பழங்கள் என்றாலே எளிதில் அழுகக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். குறைந்த விளைச்சலின் போது அதிக விலையும், அதிக விளைச்சலின் போது குறைந்த விலையும் கிடைத்து வருகிறது. இதில், வரத்து அதிகரிக்கும் போது வணீக மேலாண்முறை முறைகளை கடைபிடித்து வாழைப்பழங்களை விற்பனை செய்யலாம் என வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் தனிபயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும் வாழை ரகங்கள் அதிகம் பயிரிடப்பட்டுள்ளன. வாழைகள், ஒரே நேரத்தில் அறுவடைக்கு வரும் போது, வரத்து அதிகரித்து, விலை கிடைக்காமல் போகும் வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க, வாழைத்தார்களை அறுவடை செய்து, சீப்புகளாக பிரித்து, பதப்படுத்தி சேமித்து வைத்து, வரத்து குறையும் போது விற்பனை செய்யலாம் என வேளாண் வணிக துறை தெரிவித்துள்ளது.
வாழைப்பழம் சேமிக்கும் முறை குறித்தும், அதில் மேற்கொள்ள வேண்டிய வேளாண் வணீக மேலாண்மை முறைகள் குறித்தும் வேளாண் வணிகத்துறை உதவி அலுவலர் குமார் கூறியுள்ளார்.
வாழைப்பழத்தில் வணிக மேலாண்மை முறைகள்
-
சீப்புகளாக பிரிக்கப்பட்ட வாழைக்காய்களின் அடிப்பகுதியில், மெத்தை விரிப்பு அல்லது கிராப்ட் பேப்பர் போன்றவை அடிபடாமல் இருக்க விரிக்க வேண்டும்.
-
காய்களின் மீது, குறைந்த அடர்வு கொண்ட பாலி எத்திலீன் காகிதம் கொண்டு மூடுவதால் மிதமான தட்பவெப்பநிலை கிடைக்க ஏதுவாகும்.
-
வாழைக்காய்களின் சேமிப்புக்காலத்தை அதிகரிக்க குளிர்விக்க வேண்டும். குலையினை அறுவடை செய்த, 10 - -12 மணி நேரத்தில் குளிர்விக்க வேண்டும்.
-
பெட்டிகளில் அடைக்கப்பட்ட காய்களை, 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 85 - -90 சதவீதம் ஈரப்பதமும் கொண்ட காற்றை வேகமாகச் செலுத்தி குளிர்விக்கலாம்.
-
வயல் வெப்பநிலையான, 30 - 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலிருந்து, 13 டிகிரிக்கு வாழைக்காய்களைக் கொண்டுவர குறைந்தது, 6-8 மணி நேரம் ஆகும்.
-
வெப்பநிலையில் கவனம் குளிர்விக்கப்பட்ட சீப்புகளை, சேமிப்பு அறைகளுக்கு கொண்டு சென்று சேமிக்கலாம். சேமிப்பு அறையில் நாள் முழுக்க, 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும், 85 - -95 சதவீதம் ஈரப்பதமும் இருக்க வேண்டும்.
-
வெப்பநிலை, 13 டிகிரிக்கு குறைந்தால், வாழைக்காய்களின் மேற்புறத் தோலில் நிறமாற்றம், நிறம் குறைதல், பழுக்காமல் போதல், சதைப்பகுதி பழுப்பு நிறமாதல் போன்ற குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
-
குறைந்தபட்சம், நான்கு வாரங்கள் வரை அனைத்து ரகங்களையும் இந்த முறையில் சேமித்து வைக்கலாம்.
-
குறைந்த வெப்பநிலையுடன் கூடிய கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் சேமித்து வைப்பதால் வாழையின் சேமிப்புக் காலத்தை மேலும் அதிகரிக்கலாம்.
ரொபஸ்டா ரக வாழைப்பழங்கள்
ரொபஸ்டா ரகத்தை அறுவடை செய்தவுடன், 4 - 5 நாட்கள், 5 சதவீதம் ஆக்ஸிஜன் மற்றும், 5 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடு அத்துடன், 12 - 13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருப்பதால், அதன் சேமிப்புக் காலம், 8 வாரங்கள் வரை நீட்டிக்கப்படுகின்றது.
பழுக்க வைத்தல்
பழுக்க வைத்தல்பெட்டி அல்லது பிளாஸ்டிக் கிரேட்களில் வைக்கப்பட்டிருக்கும் வாழைக் காய்கள், விற்பனைக்கு கொண்டு செல்லும் போது, பழுக்கும் அறைக்கு மாற்ற வேண்டும். ஒளி மற்றும் காற்றுப்புகா வண்ணம் இறுக்கமாக மூடப்பட்ட அறையில், 160 - 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், 85 - 90 சதவீதம் ஈரப்பதமும் இருக்குமாறு பராமரிக்கப்பட வேண்டும். 24 மணி நேரம் இவ்வாறு மூடி வைத்த பின், அறையினைத் திறந்து விடவும்.இதனால் பழுக்கும் முதல்நிலையில் வெளி வரும் எத்திலீன் வாயு, கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை அறையை விட்டு வெளியேற்றவேண்டும். அடுத்த, 3- -4 நாட்களுக்கு அறையின் வெப்பநிலை 8 - 15 டிகிரி செல்சியஸ்க்கு குறைக்கப்பட்டு பராமரிக்க வேண்டும். அப்போது, காய்கள் பழுக்கத் துவங்கும்.
மேலும் படிக்க..
பருத்தி, தேங்காய்க்கு மறைமுக ஏலம்! பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!
நெல்மணிகளை போரடிக்க மாடுகளுக்கு பதில் யானை! மதுரையில் பாரம்பரிய முறை மீட்டெடுப்பு!
குறைந்தது கருவேப்பிலை விலை! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்
Share your comments