TNAU- வின் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை சேர்ந்த முனைவர் மு.கவிதா, முனைவர் சி.தங்கமணி, முனைவர் ந.ஆ.தமிழ்செல்வி மற்றும் பி.பவித்ரா ஆகியோர் இணைந்து குழித்தட்டு நாற்றங்கால் வளர்ப்பு முறையில் உள்ள நன்மைகள் என்ன? என்பது குறித்து பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்கள். அவற்றின் விவரம் பின்வருமாறு-
தற்பொழுது வளர்ந்து வரும் உயர் தொழில்நுட்ப முறை மற்றும் இயந்திரங்கள் கொண்டு அறுவடை செய்தல் முதலிய தேர்ந்த சாகுபடி முறைகளின் காரணத்தால் விவசாயிகளும், நாற்று உற்பத்தியாளர்களும் சிறந்த முளைப்புத் திறனையும், வீரியமான நாற்றுக்களையும் உற்பத்தி செய்ய வேண்டும் என்று விரும்புகின்றனர்.
நாற்றுகள் உற்பத்தி- 4 முக்கிய நிலைகள்:
காய்கறி நாற்றுக்கள் பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது. அவை நீர், வெப்பநிலை, சூரிய ஒளி, செல்லின் அளவு (Protray cell size) மற்றும் நாற்றங்கால் கூடத்தில் வைக்கப்படும் காலத்தின் நாட்கள் முதலியன ஆகும். காய்கறி நாற்றுக்கள் உற்பத்தி செய்வதற்கு முன்பு சில முக்கியமான காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். அவை (1) தேர்ந்தெடுக்கப்படும் இரகம், (2) விதையின் தரம் மற்றும் அவற்றை கையாளும் முறை, (3) நாற்றுகளின் வளர்ப்பு முறை.
நாற்றுக்கள் உற்பத்தியில் நான்கு முக்கிய நிலைகள் உள்ளன. அவற்றில் முதல் இரண்டு நிலைகள் விதையின் முளைப்புத் திறன் மற்றும் முளைவிடுதலுக்கு அடிப்படையாக அமைகிறது. முதல் நிலை என்பது விதை விதைத்தல் மற்றும் ஊடகத்தை சரியாக நீர்கொண்டு ஈரப்படுத்துதல் மூலமாக வேரின் வளர்ச்சி தொடங்குவதோடு முளைவிடுதலுக்கும் காரணமாகிறது. இரண்டாம் நிலையானது வேர் நன்கு நீண்டு வளர்வது மற்றும் வித்திலைகள் நன்கு விரிவடைந்து வளரும் வரை நீடிக்கும்.
மூன்றாம் நிலையில் வேர்கள் நன்கு கிளை விட்டு வளர்வதும், உண்மையான வித்திலைக்குப்பின் வரும் முதல் இலைகள் நன்கு வளர்வதும் அடங்கும். இதுவே நாற்றின் ஆரம்பகட்ட வளர்ச்சி நிலை எனக் கொள்ளலாம். நான்காம் நிலையை பொதுவாக நாற்றுக்களை பதப்படுத்தும் நிலை எனலாம். (நடவுக்கு முன் செய்ய வேண்டிய நாற்றங்கால் நேர்த்தி எனலாம்).
ஒவ்வொரு நிலையில் இருந்தும் மாறும்போது நாற்றுக்களுக்கு தேவைப்படும் ஈரப்பதம் மற்றும் வெப்பநிலையைக் குறையச் செய்வதும், சூரிய ஒளி மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை அதிகரிக்கச் செய்வதுமாக இருக்கும்.
மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை:
தற்போது நடைமுறையில் பின்பற்றப்படும் நாற்றங்கால் வளர்ப்பு முறை என்பது விதைகளை தட்டுக்களில் அல்லது மேட்டுப்பாத்திகளில் முளைவிட்டு சிறிய நாற்றுக்களாக வளர்ந்து பின்பு நடவு வயலில் நடவு செய்தல் ஆகும்.
மேட்டுப்பாத்தி முறையைப் பின்பற்றுவதால் நாற்றுக்கள் அதிகமான எண்ணிக்கையில் சேதமடைவதும், நாற்றுக்களின் வளர்ச்சி பெரிதும் பாதிப்படைவதும், வேரின் வளர்ச்சி குறைந்தும் மேலும், நடவு வயலில் ஏற்படும் அதிர்ச்சியின் காரணமாக அதிக எண்ணிக்கையில் நாற்றுக்கள் அழியும். ஆனால் குழித்தட்டு நாற்றங்கால் வளர்ப்பு முறையில் ஒவ்வொரு நாற்றும் தனித்தனி சிறிய கொள்கலனில் தனியாக வளர்க்கப்படுவதால் கட்டுக்கோப்புடன் இருப்பதோடு வேரின் வளர்ச்சியும் சீராக அமையும் எனவும் வேளாண் துறை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நேர்த்தியான பயிர் வளர்ச்சி நிலையின் மூலமே அதிக மகசூல் பெறமுடியும் என்று வேளாண் பெருமக்கள் நம்பும் நிலையில், விதைகளை சேமிக்கும் முறைகளினால் கூட விதையின் முளைப்புத் திறன், விதையின் ஆயுள் மற்றும் நாற்றுக்களின் வீரியத் தன்மை பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more:
உதிரும் இலைச் சருகுகளை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?
சித்திரை பட்டத்திற்கேற்ற எள் இரகங்கள் என்ன? எது கைக்கொடுக்கும்?
Share your comments