சென்னை மாநகரின் குடிநீர் தேவை பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. கிருஷ்ணா நதிநீர் (Krishna river water) ஒப்பந்தத்தின்படி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் மழைநீர் மூலம் இந்த ஏரிகளுக்கு தண்ணீர் வருகிறது.
பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு:
தற்போதைய சூழ்நிலையில் கண்டலேறு அணையில் போதிய அளவு நீர் இருப்பதால், கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான முதல் தவணை தண்ணீர், பூண்டி ஏரிக்கு (Poondi Lake) திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரும் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையும் (Northeast monsoon) தொடங்கி உள்ளது. முதல் நாளே மழை வெளுத்து வாங்கியது. நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. குறிப்பாக ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
பதிவான மழையின் அளவு:
பூண்டி ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் 49 மில்லி மீட்டரும், சோழவரத்தில் 55 மி.மீ., புழலில் 128 மி.மீ., செம்பரம்பாக்கத்தில் 14 மி.மீ., கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நம் மாநிலத்தில் நுழையும் பகுதியில் 39 மி.மீ., கொரட்டூர் அணைக்கட்டு பகுதியில் 7 மி.மீ., தாமரைப்பாக்கம் பகுதியில் 36 மி.மீ. என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது. மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் திறக்கப்பட்ட 416.16 கன அடி தண்ணீர் என பூண்டி ஏரிக்கு 884 கனஅடியும், சோழவரம் ஏரிக்கு 116 கன அடியும், புழல் ஏரிக்கு 971 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 460 கன அடியும் வந்து கொண்டு இருக்கிறது.
ஏரியில் இருப்பு நிலை:
நேற்றைய நிலவரப்படி, பூண்டி ஏரியின் இருப்பு 1,529 மில்லியன் கன அடியும் (1½ டி.எம்.சி.), சோழவரம் ஏரியில் 128 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் (Pulhal Lake) 2 ஆயிரத்து 94 மில்லியன் கன அடியும் (2 டி.எம்.சி.) மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் (Sembarambakkam Lake) 2 ஆயிரத்து 182 மில்லியன் கன அடியும் (2.1 டி.எம்.சி.) என மொத்தம் 5 ஆயிரத்து 933 மில்லியன் கனஅடியும் என அதாவது 6 டி.எம்.சி.யை தொட்டு உள்ளது. குடிநீர் (Drinking water) தேவைக்காக பூண்டி ஏரியில் இருந்து 824 கன அடி, புழல் ஏரியில் இருந்து 115 கன அடி, செம்பரம்பாக்கத்தில் இருந்து 60 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
உபரி நீர்:
புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து வருவதால் இன்னும் சில நாட்களில் ஏரி முழுகொள்ளளவை (Full capacity) எட்டிவிடும். செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினால் உபரிநீரை (Excess water) திறக்க அனைத்து மதகுகளையும் பராமரித்து தயார் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் 2 ஆயிரத்து 325 மில்லியன் கனஅடி (2.3 டி.எம்.சி.) இருப்பு இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரியவந்து இருப்பதால் ஏரிகளில் போதுமான தண்ணீர் நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளை தவிர்த்து புதிதாக அமைக்கப்பட்டு உள்ள கண்ணன்கோட்டை -தேர்வாய் கண்டிகை ஏரியிலும் மழை நீரை சேமிக்கும் (Saves rain water) பணியும் தொடங்கி உள்ளது.
குடிநீர்த் தேவைப் பூர்த்தி அடையும்:
சென்னை மாநகருக்கு மாதம் சராசரியாக 1 டி.எம்.சி. (TMC) தேவைப்படுவதால் தற்போதைய இருப்பு மூலம் அடுத்த 6 மாதத்துக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். தற்போது ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இனிவரும் நாட்களிலும் மழை பெய்து அதன் மூலம் மேலும் தண்ணீர் வந்து ஏரிகளில் சேமிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் 2021-ம் ஆண்டு கோடையில் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் வறட்சி இல்லாத கோடை காலமாக (Drought-free summer) இருக்கும் என பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக எனது தோழி நடவடிக்கை! இந்திய ரயில்வேயின் புதிய திட்டம்!
Share your comments