தற்போது வீட்டிலேயே மாடித்தோட்டம் அமைத்து அதன் மூலமாக நஞ்சில்லா, இரசாயன கலப்பு இல்லாத சத்தான காய்கறிகளை உணவாக சமைத்து சாப்பிட வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் உண்டு. வீட்டிலேயே முடங்கியிருக்கும் குடும்பத் தலைவிகள் பொழுது போக்குக்காகவும் மாடித்தோட்டம் அமைத்து பராமரிக்கின்றனர்.
ஐடி போன்ற துறைகளில் பணிப்புரிபவர்கள் வேலைப்பளுவினால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபட மாடிதோட்டத்தில் கவனம் செலுத்தி வருவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாடித்தோட்டம் அமைக்க கவனிக்க வேண்டியவை என்ன? செய்ய வேண்டிய விஷயங்கள் என்னெல்லாம் இருக்கிறது என்பது குறித்து வேளாண் ஆலோசகரான அக்ரி சு.சந்திர சேகரன் பல்வேறு தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு-
மாடித்தோட்டம் அமைக்க கவனிக்க வேண்டியவை?
- முதலில் உங்களுடைய வீடு மாடித்தோட்டம் அமைக்க ஏற்றதாக உள்ளதா? என உறுதி செய்ய வேண்டும்.அதுவும் வாடகை வீடு என்றால் வீட்டின் உரிமையாளரிடம் அனுமதி பெற்றே அமைக்க வேண்டும். இல்லையெனில், தேவையற்ற விவாதங்கள் , பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
- காய்கறிவிதை வளர்ப்புப் பை (GROW BAG) போன்றவை உள்ளிட்ட கிட் தோட்டக்கலைத் துறை முலமாக நகர்ப்புற வாசிகளுக்கு ஒரு குடும்பத்திற்கு , 2 கிட் வீதமாக வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனராக அலுவலகத்தில் 50% மானியத்தில் வழங்கப்படுகிறது. மாடித்தோட்டம் அமைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் அதனை வாங்கி பயன்படுத்திடலாம்.
- செடிகளை வளர்க்க வீட்டுல பயனற்று போன தண்ணீர் கேன், பழைய பிளாஸ்டிக் குடம், பக்கெட் வாளி, மண்சட்டிகள் போன்றவற்றை பயன்படுத்திடலாம்.
- காய்கறி விதைகள் அருகேயுள்ள உரக்கடை மற்றும் முன்னோடி விவசாயிகளிடத்தில் வாங்கி கொள்ளலாம்.
- தொட்டிகளில் மண் நிரப்பும் போது (POT MIXTURE) மக்கிய தொழு உரம்+மணல்+செம்மண் கலந்த கலவையை அதனுடைய விளிம்பு வரை அழுத்தி நிரப்பக்கூடாது.
- தொட்டில் 3/4 பங்கு அளவு உயரத்திற்கு, நிரப்பினாலே போதும். மண்ணை நிரப்புவதற்கு முன் அந்த தொட்டி( பாத்திரம்) அடியிலே ஓட்டை (துளைகள்) இருக்கிறதா ? என பார்த்துக் கொள்ளவும்.
- பெரும்பாலும் நாட்டு காய்கறி விதைத்தால் மறுபடியும் அடுத்த பருவத்திற்கு தேவையான விதைகளை எடுத்து வைக்கலாம்.
- கழிவு நீர்,சோப்பு கலக்காத நீரை பயன்படுத்தலாம்.சொட்டுநீர் பாசன மற்றும் RAIN GUN முறையினை பயன்படுத்தியும் நீர் பாய்ச்சலாம்.
- பூச்சி/நோய் தாக்குதல் தென்பட்டால் தாவர பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தலாம்.
- கூடுதலான மகசூல் பெற மீன் அமிலம், பஞ்சகாவ்யா, மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தலாம்.
- தினமும் வீடுகளில் மிச்சமாகும் காய்கறி கழிவுகள், முட்டை ஓடு போன்றவற்றை ஒரு தொட்டியில் கொஞ்சம் மண் போட்டு காய்கறி கழிவுகளை அதன்மேல் போட்டு சாணக்கரைசல் தெளித்து கிளறி விட்டால் அதுவே மக்கிய இயறகை உரமாகி விடும். எவ்வித செலவின்றி இதனை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
- கொடிவகை காய்கறி செடிகள் பந்தலில் படர வலைபின்னல் பந்தல் அமைக்கலாம்.
- கீரைவகைகளை தனி தனியாக தொட்டியிலே வளர்க்கலாம்.
இரசாயன கலப்பின்றி நம்முடைய உழைப்பால் கிடைத்த காய்கறிகளை பச்சைப்பசேல் என்று பறித்தவுடன் சமைத்தாலே அதுவே ஓரு மட்டற்ற மகிழ்ச்சியை தரும் என்பதில் மாற்றுக் கருத்து உண்டா? மாடித்தோட்டம் அமைப்போம் மனநிறைவுடன் வாழ்வோம் என வேளாண் ஆலோசகர் அக்ரி சு.சந்திர சேகரன் குறிப்பிட்டுள்ளார். (அக்ரி சு.சந்திர சேகரன்- தொடர்புக்கு: 94435 70289)
Read more:
உட்புற அறையில் குங்குமப்பூ சாகுபடி- லட்சங்களில் வருமானம் ஈட்டும் 64 வயது பெண்!
வேப்பங் கொட்டை சாறு- இயற்கை பூச்சி விரட்டியாக பயன்படுவது எப்படி?
Share your comments