இலங்கையில் வெடித்துள்ளக் கலவரம் காரணமாக பதற்றத்தின் பிடியில் மக்கள் சிக்கியுள்ளனர். பல இடங்களில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. வன்முறையில் பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் அண்டைநாடான இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அன்னியச் செலாவணி பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கியிருந்த அந்நாட்டில் தற்போது அரசியல் நெருக்கடி முற்றியுள்ளது.
தப்பியோட முயற்சி
முன்னதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, பொதுமக்கள் ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் இலங்கை பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ராஜபக்சே கொழும்புவில் உள்ள அவரது அலறி மாளிகையில் இருந்து வெளியேறினார்.
அவர் உடல்நிலை தொடர்பான சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் மக்களை நம்ப வைப்பதற்காக இத்தகைய செய்திகளை உலா வரவிட்டுவிட்டு, போராட்டக்காரர்களின் கையில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக, ராஜபக்ஷே பத்திரமாக இந்தியாவிற்கு தப்பியோடிவிட்டதாகவும், இந்திய அரசிடம் தஞ்சம் அடைந்துவிட்டதாகவும், இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கவனம் இந்தியா திரும்பிள்ளது.
கலவரத்தின் உச்சக்கட்டமாகப் போராட்டக்காரர்கள் பிரதமர் ராஜபக்சேயின் வீடு மற்றும், முன்னாள் அமைச்சர்களின் வீடுகளைத் தீக்கு இரையாக்கினர். இலங்கை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அலுவலகம் தொழிற்சாலைகள், கார்கள் போன்றவற்றையும் தாக்கினர். ஆளுங்கட்சியினர் தப்பிவிடாமல் இருக்க விமான நிலையங்களில் போராட்டக்காரர்கள் சுற்றி வளைத்தனர்.
வெடித்தது கலவரம்
அதேநேரத்தில், பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததை தொடர்ந்து அதிபர் கோதபய ராஜபக்ஷே யின் ராஜினாமாவை வலியுறுத்தி போராட்டம் வெடித்துள்ளது. இலங்கை அரசு ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தேசம் முழுவதும் கலவரம் தொடர்வதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரயில் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கலவரம் நடக்கும் இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments