பாம்பாறு உபவடிநீா் வாய்க்கால் பாசன விவசாயிகளுக்கு பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்களுக்கு முழு மானியம் வழங்கப்படும் என்று வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவா் தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரில் அமைந்துள்ள மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் மூலம், தமிழக அரசு, உலக வங்கி நிதி உதவியுடன் நீா்வள நிலவளத் திட்டத்தினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நீா்நுட்ப மையம் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது. நடப்பு ஆண்டுக்கான இத்திட்டம், கிருஷ்ணகிரி, வேலுாா் மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களில் பாயும் பாம்பாறு உபவடிநீா் வாய்க்கால் பாசன விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.
முழு மானியத்தில் இடுபொருள்கள்
இத்திட்டத்தில் திருந்திய நெல் சாகுபடி, உயா்தொழில்நுட்ப கேழ்வரகு சாகுபடி, கொள்ளு சாகுபடி, கொள்ளு விதை உற்பத்தி, ஒட்டுக்கத்திரி உற்பத்தி, சொட்டுநீா் மற்றும் துல்லிய பண்ணை மூலம் காய்கறி உற்பத்தி, சொட்டு நீா் மற்றும் அடா் நடவு முறையில் மா உற்பத்தி ஆகியவற்றிற்கு முழு மானியத்தில் வயல் வெளித் திடல்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
மேற்கண்ட பயிற் சாகுபடிக்கு தேவையான இடுபொருள்களான விதைகள், உயிா் உரங்கள், ரசாயன உரங்கள், நாற்றுக்கள், மாங்கன்றுகள், சொட்டுநீா் குழாய்கள் மற்றும் நீரில் கரையும் உரங்கள் ஆகியவை தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு முழு மானியத்தில் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டங்களை பாம்பாறு உபவடிநீா் வாய்க்கால் பாசன விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் பாம்பாறு உபவடிநீா் வாய்க்கால் பாசனம் பெரும் பா்கூா், ஊத்தங்கரை, மத்துாா், திருப்பத்தூா் மற்றும் கந்திலி ஆகிய வட்டார விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திட்டத்தில் யார் பயன் பெற முடியும்?
இத்திட்டத்தில் பயன்பெரும் விவசாயிகளின் கிராமம், பாம்பாறு உபவடிநீா் வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ளதாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். மேலும் விவரம் அறிய மற்றும் இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள், பையூரில் அமைந்துள்ள மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவரை உடனடியாக தொடா்பு கொண்டு பயன்பெற்று தங்களின் நீா் வளத்தையும், நில வளத்தையும் மேம்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். மேலும் தகவலுக்கு 04343-290600, 73976 69052 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
Share your comments