Credit : Indian Expess
மத்திய அரசால் இயற்றப்பட்ட மூன்று முக்கிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியுள்ளது என்றும், இச்சட்டங்களால் 10 கோடி விவசாயிகள் பயன் பெற்றிருப்பதாகவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் உறையாற்றினார். அப்போது பேசிய அவர், தற்போது நடைமுறையில் உள்ள உரிமைகளும், வசதிகளும், புதிதாக இயற்றப்பட்ட சட்டங்களின் காரணமாக, விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்தையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார். இந்த வேளாண் சீர்திருத்தங்கள் குறித்து நாட்டில் கடந்த 20 ஆண்டு காலமாக விவாதிக்கப்பட்டு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டுமென்ற கருத்து பல்வேறு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார். இக்கோரிக்கைகள் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின் போதும் பிரதிபலித்தது என்றும் அவர் கூறினார்.
வேளாண் சட்டங்கள் குறித்து புரிதல் ஏற்படுத்தப்படும்
இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று கூறிய குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றத்தின் முடிவை அரசு மதிக்கிறது என்றும், அந்த முடிவை ஏற்கும் என்றும் கூறினார். ஜனநாயகத்தின் மதிப்புக்கும், அரசியல் சாசனத்தின் புனிதத் தன்மைக்கும் அரசு உயர்ந்த மதிப்பளிக்கிறது என்று தெளிவுபடுத்திய குடியரசுத் தலைவர், இந்தச் சட்டங்கள் தொடர்பாக உருவாகியுள்ள தெளிவற்ற புரிதல்களைக் களைய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது என்று கூறினார்.
சுவாமிநாதன் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது என்றும், உற்பத்திச் செலவில் குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகக் குடியரசுத் தலைவர் கூறினார். அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையில் சாதனை அளவிலான விளைபொருட்களைக் கொள்முதல் செய்வது மட்டுமல்லாமல், கொள்முதல் மையங்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார்.
சிறு-குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்றும், இந்த விவசாயிகளுக்கு, செலவினங்களுக்காக ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது என்றும், இதற்காக, பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.
ஜன்தன் வங்கிக் கணக்குகள், ஆதார் அட்டை, அலைபேசி பயன்பாடு ஆகியவை மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க உதவுகின்றன. இந்த மூன்று திட்டங்களால் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய், தவறானவர்களின் கைகளில் சென்று சேராமல் காப்பாற்ற முடிந்துள்ளது என்றும், மேலும் பல்வேறு தகவல்கள் குறித்தும் பேசியுள்ளார்.
இந்த செய்திகளை படிக்க தவறவிடாதீர்கள்...
பயறு வகை பயிர்களில் தரமான விதை உற்பத்திக்கான தொழில் பயிற்சி
ஆதார விலையில் துவரை கொள்முதல் - கரூர் விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments