அத்தியாவிசிய பொருட்களான காய்கறிகள் மற்றும் பழங்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வேளாண் துறை செயலர் தகவல் தெரிவித்துள்ளார்.
கரோனாவின் தடுப்பு நடவடிக்கைகளினால், காய்கறிகள்மற்றும் பழங்கள் வரத்து குறைந்து, அதேசமயத்தில், மாவட்டங்கள் தோறும் விளைந்த காய்கறிகள் தேக்கமடைந்துள்ளன. அன்றாடம் உபயோகிக்கும் தக்காளி,பச்சை மிளகாய், கத்திரி, வெண்டை, அவரை, கொத்தவரை, நூக்கல், கோஸ், பீன்ஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகி உள்ளன. எனினும் விற்பனைக்கு அனுப்பினால், உரிய விலை கிடைக்குமா என்ற அச்சமும் விவசாயிகளிடம் நிலவுகிறது. இத்தருணத்தை வியாபாரிகளும், கமிஷன் ஏஜன்டுகளும் சாதகமாக பயன்படுத்தி அவற்றின் விலையை, பல மடங்கு உயர்த்தியுள்ளனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அனைத்து மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகப் பிரிவினர் இணைந்து விவசாயிகளை நேரடியாக தொடர்பு கொண்டு, அவர்களிடம் உள்ள காய்கறிகளை, சந்தைகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி, தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.
காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டும், உரிய அனுமதி சான்றிதழ் வழங்க மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று ஊரடங்கு உத்தரவு நீங்கும் வரை இந்த முறை பின்பற்றப் பட வேண்டும் என வேளாண் துறை செயலர், ககன்தீப் சிங் பேடி, தோட்டக்கலைத் துறை இயக்குனர், சுப்பையன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
Share your comments