சூரஜ் என்ற இளைஞர், பெங்களூரு அருகில் நவீன தொழில் நுட்பத்தில் 15 ஏக்கரில் மாந்தோட்டம் அமைத்து மாம்பழங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.
சூரஜ் எஞ்சினியரிங் முடித்துவிட்டு விப்ரோ, நோக்கியா உள்பட பன்னாட்டு நிறுவனங்களில் 20 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், பெங்களூரு அருகில் 15 ஏக்கர் நிலம் வாங்கி அடர் நடவுமுறையில் மாந்தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.
பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்தபோது அடிக்கடி ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற கண்டங்களில் வேலை செய்ய வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அப்போது ஐரோப்பாவில் நவீன முறையில் திராட்சை விவசாயம் செய்வதை பார்த்து, இந்தியாவில் இது போன்று விவசாயம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தவர் களத்தில் இறங்கினார்.
இது குறித்து சூரஜ் கூறுகையில், "எனது தந்தை கடற்படையில் பணியாற்றினார். அதனால் நான் அடிக்கடி இந்தியா முழுவதும் செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது. இதனால் எனக்கு விவசாயம் குறித்து எதுவும் தெரியாது. விவசாய நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய போது ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று திராட்சை விவசாயம், ஒயின் தயாரிப்பு போன்றவை குறித்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு திராட்சைகள் மிகவும் நெருக்கமாக அதேசமயம் மிகவும் நேர்த்தியாகவும் வளர்க்கப்பட்டது.
செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து நவீன முறையில் வழங்கப்பட்டது என்னை மிகவும் ஈர்த்தது. இதே முறையில் மாமரங்களை வளர்த்தால் என்ன என்று நினைத்தேன். அதன் தொடர்ச்சியாகத்தான் பெங்களூரு அருகில் 2018-ம் ஆண்டு 15 ஏக்கர் நிலம் வாங்கி மரக்கன்றுகளை நடவு செய்தேன்.
அதுவும் மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் மட்டுமே விளையக்கூடிய அல்போன்சா மாமரக்கன்றுகளை வாங்கி வந்து நடவு செய்தேன். வழக்கமாக ஒரு ஏக்கரில் 50 முதல் 80 மாமரக்கன்றுகளை மட்டுமே நடவு செய்ய முடியும். ஆனால் நான் ஒரு ஏக்கரில் 1450 மரக்கன்றுகள் வீதம் 15 ஏக்கரில் 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். ஒரு மரத்திற்கும் மற்றொரு மரத்திற்கும் இடையில் 3 அடி இடைவெளியும், வரிசைக்கு வரிசை 7 அடி இடைவெளியும் விட்டு அடர் நடவு முறையில் மரங்களை நட்டு இருக்கிறேன்.
2021-ம் ஆண்டு Mango Maze என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறோம். இந்திய மாம்பழங்களை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்லவேண்டும் என்பதே எனது விருப்பம்.
ஐரோப்பிய ஒயின் போன்று இந்திய மாம்பழங்களை கொண்டு செல்லவேண்டும். இந்தியா மாம்பழ விளைச்சலில் முன்னணியில் இருந்தாலும் ஏற்றுமதியில் இன்னும் பின் தங்கித்தான் இருக்கிறோம். 10 முதல் 12 சதவீத மாம்பழங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கு தரம் தான் பிரச்னையாக இருக்கிறது.
Share your comments