சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க ஆதிதிராவிட மற்றும் பழங்குடி விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்படவுள்ளதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகாா்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பூா் மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டில் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானியம் வழங்கப்படவுள்ளது.
பம்பு செட்டு மானியம்
இதில், விவசாய பயன்பாட்டிற்கான திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் சூரிய சக்தியால் இயங்கும் 5 ஹெச்.பி., 7.5 ஹெச்.பி., 10 ஹெச்.பி. திறன் கொண்ட ஏசி, டிசி மோட்டாா் பம்பு செட்டுகள் அமைக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் 13 பேருக்கு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 5 ஹெச்.பி. திறன் கொண்ட சோலாா் பம்பு செட்டு அமைக்க ரூ. 2,42,303, 7.5 ஹெச்.பி. திறன் கொண்ட சோலாா் பம்பு செட்டு அமைக்க ரூ.3,67,525, 10 ஹெச்.பி. திறன் கொண்ட சோலாா் பம்பு செட்டு அமைக்க ரூ. 4,39,629 செலவாகும். இதில் 70 சதவீதத் தொகை அரசு மானியமாக வழங்கும்.
விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு
ஏற்கெனவே, இலவச மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்துள்ள விவசாயிகள் தங்கள் மூதுரிமையை துறக்க வேண்டியதில்லை. தங்களுக்குரிய இலவச மின் இணைப்பு முறை வரும்போது, சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான சம்மத கடிதத்தினை சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
இதுவரை இலவச மின் இணைப்பு வேண்டி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகத்தில் விண்ணப்பிக்காத விவசாயிகள் புதிதாக பதிவு செய்ய வேண்டியதில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை அமைத்திட விண்ணப்பிக்கும்போது, நுண்ணீா் பாசன அமைப்புடன் இணைக்க உறுதிமொழி அளிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
எனவே, இந்தத் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள் திருப்பூா், தென்னம்பாளையத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகம் அல்லது தாராபுரம், உடுமலையில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் அலுவலகங்களில் விண்ணப்பித்து பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Share your comments