விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலை கிராமத்தில் சம்பங்கி மலர் சாகுபடியில் அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சம்பங்கி பூ சாகுபடி, சந்தைப்படுத்துதல் மற்றும் வருமானம் குறித்து தெரிந்து கொள்ள இந்த கிராமத்திற்கு சென்றிருந்தோம்.
8 வருடங்களாக சம்பங்கி பூ சாகுபடி செய்துவரும் குங்குமச்செல்வியிடம், சம்பங்கி பூ சாகுபடி குறித்து விரிவாக பேசினோம். அவர் கூறியதாவது, “தொடர்ந்து 8 வருடங்களாக சம்பங்கி சாகுபடி செய்து வருகிறேன். முதன் முதலில் 4 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரு ஏக்கர் பரப்பளவில் சம்பங்கி பூவை பயிரிட்டேன்.
சம்பங்கி பூவின் எந்த வகை சிறந்தது?
சம்பங்கியில் 6 வகைகள் உள்ளன. அதில் பிரஜ்வால் ரகம் நல்ல சாகுபடி தரும். பக்க கிளைகள் அதிகம் வந்தால் அதிக மொட்டுக்கள் வந்து அதிக பூக்கள் கிடைக்கும். பக்க கிளைகள் அதிகமாக வர செடியை நன்றாக பராமரிக்க வேண்டும். நன்கு வளர்ந்த மூன்று ஆண்டுகள் ஆன செடியில் இருந்து கிழங்குகள் எடுக்க வேண்டும்.
ஆடு எரு, வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை பயன்படுத்தி நிலத்தை நன்றாக பக்குவவப்படுத்தி ஒரு வாரம் காயவைத்து கிழங்குகளை ஊன்ற வேண்டும். அப்படி நட்டால் சரியாக 30-40 நாட்களுக்குள் கிழங்குகள் முளைக்கும். பாத்திகளுக்கு இடையே ஒன்றரை அடி இடைவெளி இருக்க வேண்டும். பின்னர் சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும்.
பூச்சி தாக்குதலை தடுக்க:
வேர் பூச்சி தாக்குதல் குறைப்பதற்கு சூடோமோனாஸ், டிரைகோடர்மா ஆகியவற்றை தண்ணீரில் கரைத்து தெளித்தால் பூச்சி தாக்குதலை தடுக்க முடியும். செம்பின் மாவு பூச்சி தாக்குதலுக்கு வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும்.
100% மானியத்தில் சொட்டு நீர் பாசனம்
தோட்டக்கலை துறை மூலம் சிறுகுறு விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க 100% மானியம் வழங்கப்படுகிறது. மேலும் பயிர் செய்வதில் ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வழிமுறைகளை தெரிந்து கொள்வதற்கு தோட்டக்கலை துறை அதிகாரிகளை நாடினால் தேவையான விவரங்களை வழங்குகின்றனர்.
மேலும் படிக்க:
Share your comments