விழுப்புரம் அருகே தரமற்ற விதையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் (Paddy Crops) பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்பயிர் சாகுபடி
விழுப்புரம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இந்த ஆண்டு சொர்ணவாரி பருவத்தில் பல ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி (Paddy Cultivation) செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் அருகே காணை வட்டாரத்தில் அத்தியூர்திருக்கை, அனந்தபுரம், கொசப்பாளையம், அனுமந்தபுரம், அடுக்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், 100 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சன்னரக நெல் விதையை விதைத்துள்ளனர்.
விவசாயிகள் வேதனை
பின்னர் அதிக மகசூல் (High Yield) தரும் என்ற ஆவலோடு விவசாயிகள், வயலில் நடவுப் பணிகளை முடித்தனர். நடவு செய்த 45 முதல் 50 நாட்களில் நெற்பயிரில் கதிர்கள் வரத்தொடங்கும். ஆனால் 60 நாட்களாகியும் இதுநாள் வரையிலும் அந்த பயிரில் கதிர்கள் வரவில்லை. மேலும் நோய் தாக்குதலால் நெற்பயிர்கள் பாதிப்படைந்து காய்ந்து வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
இழப்பீடு வழங்க கோரிக்கை
இதுபற்றி அவர்கள் கூறுகையில், விழுப்புரம், அன்னியூர், கண்டாச்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விதை நெல் (Paddy Seed) விற்பனை கடைகளில் இருந்து விதை நெல்லை வாங்கி 100 ஏக்கர் பரப்பளவில் சன்னரக நெல் சாகுபடி செய்தோம். இதற்காக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்தோம். ஆனால் நடவு செய்யப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் இதுநாள் வரையிலும் கதிர்கள் வரவில்லை. தரமற்ற விதைகளை விற்பனை செய்து எங்களை ஏமாற்றி விட்டனர். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் (Loss) ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் நேரில் வந்து பயிர்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
விதை நிறுவனங்கள், விற்பனை கடைகளில் தரமற்ற நெல் விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்து நம்பிக்கை மோசடி செய்துள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர், உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாய கிராமத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும் படிக்க
நீர் மேலாண்மை பணிகளுக்கு மானியம்! விவசாயிகளுக்கு அழைப்பு!
தென்னை மரங்களை தாக்கும் கூன் வண்டுகளை கட்டுப்படுத்த கவர்ச்சி பொறி! வேளாண் துறை தகவல்
Share your comments