நாடு முழுவதிலும் இருந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்காக சேதுபதி மன்னர்கள் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பல சத்திரங்கள் கட்டியுள்ளனர். இந்த சத்திரங்களில் பக்தர்களுக்கு உணவு வழங்கும் நோக்கில் ஆங்காங்கே நெற்களஞ்சியங்களையும் அமைத்துள்ளனர் சேதுபதி மன்னர்கள். இந்த நெற்களஞ்சியத்தை இரையாயிரம் கொண்டான் எனவும் அழைக்கின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்த சிறியவகை நெற்களஞ்சியங்கள் தற்போது அழிந்து விட்டன. 200 ஆண்டுகளாக மண்டபம் தோணித்துறை பகுதியில் இருக்கும் இந்த நெற்களஞ்சியமும் அழிவின் விளிம்பில் தான் உள்ளது.
தானிய சேமிப்பு கிடங்கு:
மண்டபம், ராமேஸ்வரம் பகுதியில் விவசாயம் இல்லாததால் சேதுநாட்டின் மற்ற பிற பகுதிகளில் இருந்து நெல் கொண்டு வரப்பட்டு இங்கு சேமித்து வைக்கப்பட்டது. இந்த சேமிப்பு கிடங்கு 15 அடி உயரமும் 50 அடி சுற்றளவும் கொண்டுள்ளது. கீழ் பகுதி அகன்றும் மேலே குறுகியும் காணப்படுகிறது. இதனை சுற்றி கட்டப்பட்டிருக்கும் சுவரானது சுமார் 3 அடி அகலத்தில் உள்ளது. மேலும் மழை மற்றும் கடல் காற்றால் பாதிக்காத வகையில் வட்டவடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.
கூம்பு வடிவில் இருக்கும் இதன் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதன் நடுப்பகுதியில் ஒரு சுவர் கட்டப்பட்டு இரு பகுதியாக பிரித்து கட்டியுள்ளனர். இதன் உள்ளே செல்ல வடக்கு பகுதியில் 3 அடி உயரமும் 2 அடி உயரத்தில் படி அமைத்து ஏறிச் செல்லும் வகையில் ஒரு வாசல் உள்ளது.
மேலும் படிக்க:
Share your comments