கடந்த சில நாட்களாக தமிழக மக்களை வாட்டி வதைத்து வந்த கத்திரி வெயில் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் வரும் நாட்களில் வெயில் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்திரி வெயில் (Agni Natchathiram)
இந்த ஆண்டு கோடை வெயில் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனிடையே, அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் கடந்த மே மாதம் 4-ஆம் தேதி தொடங்கியது. இந்நாட்களில் கடுமையா வெப்பம் தமிழக மக்களை வாட்டி வதைத்தது. குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், கரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது வெயில் அளவு சதம் அடித்தது. இந்நிலையில் இந்த கத்திரி வெயில் காலம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12 இடங்களில் 100+ டிகிரி பாரன்ஹீட் (Fahrenheit) வெயில்
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக திருத்தணியில் 105.8 டிகிரி பாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவானது . அடுத்தப்படியாக வேலூரில் 105.44, கரூர் பரமத்தியில் 104.9, மதுரை விமான நிலையத்தில் 104.3, திருச்சி, சேலத்தில் 102.3, பாளையங்கோட்டையில் 102.2, மதுரையில் 101.4, தர்மபுரியில் 100.7, காரைக்காலில் 100.5 பரங்கிப்பேட்டை நாமக்கலில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்தது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணிநேரத்திற்கு உள் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மழை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு இரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
Pic Courtesy: Asianet news tamil
வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும், இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் யாரும் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால், அடுத்த இரண்டு நாட்களுக்கு மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது..
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் வரும் 31ம் தேதி முதல் ஜூம் 4ம் தேதி வரை மீனவர்கள் யாரும் அரபிக் கடலின் ஆழ்கடல் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வரை வீசக்கூடும். இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். வடக்கு மற்றும் வடமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
Share your comments