வரத்து குறைவால், தமிழகத்தில் தக்காளி விலை மீண்டும் 100 ரூபாயை எட்டும் ஆபத்து உருவாகியுள்ளது.
சமையலின் அடிப்படை (The basis of cooking)
எந்த உணவை சமைக்க வேண்டுமானாலும், அதற்கு வெங்காயமும், தக்காளியும் மிக மிக அவசியம்.எனவேதான் சமையலுக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களில் இவை இரண்டும் இடம்பெற்றுள்ளன. மேலும் இவை இரண்டும் விலை உயரும்போது, மக்கள் பெரிதும் கவலைப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
மழை, பனி உள்ளிட்டக் காலங்களில் தக்காளி மகசூல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. அப்போது, தக்காளி விலை கிடுகிடுவென அதிகரிப்பது வழக்கம்.
கிலோ ரூ.150 (Rs 150 per kg)
அந்த வகையில், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கடந்த மாதம் பெய்தத் தொடர் கனமழையால், கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து மூன்றில் ஒரு பங்காக குறைந்தது.இதனால் தக்காளியின் விலை கடந்த மாதம் பல மடங்கு அதிகரித்தது. சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ150 வரை விற்கப்பட்து.
இதை கட்டுப்படுத்தும் விதமாக மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி விலையும் படிப்படியாக குறைய தொடங்கியது.
வரத்து குறைவு (Low supply)
ஆனால் கோயம்பேடு மார்கெட்டுக்கு தற்போது 39 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. வரத்து குறைவு காரணமாக தற்போது தக்காளியின் விலை மீண்டும் அதிகரித்து உள்ளது.
இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கும், மார்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் கிலோ ரூ.80 வரையிலும் விற்கப்படுகிறது.
உற்பத்தி பாதிப்பு (Production impact)
இதுகுறித்து தக்காளி மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-
கடந்த வாரம் வரை ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து தினசரி 60க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்து வந்தது. இதனால் தக்காளி விலை கட்டுக்குள் வந்து விலையும் குறைந்தது.
அதே நேரத்தில் வடமாநிலங்களிலும் தக்காளி விலை அதிகரித்துவிட்டதால் அங்கிருந்து தக்காளியை கொண்டு வர வியாபாரிகள் அதிகளவில் ஆர்வம் காட்டவில்லை. மேலும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தக்காளி உற்பத்தி முழுவதுமாக சீரடையவில்லை.
பெட்டி ரூ.900
இதன் காரணமாகவே சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் முதல் ரக தக்காளி ஒரு பெட்டி (14கிலோ) ரூ.480-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று 2 மடங்கு அதிகரித்து ஒரு பெட்டி தக்காளி ரூ.900-க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், தமிழகத்தின் பல பகுதிகளிலும் தக்காளி விலை ரூ.100 யைக்கூட எட்டக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
பாம்பைக் கொண்டு ஸ்கிப்பிங்- இணையத்தில் வைரலாகிறது!!
குளிரில் நடுங்கும் குட்டியானைகள்: போர்வை போர்த்தி பராமரிப்பு!
Share your comments