காங்கயத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பி.ஏ.பி., விவசாயிகள் ஆயிரம் பேர், வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக 50 இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். மற்றவர்கள் விரைவில் செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் தொகுதியில், 1,000 வேட்பாளர்களை நிறுத்த காங்கயம் - வெள்ளகோவில் பி.ஏ.பி., நீர்ப்பாசன பாதுகாப்பு குழு திட்டமிடப்பட்டுள்ளது. காங்கயத்தில், இக்குழு சார்பில், தேர்தல் பணிமனை திறக்கப்பட்டது. வேட்புமனுக்களை முதல் கட்டமாக, 50 பேர் இன்று தாக்கல் செய்ய உள்ளனர்.
பாசன நிலங்களில் தண்ணீர் பற்றாக்குறை
இந்த குழுவினர் கோரிக்கை குறித்து தெரிவிக்கையில், பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் (பி.ஏ.பி.,) நான்காவது மண்டலத்தில், வெள்ளகோவில் கிளை வாய்க்கால் மூலம், 48 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி தரப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது. மொத்தம் 135 நாட்கள், ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் பாசன நிலங்களுக்கு நீர் தரப்பட வேண்டும்; ஆனால், 135 நாட்களில், மூன்று முறை, தலா மூன்று நாட்கள் மட்டுமே தண்ணீர் தரப்படுகிறது. பாசன நிலங்கள் முழுமைக்கும், இதைக் கொண்டு, சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது.
தண்ணீர் திருடப்படுகிறது
இதற்கு காரணம், இங்கு நீர் வருவதற்கு முன்னதாகவே திருடப்படுகிறது. முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், முறையாக தண்ணீர் திறக்க கோரியும், காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டோம். எங்கள் கோரிக்கைகளுக்காக, இத்தொகுதியில், 1,000 விவசாயிகள் போட்டியிட உள்ளோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
ஓட்டு சீட்டு முறை வருமா?
கடந்த 1996ல், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதியில், மத்திய, மாநில அரசுகள் தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை எனக் கூறி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதேபோல், இப்போது காங்கயம் தொகுதியில் அதிகளவில் விவசாயிகள் போட்டியிட்டால், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த இயலாத நிலை ஏற்படும். இதனால், ஓட்டுச்சீட்டு முறையை பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
விவசாயிகளை பாதுகாக்க புதிய சட்டம் - காங்., தேர்தல் அறிக்கை வெளியீடு!!
Share your comments