் வளர்த்து வருகின்றனர். வடகிழக்குப் பருவமழை தீவிரமெடுத்துள்ள நிலையில் குளிர்காலமும் நெருங்கத் தொடங்கியுள்ளது தமிழகத்தில்.
குளிர்காலத்தில் முறையாக செடிகளை பராமரிக்கவில்லை என்றால் அவை பட்டுப்போவதற்கு வாய்ப்பு அதிகம். மருத்துவம், இறைவழிபாடு என அன்றாடம் பயன்படுத்தும் துளசியை வருகிற குளிர்காலத்திலிருந்து பாதுகாக்க அல்லது பராமரிக்க விரும்பினால் கீழ்கண்ட சில வழிமுறைகளை பின்பற்றவும்.
போதுமான சூரிய ஒளியை வழங்கவும்: துளசி செடிகள் சூரிய ஒளியில் செழித்து வளரும். உங்கள் துளசி செடி ஒவ்வொரு நாளும் குறைந்தது 6-8 மணிநேர சூரிய ஒளியைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில், வெயிலின் தன்மை குறைவாக இருக்கும், எனவே துளசி செடி சூரிய ஒளியை கூடுதலாக பெற செயற்கை ஒளியினை (artificial light) பயன்படுத்துவது உதவியாக இருக்கும்.
நீர்ப்பாசனத்தை கட்டுப்படுத்தவும்: துளசி செடிகளுக்கு வழக்கமான நீர்ப்பாசனம் தேவைப்பட்டாலும், அவை தண்ணீர் தேங்குவதை விரும்புவதில்லை. குளிர்காலத்தில், மண் ஈரப்பதத்தை நீண்ட காலத்திற்கு தக்கவைத்துக்கொள்ளும், எனவே தண்ணீர் அதிகமாகாமல் தேங்குவதை தவிருங்கள். மீண்டும் நீர்ப்பாசனம் செய்வதற்கு முன் மேல் மண் உலர்ந்திருக்கிறதா என்பதை கண்காணியுங்கள்.
உறைபனியிலிருந்து பாதுகாக்க: துளசி குளிர் வெப்பநிலை மற்றும் உறைபனிக்கு உணர்திறன் கொண்டது. வெப்பநிலை கணிசமாகக் குறையும் ஒரு பகுதியில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், மிகவும் குளிரான இரவுகளில் செடியை வீட்டிற்குள் கொண்டு வரவும் அல்லது செடியினை முழுமையாக மூடி பாதுக்காக்கவும்.
சிக்கனமாக கத்தரிக்கவும்: குளிர்காலத்தில் கடுமையான கத்தரித்தல் தவிர்க்கவும். உங்கள் துளசியை ட்ரிம் செய்ய வேண்டுமானால், அதை குறைவாக செய்யுங்கள். கத்தரித்தல் புதிய வளர்ச்சியைத் தூண்டும், இது குளிர் வெப்பநிலையால் பாதிக்கப்படலாம்.
தழைக்கூளம்: செடியின் அடிப்பகுதியைச் சுற்றி தழைக்கூளம் அடுக்கி வைக்கவும். தழைக்கூளம் மண்ணின் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும், வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும், தீவிர வெப்பநிலை ஏற்ற இறக்கங்களிலிருந்து வேர்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.
பூச்சி கட்டுப்பாடு: குளிர்காலத்தில் கூட, உங்கள் துளசி செடியை பூச்சிகள் தாக்குகிறதா என்பதை கவனிக்கவும். பூச்சிகள் குறைவான அளவில் இருக்கலாம், அதே நேரத்தில் அவை அச்சுறுத்தல் தரக்கூடியதாகவும் இருக்கலாம். தேவைப்பட்டால் பொருத்தமான பூச்சி கட்டுப்பாடு முறைகளைப் பயன்படுத்தவும்.
மேற்குறிப்பிட்ட வழிமுறைகள் துளசியின் வகை மற்றும் உங்கள் இருப்பிடத்தின் தட்பவெப்பநிலையைப் பொறுத்து மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களது பகுதி வானிலைக்கு ஏற்றவாறு துளசி செடி உட்பட மற்ற தோட்ட வகை செடிகளை பராமரிக்க அருகிலுள்ள தோட்டக்கலை நிபுணர்கள் அல்லது நர்சரிகளை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
இதையும் காண்க:
ஸ்மார்ட் விவசாயியாக நீங்க மாற IoT-யின் 7 பயன்பாடுகள் இதோ
சம்பாவைத் தொடர்ந்து நவரை பயிர் காப்பீடுக்கான இறுதி தேதி அறிவிப்பு
Share your comments