ஆவின் நிறுவனம் புதிய ஐந்து பால் பொருட்களை அறிமுகம் செய்துள்ளது. இதனை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்துவைத்தார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லஸ்ஸி, மேங்கோ லஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் ஆவின் டீ மேட் பால் ஆகிய ஐந்து புதிய பொருட்களை முதல்வர் பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
ஆவின் நிறுவனம் (Aavin)
ஆவின் நிறுவனம் (Aavin) தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பால் மற்றும் பால் பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் தமிழகத்தில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. மேலும், வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கரீம் முதலான பால் பொருட்களையும் உயரிய தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. அத்துடன் நுகர்வோர்களின் தேவைக்கேற்ப புதிய பால் உப பொருட்களை அவ்வப்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ஆவின் நிறுவனத்தின் சார்பில் கீழ்க்காணும் ஐந்து புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர் (Aavin Butter which boosts immunity)
ஆவின் மோர் மற்றும் தயிர் மக்களிடையே பெரும் நன்மதிப்பை பெற்றுள்ளது. தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று காலக் கட்டத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி, உப்பு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பொருட்களை சேர்த்து புதிய ஆவின் மோர் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த மூலிகை சக்தி நிறைந்த மோர், உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியினை மேம்படுத்தும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இந்த மோர், அனைத்தும் தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் 200 மில்லி லிட்டர் பாட்டில் 15 ரூபாய்க்கு விற்கப்படும்.
சாக்கோ லஸ்ஸி மற்றும் மேங்கோ லஸ்ஸி (Choco Lassi and Mango Lassi)
ஆவின் நிறுவனம் சாதாரண லஸ்ஸி மற்றும் புரோ பையோடிக் என்ற இரண்டு வகை லஸ்ஸிகளை விற்பனை செய்து வருகிறது. மேலும், சாக்லெட் சுவைமிகுந்த சாக்கோ லஸ்ஸி மற்றும் மாம்பழச் சுவையுடன் கூடிய மேங்கோ லஸ்ஸி என்ற இரண்டு புதிய லஸ்ஸிகளை 200 மில்லி லிட்டர் பாட்டிலில் 23 ரூபாய் என்ற விலையில் தற்போது அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய லஸ்ஸி வகைகள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் மிகுந்த சுவையுடன் தயாரிக்கப்படுகின்றன.
நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால் (UTH Milk)
நுகர்வோர்களின் குறிப்பாக வேலைக்கு செல்லும் இல்லத்தரசிகளின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் நீண்ட நாட்கள் கெடாத வகையில் ஆவின் பால் அதிக வெப்பநிலையில் பதப்படுத்தப்பட்டு, பேக்குகளில் அடைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த பால் பாக்கெட்டுகளை குளிர்சாதன பெட்டியில் வைக்க தேவையில்லை. அறை வெப்பநிலையில் வைக்கும் பொழுது, 90 நாட்கள் வரை கெடாத வண்ணம் தயாரிக்கப்படுகிறது. இந்த பால் 4.5 சதவீத கொழுப்பு சத்து மற்றும் 8.5 %புரதச்சத்தும் கொண்டது. 500 மில்லி லிட்டர் பாக்கெட் 30 ரூபாய் என்ற விலையில் இந்தப் பால் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ஆவின் டீ மேட் பால் (TEA MATE)
உணவகங்கள், தேனீர் கடைகள், விடுதிகள் மற்றும் சமையல்கலை வல்லுநர்களின் தேவையினை கருத்தில் கொண்டு, அதிக கொழுப்பு சத்துக் கொண்ட டீ மேட் என்ற புதிய பால் அறிமுகப்படுத்தப்படுகிறது. 6.5% கொழுப்பு சத்தும், 9% புரதச்சத்தும் கொண்ட 1 லிட்டர் டீ மேட் பால் பாக்கெட்டின் விலை 60 ரூபாய் ஆகும். கொழுப்பு சத்து அதிகம் இருப்பதால், தேனீர் கடைகள் மற்றும் உணவகங்களில் அதிக அளவிலான டீ மற்றும் காபி தயாரிப்பதற்கு இந்த பால் உபயோகமாக இருக்கும்.
மேலும் படிக்க....
கொரோனா நெருக்கடியால் 80% வருவாய் இழப்பு - சிறு-குறு, நடுத்தர நிறுவனங்கள் தவிப்பு!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் - தமிழக அரசு!
குண்டாக இருக்கிறீர்களா? கவலை வேண்டாம்... இந்த ஆசனங்களை செய்தால் போதும்!
Share your comments