இயற்கை விவசாயத்தை பற்றி இன்று நம்மில் பேசாதவர்கள் வெகு குறைவு எனலாம். எங்கும், எதிலும் நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை இயற்கை, இயற்கை விவசாயம் என்பதாகி விட்டது. உண்மையில் நமக்கு இயற்கை விவசாயத்தின் புரிதல் என்பது எந்தளவிற்கு உள்ளது? இயற்கை விவசாயத்தின் அவசியம் என்ன? மண்ணையும் மனிதனையும் பாதுகாப்பதற்கு மட்டுமா? நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் பரிந்துரைத்து தான் என்ன?
இயற்கை வேளாண்மையின் அடிப்படைகள் பற்றிய நம்மாழ்வாரின் ஆழ்ந்த புரிதலும், அனுபவமும் இங்கு பலரை, பல வேளாண் நிலங்களை செம்மை படுத்தி வருகிறது. ஆனால் நமக்கு ஆழமான புரிதல் சற்று குறைவாகவே உள்ளது. இயற்கை விவசாயத்தின் அவசியத்தை தெரிந்துக் கொள்வதற்கு முன்பு நாம் எவற்றை எல்லாம் இழந்துள்ளோம் ரசாயன விவசாயத்தின் மூலம்.
5000 ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் பயிர் சாகுபடியில் ஈடுபட்டிருந்ததாக அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு என்பது முன்னோர்களின் வாழ்வில் ஒரு அங்கமாகவே இருந்தது. பழங்காலத்தில் நாம் 166- க்கு அதிகமான பயிரினங்கள் பயன் படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நெற்பயிரில் மட்டும் 50,000 இனங்கள் இருந்ததாகவும், சோளத்தில் 5000 ரகங்கள் இருந்ததாகவும், மிளகுப் பயிரில் 500 வகைகள் இருந்ததாகவும், மாமரத்தில் 1000 வகைகள் இருந்ததாகவும் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். அதே போன்று விலங்கினங்களில் கூட எண்ணற்ற வகையான இனங்கள் இருந்துள்ளன. வெள்ளாட்டில் 20 வகை, செம்மறியில் 42 வகை, எருமையில் 15 வகை, கால்நடையில் 30 வகை, கோழியில் 18 வகை என விலங்கினங்கள், பறவைகள் வாழ்ந்ததாக கூறியுள்ளார்.
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற கோட்பாட்டிற்கு இணங்க மனிதன் மட்டும் அல்லது பிற உயிர்களுடன் இணைந்து அதாவது நம்மை சுற்றியுள்ள மரம், செடி, கொடிகளும், கால்நடைகளும், பறவைகளும் என அனைத்தும் நலமாய் வாழ்வதற்குரிய சூழல் உருவாக்க வேண்டும். பூமியில் பல நுண்ணுயிர்கள் புழு பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நிலத்தினை வளமாகி விளைச்சல் அதிகரிக்க செய்கிறது.
ரசாயனம் என்னும் நஞ்சு
நாம் அதிக மகசூல் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் ரசாயன கலந்த உரங்களையும், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தியத்தின் விளைவு, நிலங்களின் உயிர்ப்பு தன்மை எல்லாம் மறைந்து விட்டது. நாம் விளைவித்த சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கால்நடைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று பசுக்களில் இருந்து பெறப்படும் பால் ரசாயனம் கலந்ததாக கூறப்படுகிறது.
விடுபடுவது எப்படி?
முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், பூமியில் இருந்து பெறப்படும் அனைத்தும் பூமிக்கு மட்டுமே செல்ல வேண்டும். வேளாண் கழிவுகள், கால்நடை கழிவுகள் பூமிக்கு செல்லும் போது அது உயிர் பெறுகிறது. ஆம் ஆட்டுப் புழுக்கை, மாட்டு சாணி, கோழிக் கழிவு மற்றும் காய்ந்த இலை தழைகள், கோமியம் தெளிச்சு இயற்கையான கம்போஸ்ட் உரம் நமக்கு கிடைத்து விடும். தாவர வளர்ச்க்கு உதவும் நுண்ணுயிர்களுக்கு தேவையானது பூமிக் கழிவுகள் மட்டுமே.
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் , திரு.சுபாஷ் பாலேக்கர் போன்றவர்களின் அறிவுரைகளை ஏற்று மீண்டும் இயற்கை விவசாயத்தை கையில் எடுப்போம். நம் எதிர்கால சந்ததியினருக்காக இயற்கை விவசாயத்தை ஆதரிப்போம். இன்றைய சூழ்நிலையில் அவசியமானது மட்டுமல்ல அவசரமானதும் கூட..
Anitha Jeagdeesan
Krishi Jagran
Share your comments